Published : 30 Mar 2024 05:50 AM
Last Updated : 30 Mar 2024 05:50 AM
சென்னை: கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஈஸ்டர் பண்டிகையும் ஒன்று. சிலுவையில் அறையப்பட்ட இயேசு 3-ம் நாள் உயிர்த்தெழும் நாள் ஈஸ்டர் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இயேசு உயிர்ந்தெழுந்த உயிர்ப்பு பெருவிழா மற்றும் ஈஸ்டர் பண்டிகை நாளை (ஞாயிறு)கொண்டாடப்பட உள்ளது.
ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னதாக கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடித்து வருகின்றனர். இதன் கடைசி வாரத்தின் பெரிய வியாழன் அன்று, இயேசுகிறிஸ்து தன்னுடைய 12 சீடர்களின் பாதங்களை கழுவும் நிகழ்வை நினைவுப்படுத்தும் விதமாக கத்தோலிக்க தேவாலயங்களில் பேராயர்,பாதிரியார், இறைமக்களின் பாதங்களை கழுவும் நிகழ்வு நடக்கும்.
அந்த வகையில் நேற்றுமுன்தினம் அந்த நிகழ்வு நடந்தது. அதனைத் தொடர்ந்து புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்னதாக அவர்பட்ட பாடுகளை எடுத்துக்கூறும் வகையில் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிலுவைப் பாதை பவனி நடைபெறும்.
அதன்படி, புனித வெள்ளியான நேற்று சிலுவைப் பாதை பவனி நடந்தது. அப்போது, இயேசு சிலுவையில் அறையப்படும்போது அவருக்குஏற்பட்ட பாடுகள், அவருடைய மரணத்தை அப்படியே தத்ரூபமாக நடித்து காண்பிக்கும் நிகழ்வு நடந்தது. சென்னை பெரம்பூர் லூர்துஅன்னை ஆலயத்தில், சென்னைமயிலை உயர் மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி முன்னிலையில் சிலுவைப் பாதை பவனி நடைபெற்றது. பவனியின் இறுதியில் சிறப்பு திருப்பலியும் நடந்தது.
இதேபோல், சாந்தோம் தேவாலயம், பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயம், பாரிமுனை அந்தோணியார், பரங்கிமலை தோமையார், எழும்பூர் திருஇருதய ஆண்டவர் ஆலயம் உள்பட பெரும்பாலான தேவாலயங்களில் சிலுவைப் பாதைபவனி, திருப்பலி நடைபெற்றது.
திருஇருதய ஆண்டவர் உட்பட சில ஆலயங்களில் இயேசு சிலுவையில் அறையப்பட்ட பின்னர்,அவருடைய உடல் இருப்பது போன்ற சொரூபத்தை வைத்து இருந்தனர். மேலும் இயேசு கிறிஸ்து சிலுவைப் பாடுகளில் முன்மொழிந்த 7 வார்த்தைகள் குறித்த தியானஆராதனையும், சிறப்பு பிரார்த் தனையும் தேவாலயங்களில் நடந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT