Published : 30 Mar 2024 07:36 AM
Last Updated : 30 Mar 2024 07:36 AM
மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் விமரிசையாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘அரோகரா’ என முழங்க கிரிவலப் பாதையில் தேர் பவனி வந்தது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா 15-ம் தேதி கொடியேற்றத் துடன் தொடங்கியது. சுப்பிரமணியசுவாமி, தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நேற்று முன்தினம் நடைபெற்றது. மதுரையில் இருந்து மீனாட்சிஅம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் திருக்கல்யாணத்தில் பங்கேற்றனர். அன்றிரவு மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரருக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அம்பாரி வாகனத்தில் முருகப்பெருமான் தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலைநடைபெற்றது. உற்சவர் சந்நிதியில்முருகப்பெருமான், தெய்வானைக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.வெட்டிவேர் மாலையுடன் சிறப்பு அலங்காரத்தில் அதிகாலை 5.30 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் தேரில் எழுந்தருளினார்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘அரோகரா’ என முழங்க காலை 6.40 மணியளவில் தேரோட்டம் தொடங்கியது. மலையைச் சுற்றி கிரிவலப் பாதை வழியாக அசைந்து சென்ற தேர், நண்பகல் 12 மணியளவில் நிலையை அடைந்தது.
விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி நா.சுரேஷ் அறங்காவலர் குழு தலைவர் சத்திய பிரியா, அறங்காவலர்கள் மணிச்செல்வம், பொம்ம தேவன், சண்முகசுந்தரம், ராமையா மற்றும் கோவில் ஸ்தானீக பட்டர்கள், கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT