Last Updated : 05 Apr, 2018 10:53 AM

 

Published : 05 Apr 2018 10:53 AM
Last Updated : 05 Apr 2018 10:53 AM

துளி சமுத்திரம் சூபி 24: இரவுகளைத் துயிலால் சுருக்காதீர்கள்

ரானில் இருந்த ராய் எனும் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரத்தில் யஹ்யா இப்னு மஆத் 830-ம் ஆண்டு பிறந்தார். அவருடைய இளமைப் பருவம் முழுவதும் அந்நகரில்தான் கழிந்தது. அங்கு ஆன்ம விசாரணையில் ஈடுபட்டு மெய்ஞானத்தில் மூழ்கி நீந்தும்போது வழிமறித்த சில கேள்விகள் அவரை பால்க் நகருக்கு அழைத்துச் சென்று அவர் வாழ்க்கையின் போக்கை மாற்றியமைத்தன. அங்கு அவர் சந்தித்த ஞானிகள் அவருக்குள் என்றும் மறையாதவண்ணம் ஞான ரசத்தை அள்ளி ஊற்றி அவரை மெய்ஞானத்தில் என்றும் திளைத்திருக்கும்படி செய்தனர்.

தன்னிடமிருந்த எதையும் அவர் தனக்கென்று வைத்துக் கொள்ளவில்லை. கேட்கும் அனைவருக்கும் வேண்டிய ஞானத்தைக் கொடுத்தார். வறுமையில் வாடியோர்க்குச் சொத்தையும் உடைமையையும் பகிர்ந்து கொடுத்தார். கொடுப்பதற்கு எதுவுமில்லை என்ற நிலை வந்தபின், பணத்தையும் மற்றவர்களிடமிருந்து இரவல் வாங்கிப் பிறருக்குக் கொடுத்தார்.

ஏன் தர வேண்டும்?

என்னதான் ஞானியாக இருந்தாலும், கடன் கொடுத்தவர்களைப் பொறுத்தவரை இவர் கடனாளிதானே. கடன் கொடுத்தவர்கள் ஒரு நாள் மொத்தமாக வந்து அவரிடம் கடனைத் திரும்பிக் கேட்டார்கள். யஹ்யாவுக்கு எப்போதும் தன்னிடம் உதவி பெற்றவர்களிடமிருந்து கொடுத்ததைத் திரும்பிக் கேட்கும் பழக்கம் கிடையாது. ஆதலால், பணத்தைத் திரும்பிக் கேட்கும் அவர்களின் செயல் யஹ்யாவுக்கு விநோதமாக இருந்தது. ஏன் கேட்கிறார்கள் என்று புரியாததால் ஏன் தர வேண்டும் என்று கேட்டார்,

வேதனைப்படும்வண்ணம் சற்றுக் கடுமையான சொற்களால் யஹ்யாவுக்குக் காரணம் எடுத்துரைக்கப்பட்டது. அப்போதுதான் தான் மீள முடியாத கடனில் மூழ்கியிருப்பது அவருக்குப் புரிந்தது. தன்னிடம் கொடுப்பதற்குத் தற்போது எதுவுமில்லை என்று சொன்ன யஹ்யா, சற்று அவகாசம் கேட்டார். கொடுத்த பணம் நிச்சயம் வந்து சேரும் என்று சொல்லி அவர்களை அனுப்பிவைத்தார்.

அன்றிரவு அவர் தூங்கவில்லை. சிந்தனையில் ஆழ்ந்து இருந்தவருக்கு, காலையில் பொழுதும் புலர்ந்தது; அவருக்குப் புது வழியும் புலர்ந்தது. தன் மகனை அழைத்துக்கொண்டு நிஸாப்பூருக்குப் பயணப்பட்டார். அங்கே சென்றவர், மக்கள் கூடும் இடத்தில் நின்று தன் முதல் உரையை நிகழ்த்தினார். “உங்கள் இரவுகள் நீளமானவை அவற்றை உங்கள் துயிலால் சுருக்காதீர்கள். உங்கள் பகல்கள் தூய்மையானவை அவற்றை உங்கள் பாவங்களால் அசுத்தப்படுத்தாதீர்கள்” எனத் தொடங்கும் அந்த உரையும் அது வெளிப்படுத்திய கருத்துகளும் அந்த மக்கள் அதுவரை அறிந்திராதவை; உணர்ந்திராதவை.

மெய் மறந்த நிலையில் அந்த மக்கள் கூட்டம் ஆன்மிகப் பெருவெள்ளத்தில் மிதக்கத் தொடங்கும்போது, தன் உரையை யஹ்யா நிறுத்தி, தான் யார் என்பதையும், தான் கடனாளி ஆன கதையையும் கூறினார். அங்கிருந்த மக்கள் போட்டி போட்டு அவருக்குப் பணத்தை வாரி வழங்கினர். அந்தப் பணம் யஹ்யாவின் தேவையை மிஞ்சியது. தேவைக்கு மிஞ்சியதை அங்குள்ள எளியோருக்கும் ஞானிகளுக்கும் தன்னுடைய மகனின் ஆட்சேபனையை மீறி வாரி வழங்கியபின் சொந்த ஊருக்குப் பயணப்பட்டார்.

தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டன

ஆனால், ஊருக்குச் செல்லும் வழியில் அவரிடமிருந்த பணம் கொள்ளைபோனது. மிகுந்த வேதனைக்கு உள்ளாகி செய்வதறியாது நின்றபோது, அந்நாட்டு இளவரசியால் மீண்டும் அவர் நிஸாப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இளவரசியின் வேண்டுகோளின்படி நான்கு நாட்கள் அங்கு உரையாற்றினார். அனைவரின் மனதினுள்ளும் ஞானச்சுடரை ஒளிரச் செய்துவிட்டு மீண்டும் கிளம்பும்போது இளவரசி வெகுமதிகளை வழங்கி யஹ்யாவின் உலக தேவைகளைப் பூர்த்தி செய்தார்.

ஊருக்குத் திரும்பும் வழியில் யஹ்யா தன் மகனுக்கு “அகங்காரத்தை வெட்டி வீழ்த்துவதற்கு நான்கு வாள்கள் உள்ளன. அவை குறைவாக உண்பதும் குறைவாகத் தூங்குவதும் குறைவாகப் பேசுவதும் பிறர் சீண்டும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பதும் ஆகும். அந்த வாள்கள் உன்னிடம் இருந்தால் போர்க்களத்தில் தோற்று ஓடும் வீரனைப் போன்று அகங்காரத்தைப் புறமுதுகிட்டு நீ ஓடச் செய்யலாம்” என்று புத்திமதி சொன்னவர்,சொந்த ஊருக்குத் திரும்பாமல் தன்னுடைய மீளாத பயணத்தைத் தனித்து மேற்கொண்டார். யஹ்யாவின் மகன் மட்டும் தனியாகப் பணத்தோடும் ஊருக்கு வந்து கடனை அடைத்தார்.

“மரணம் மட்டும் கடையில் விற்கப்படுமாயின் அதை வாங்கும் முதல் மனிதன் நானாகத்தான் இருப்பேன்” என்று சொல்லுமளவுக்கு இறைவனுள் தன்னையிழப்பதற்குப் பேராவலுடன் தன் வாழ்நாள் முழுவதும் அவர் காத்துக்கொண்டிருந்தார். அவருடைய ஆவல் ஓரளவு பூர்த்தியானது என்றுதான் சொல்ல வேண்டும். ஆம், உலகில் அதிக காலம் அவர் வாழவில்லை. உலகம் நம்மை விட்டு விலகும் முன் அதை விட்டுச் செல்லும் பாக்கியத்தைவிடப் பெரிய பாக்கியம் ஏதும் உண்டோ என்று கேட்டவரின் இவ்வுலக வாழ்வு சரியாக அவருடைய 41-ம் வயதில் 871-ம் ஆண்டு முடிவு பெற்றது. ஆனால், அவர் ஆற்றிய உரைகளும் இயற்றிய புத்தகங்களும் இன்றும் மனிதர்களுடைய இதயத்துக்குள்ளே ஒளியைப் பாய்ச்சுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x