Published : 28 Feb 2018 03:21 PM
Last Updated : 28 Feb 2018 03:21 PM
கும்பகோணத்தை, கோயில் நகரம் என்று போற்றுவார்கள். கும்பகோணத்தில் எந்தத் தெருவில் நுழைந்தாலும் அங்கே ஓர் பிரமாண்டமான ஆலயத்தைத் தரிசிக்க முடியும். அந்த அளவுக்கு ஊர்கொள்ளாத கோயில்களைக் கொண்டது கும்பகோணம்.
காசிக்கும் ராமேஸ்வரத்துக்கும் சென்று பாவங்களைத் தொலைப்பது ஐதீகம். வடக்கே காசியம்பதியும் தெற்கே ராமேஸ்வரமும் புனித பூமியாக, பாவம் நீக்கி புண்ணியம் அருளும் தலமாகப் போற்றிக் கொண்டாடுகிறார்கள் பக்தர்கள்.
அதேவேளையில், கும்பகோணத்தை பெருமையுடன் விவரிக்கும் ஸ்லோகமே உண்டு.
இந்த ஸ்லோகம் அப்படியொரு பெருமையையும் புண்ணியத்தையும் எடுத்துரைக்கிறது.
அந்த ஸ்லோகம் இதுதான்...
அன்யக்ஷேத்ரே க்ருதம் பாபம்
புண்யக்ஷேத்ரே வினஸ்யதி.
புண்யக்ஷேத்ரே க்ருதம் பாபம்
வாராணஸ்யாம் விநஸ்யதி.
வாராணஸ்யாம் க்ருதம் பாபம்
கும்பகோணே விநஸ்யதி.
கும்பகோணே க்ருதம் பாபம்
கும்பகோணே விநஸ்யதி.
மனிதர்கள் செய்யும் பாவங்கள் எல்லாம் புண்ணிய க்ஷேத்திரங்களில் ஸ்நானம் செய்வதாலும் தானம் வழங்குவதாலும் அகன்றுவிடுகின்றன. புண்ணிய க்ஷேத்திரங்களில் வசிப்பவர்கள் செய்யும் பாவங்கள் காசி யாத்திரையின் மூலம் நீங்கிவிடுகின்றன.
அப்பேர்ப்பட்ட காசியில் செய்யும் பாவங்கள் அனைத்தும் கும்பகோணம் வந்து ஸ்நானம் மற்றும் தானங்கள் வழங்கினால், நீங்கிவிடும்.
சரி... கும்பகோணக்காரர்கள்...?
கும்பகோணத்தில் வாழ்பவர்கள் செய்த பாவங்கள் நீங்குவதற்கு எங்கே செல்லவேண்டும்?
எங்கேயும் போகவேண்டாம். எந்த ஊருக்கும் போய் புண்ணியத்தை வாங்கவோ பாவத்தைத் தொலைக்கவேண்டும் என்பதோ இல்லை.
பிறகு...?
கும்பகோணத்துக்காரர்களின் பாவங்கள், கும்பகோணத்திலேயே நீங்கிவிடும் என்று உறுதிபடத் தெரிவிக்கிறது ஸ்லோகம்.
எனவே, கும்பகோணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களைச் சேர்ந்த அன்பர்கள், கும்பகோணத்தின் அருமையை உணர்ந்து, மாசி மக நன்னாளில், நீராடி, கும்பகோணம் எனும் பெயருக்குக் காரணமான தலங்களை வணங்குங்கள். அதுவே பாவங்களை நீக்கிவிடும்; புண்ணியங்களைத் தந்துவிடும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT