Published : 19 Apr 2018 11:04 AM
Last Updated : 19 Apr 2018 11:04 AM
ந
மக்கு அநேக சந்தர்ப்பங்களில் கோபம் வருகிறது. முக்கியமாக இரண்டு விதங்களில் கோபம் வருகிறது. ஒருவன் ஒரு தப்புக் காரியம் செய்தால், அவனிடம் கோபம் ஏற்படுகிறது. அல்லது ஒருவன் நம்மைத் தூஷித்தால் அவனிடம் கோபம் வருகிறது. யோசித்துப் பார்த்தால் எவரிடமும் இந்த இரண்டு விதங்களிலும் கோபப்படுவதற்கு நமக்கு யோக்கியதை இல்லை என்று தெரியும்.
ஒருவன் தப்புப் பண்ணுகிறான் என்றால் கோபம் கொள்கிறோமே, அப்படியானால் நாம் தப்புப் பண்ணாதவர்களா? ஒருவனைப் பாவி என்று துவேஷிக்கும்போது, நாம் அந்தப் பாவத்தைப் பண்ணாதவன்தானா என்று நினைத்துப் பார்க்க வேண்டும். காரியத்தில் பண்ணாவிட்டாலும் மனசால் பண்ணியிருப்போம். நாம் அநேக தப்புகளை, பாவங்களைப் பண்ணிக்கொண்டேதான் இருக்கிறோம். நம்மைவிடப் தப்பும் பாவமும் பண்ணுகிறவர்களும் இருக்கலாம். நம் மனசு ஏதோ ஓர் அளவுக்குப் பக்குவம் அடைந்திருப்பதால் நாம் இந்த அளவு பாவத்தோடு நிற்கிறோம். அவனுடைய மனசுக்கு இந்தப் பக்குவம்கூட வராததால் இன்னும் பெரிய பாவம் பண்ணுகிறான். நாம் செய்கிற தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கு எத்தனை பாடுபட வேண்டியிருக்கிறது? நம்மையும்விட மோசமான நிலைக்கு இறங்கிப் பாவங்களைச் செய்யப் பழகிவிட்ட இன்னொருத்தனின் மனசுக்கு அதிலிருந்து மீளுவது சிரமமான காரியம்தான்.
ஆத்மாவின் அபிவிருத்தி
அப்படிப்பட்டவனோடு நாம் சேர்ந்திருக்க வேண்டும் என்பதில்லை. அஸத் ஸங்கத்தைவிட்டு ஸத் ஸங்கத்தில் சேர்வதுதான் ஆத்மாவின் அபிவிருத்திக்கு முதல் படி என்று சகல சாஸ்திரங்களும் சொல்கின்றன. ஆனால் பாவிகளை நாம் வெறுப்பதிலும் அவர்களைக் கோபிப்பதிலும் பயனில்லை. அவர்களுடைய மனசும் நல்ல வழியில் திரும்ப வேண்டும் என்று பிரார்த்திப்பதொன்றே நாம் செய்ய வேண்டியது. ஈசுவர அநுக்கிரகத்தில் நம்மில் யாருக்காவது அநுக்கிரக சக்தி கிடைத்திருந்தால், அதை இந்தப் பாவிகள் கடைத்தேறுவதற்கே உபயோகிக்க வேண்டும்.
நம் கோபம் எதிராளியை மாற்றாது. அவனுக்கும் நம்மிடம் கோபத்தை வளர்ப்பதுதான் அதன் பலன். இரண்டு பக்கங்களிலும் துவேஷம் வளர்ந்துகொண்டே போகும். ஒருத்தன் தன் தப்பைத் தானே உணர்ந்து திருந்தச் செய்யாமல், நம் கோபத்துக்குப் பயந்து சரியாகச் செய்வதில் நமக்குப் பெருமையில்லை. இது நிலைத்தும் நிற்காது. அன்பினாலேயே பிறரை மாற்றுவதுதான் நமக்குப் பெருமை. அதுதான் நிலைத்து நிற்கும்.
ஒருத்தன் பாவம் செய்ய அவனுடைய மனசு, சந்தர்ப்பம் இரண்டும் காரணமாகின்றன. நாம் பல பாவங்களைச் செய்ய முடியாமல் சந்தர்ப்பமே நம்மைக் கட்டிப் போட்டிருக்கலாம். எனவே, ஒரு பாவியைப் பார்க்கும்போது, ‘அம்பிகே! இந்தப் பாவத்தை நானும்கூடச் செய்திருக்கலாம். ஆனால் அதற்குச் சந்தர்ப்பம் தராமல் நீ கிருபை செய்தாய். அந்தக் கிருபையை இவனுக்குச் செய்யம்மா’ என்று பிரார்த்திக்க வேண்டும்.
கோபிக்க என்ன நியாயம்
இரண்டாவதாக, நம்மை ஒருத்தர் துவேஷிக்கிறார் என்று கோபம் கொள்ள வேண்டியதில்லை. நாம் எத்தனை தூஷணைக்குத் தக்கவர் என்பது நம் உள்மனசுக்குத் தெரியும். ஒருகால் நம்மை தூஷிக்கிறவர் நாம் செய்யாத தவறுக்காக நம்மைத் திட்டிக் கொண்டிருக்கலாம். ஆனால் நாம் செய்த தவறுகள் அதைவிடப் பெரியவை என்றும் நம் அந்தரங்கத்துக்குத் தெரியும். நம் தவறுகளைக் கழுவிக்கொள்வதற்காக ஒவ்வொரு நாளும் அம்பாளிடம் பச்சாதாபத்துடன் அழ வேண்டிய நிலையில்தான் இருக்கிறோம். இந்த நிலையில் உள்ள நாம், பிறரைத் தப்புகண்டுபிடித்து கோபிக்க நியாயம் ஏது?
‘நாம் தப்பே செய்யவில்லை என்றால், அப்போது பிறரைக் கோபிக்கலாமா?’ என்றால் இப்படித் தப்பே பண்ணாத நிலையில் நாம் அன்பு மயமாகிவிடுவோம். அப்போது நமக்குப் பாவியிடமும் கருணை தவிர, எந்தப் பாவனையும் இராது. கோபமே உண்டாகாது. நாம் தப்புச் செய்தவர்கள் என்றாலோ, நமக்குப் பிறரைக் கோபிக்க யோக்கியதை இல்லை. தப்பே பண்ணாத நிலையிலே எல்லாம் அம்பாளின் லீலைதான் என்று தெரிகிறது. லீலையில் யாரை பூஷிப்பது, யாரைத் தூஷிப்பது? எப்படிப் பார்த்தாலும் கோபம் கூடாதுதான்.
மனுஷனைப் பாவத்தில் அழுத்துகிற இரண்டு பெரும் சக்திகள் காமமும் குரோதமும் என்றார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா. அதாவது நம் கோபத்தால் நமக்கேதான் தீங்கு செய்து கொள்கிறோம். பெரும்பாலும் நம்முடைய கோபத்தை எதிராளி பொருட்படுத்துவதே கிடையாது. ஆத்திரப்படுவதால் நாமே நம் சரீரம், மனசு இரண்டையும் கெடுத்துக் கொள்வதோடு சரி. அன்பாக இருப்பதுதான் மனிதன் ஸ்வபாவமான தர்மம். அதுதான் ஆனந்தமும். அன்பு நமக்கும் ஆனந்தம், எதிராளிக்கும் ஆனந்தம். அன்பே சிவம் என்பார்கள். நாம் எல்லோரும் அன்பே சிவமாக அமர்ந்திருக்கப் பிரயாசைப்பட வேண்டும்.
(தெய்வத்தின் குரல்)
மூன்றாம் பாகம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT