Published : 03 Apr 2024 06:12 AM
Last Updated : 03 Apr 2024 06:12 AM
காஞ்சிபுரம்: நவீன கால சூழ்நிலையில் இளைஞர்களின் எதிர்காலம் நன்றாக அமைய பக்தியும், இயற்கையும் இணைந்த கல்வி அவசியம் என்று காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தார்.
நாட்டின் பல்வேறு இடங்களுக்கு சென்று, உயிர்களை கொல்லாமை உட்பட பல்வேறு பிரச்சாரங்கள் செய்து வரும் ஜெயின் பெண் துறவிகள் கவேஷ்ணாஜி, மேரு பிரபாஜி, தஷபிரபாஜி, மயங்க் பிரபாஜி ஆகிய 4 பேர் காஞ்சிபுரம் சங்கர மடம் வந்தனர். இவர்கள் சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்தனர்.
இந்து சமூகத்தினரும், ஜெயின் சமூகத்தினரும் இணைந்து இயற்கையை பாதுகாக்கும் மரக்கன்றுகள் நடுதல், மக்களுக்கு சுத்தமான குடிநீர் விநியோகம் செய்தல், சைவ உணவின் நன்மைகளை எடுத்துக் கூறுதல், பசுக்களை பாதுகாத்தல், போதைப் பொருள் பழக்கத்தால் ஏற்படும் தீமைகளை எடுத்துக் கூறுதல், இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகிய செயல்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்பது தொடர்பாக பேசினர். மேலும் இந்தியா முழுவதும் 705 ஜெயின் துறவிகள் இது குறித்து பிரச்சாரம் செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து துறவிகளிடம் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசியது: இன்றைய நிலையில் பக்தியோடும், இயற்கையோடும் இணைந்த கல்வியை இளைஞர்களுக்கு வழங்க வேண்டும். பக்தியோடு கலந்த கல்வியை கற்றுத் தரும்போது குடும்ப மண முறிவுகள் ஏற்படாது. இளைஞர்கள் தீய பழக்க வழக்கங்களுக்கு செல்ல மாட்டார்கள்.
தீவிரவாதம் மறைந்து சகோதரத்துவம் வளரும். முக்கியமாக இளைஞர்களின் எதிர்காலம் நன்றாக அமையும். சிறந்த தேசத்தையும் அவர்கள் உருவாக்குவார்கள். இதனால் பக்தியோடு இணைந்த கல்வி அவசியம் என்றார். இந்த நிகழ்ச்சியின்போது காஞ்சிபுரம் மாவட்ட ஜெயின் சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT