Published : 08 Apr 2024 05:20 AM
Last Updated : 08 Apr 2024 05:20 AM

சமயபுரம் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நேற்று நடைபெற்ற சித்திரை தேர்த் திருவிழா கொடியேற்றம். (உள்படம்) கிராம்பு, ஏலக்காய் மாலையுடன் சிறப்பு கேடயத்தில் உற்சவ அம்மன். படங்கள்: ர.செல்வமுத்துகுமார்

திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயில்சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்.16-ம் தேதி நடைபெற உள்ளது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா விமரிசையாக நடைபெறும். இதையொட்டி, மாசி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை முதல் பங்குனி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை 28 நாட்கள் அம்மன் பச்சை பட்டினி விரதம் இருப்பது தனிச் சிறப்பாகும்.

இந்த விரதம் பூரணமடைந்த வுடன், சிவபெருமானிடம் உள்ள சர்வ சக்தியையும் பெற்று படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருள்பாலித்தல் ஆகிய 5 தொழில்களையும் செய்து, சித்திரைப் பெருவிழா நாட்களில் அம்மன் அருள்புரிவதாக ஐதீகம்.

அந்தவகையில், நிகழாண்டுக்கான சித்திரைத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, மூலவர் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, உற்சவ அம்மன், கிராம்பு, ஏலக்காய் மாலையுடன் சிறப்பு கேடயத்தில் புறப்பாடாகி, தங்கக் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர், நேற்றிரவு அம்மன் கேடயத்தில் எழுந்தருளி கோயிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழா நாட்களில் தினமும் காலை, இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் கோயிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 16-ம் தேதி நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுப்பார்கள். வரும் 19-ம் தேதி தெப்ப உற்சவம் நடைபெறும்.

விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் கோயில் பணியாளர்கள், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x