Published : 12 Jan 2018 01:41 PM
Last Updated : 12 Jan 2018 01:41 PM
ஐயப்ப பக்தர்களே... உங்களுக்காக..!
‘திரும்பக் கிடைக்காத சிம்மாசனம் அம்மாவின் கருவறை’ என்று நிறைய ஆட்டோக்களில் எழுதியிருப்பதைப் பார்த்திருக்கலாம். கருவறை என்பது அப்படித்தான். அம்மாவின் கருவறையில் சிசுவெனக் குடிகொண்டு, மெல்ல மெல்ல வளர்ந்து, இந்த உலகுக்குக் குழந்தையாய் வந்து பிறக்கிற நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் அவரவர்க்கு மட்டுமின்றி, எல்லோர்க்குமான பாடம்; வேதம்!
ஒருமுறைதான் வாழ்க்கை. அந்த ஒரேயொரு வாழ்க்கையில், நியதிகளுக்கு உட்பட்டும் நேர்மைக்குக் கட்டுப்பட்டும் பக்தியில் திளைத்தும் அன்பை வழங்கியுமாக இருக்கிற கோட்பாடுகள்தான் வாழ்க்கைத் தத்துவங்கள்.
அம்மாவின் கருவறை என்பது கிட்டத்தட்ட அம்மாதான். அவளின் அந்த அன்பும் கருணையும் நாம் எடுத்துக் கொள்ளவேண்டிய ஆரம்பப் பாடங்கள். அதேபோல்தான் கோயிலும் வழிபாடுகளும்! கோயிலுக்குச் சென்று அங்கே நம்மை நாமே தொலைப்பது என்பதுதான் ஆன்மிகப் பாடத்தின் முக்கியமான கட்டம். முக்கியமானதொரு இடம்!
இங்கே சிவன் கோயிலுக்குச் செல்கிறோம். வழிபடுகிறோம். பெருமாள் கோயிலுக்குச் சென்று அங்கே அழகு ததும்பக் காட்சி தரும் மாலவனை ஸேவிக்கிறோம். அம்மன் கோயிலுக்குச் செல்லும் போதெல்லாம், சொந்த வீட்டுக்கு வந்தது போலவும் நம் அம்மாவையே பார்ப்பது போலவுமான உணர்வில், பூரித்துப் பிரார்த்திக்கிறோம்.
அழகன் முருகனும் ஆனைமுகனும் ஜெயம் அனைத்தும் வழங்குகிற அனுமனின் தரிசனமும் இன்னும் இன்னுமான பரவசங்களையும் நெகிழ்வுகளையும் நமக்குள் ஏற்படுத்துபவை.
சபரிமலை எனும் புண்ணிய க்ஷேத்திரமும் அவ்விதம்தான். இந்த எல்லாக் கோயில்களின் உணர்வுகளையும் தடதடவென நமக்குள் கடத்துகிற பிரமாண்டமான சக்தி கொண்ட திருத்தலம் இது!
சிவ விஷ்ணு அம்சம் கொண்ட ஆண்டவன் வாழும் ஆலயம் என்று பெருமை பொங்கச் சொல்கிறார்கள் பக்தர்கள். சிவபெருமானும் திருமாலும் இணைந்தெடுத்த திரு அவதாரம் மணிகண்டனின் கருணை ததும்பும் கண்கள், நம்மைப் பார்த்தாலே போதும்... நம் பாவமெல்லாம் பறந்தோடிவிடும். துக்கமெல்லாம் தெறித்து ஓடிவிடும் என்கிறார்கள் ஐயப்ப குருசாமிமார்கள்!
பதினெட்டுப் படிகளைக் கடந்து, காவல்தெய்வங்களை வணங்கித் தொழுது, அந்த சபரிகிரிவாசன் குடிகொண்டிருக்கிற கருவறை... பேரருள் வியாபித்திருக்கிற மகா பீடம்! நம்மைப் போல சாதாரணனாக, மணிகண்டனாக பந்தள தேசத்தின் ராஜாவிடம் வளர்ந்து, அமைதியே உருவாக எல்லோரிடமும் பழகி, சூழ்ச்சியால் புலிப்பால் கொண்டு வர காட்டுக்கு அனுப்பப்பட்ட போது, அதை மகிஷியை வதம் செய்யும் தருணம் என்பதாக எடுத்துக் கொண்ட, பொறுமையின் சிகரம், மலையில் அமர்ந்து ஆட்சி செலுத்துகிற அற்புதமான பீடம்.
’அப்போதெல்ல்லாம் அதாவது அந்தக் காலத்திலெல்லாம் ஜோதிக்கு முன்பாக நடை திறப்பார்கள். மிகக் குறைந்த நாட்கள்தான் தரிசன அவகாசம். பிறகு மார்கழி மாதத்தில் திறக்கப்பட்டு, கார்த்திகையிலும் திறக்கப்பட்டு, மண்டல காலம் முழுவதும் திறக்கப்பட்டு என்றெல்லாம் வளர்ந்தன. பக்தர்கள் எண்ணிக்கை வளர வளர, நடை திறப்பு காலமும் அதிகரித்தன’ என்கிறார் ஐயப்ப உபந்யாசகர் அரவிந்த் சுப்ரமண்யம்.
கேரளம் என்பது கடவுளின் தேசம். கேரளம் என்பது பரசுராமர் சிருஷ்டித்த பூமி. அகத்திய மாமுனிவர் அறிவுறுத்த, தேவதச்சர்கள் கோயிலை நிர்மாணிக்க, பந்தள ராஜா எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுக்க, பரசுராமர் ஐயப்ப பிரதிஷ்டை செய்த அற்புதங்கள் நிறைந்த ஆத்ம க்ஷேத்திரம் சபரிமலை!
இதோ... நம் கோபம், ஆங்காரம், ஆணவம், கவலை, ஏக்கம், துக்கம், சோதனை, சோகம், வருத்தம், தோல்வி என எல்லாவற்றில் இருந்தும் விடுபட்டு, நீயே எல்லாம்... நீதான் எல்லாம் என்று அந்தச் சந்நிதியில் நில்லுங்கள். சபரிகிரிவாசன் உங்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான்.
இப்போது, உங்கள் கண்ணீரைப் பார்த்துவிட்டு சும்மா இருந்துவிடுவானா? கடும் விரதம் இருந்த பக்தர்களை, அவன் ஒருபோதும் கைவிடுவதில்லை. கழுத்தில் துளசி மாலை அணிந்து விரதம் மேற்கொண்ட பக்தர்களின் குடும்பங்களை அவன் எக்காலமும் கைவிடமாட்டான்.
விரதம் இருந்து, உங்கள் வீட்டில் அனுதினமும் சொன்ன சரண கோஷங்கள் வெறும் பூஜையா. புனஸ்காரமா. சடங்கு மட்டுமா. உங்கள் வீட்டில் நீங்கள் சொன்ன சரண கோஷங்களையெல்லாம், சபரி பீடத்தில் அமர்ந்து கொண்டிருக்கும் ஐயன் ஐயப்ப சுவாமி, கேட்டுக் கொண்டேதான் இருந்தான். இப்போது, அந்தக் கருவறைக்கு எதிரில், கண்ணீரும் ஆனந்தமுமாக நீங்கள் நிற்பதை, பரவசமும் பக்தியும் பிரவாகிக்க நீங்கள் அவனைத் தரிசித்துக் கொண்டிருப்பதை, கூர்ந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான். உங்களுக்கு அருள்பாலிக்கத் தயாராகி விட்டான் அந்த சபரிபீட நாயகன்!
மனதார வேண்டுங்கள். உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்துக்காகவும் உங்களின் குழந்தைகளுக்காகவும் வேண்டுவதற்கு முன்னதாக, எல்லோருக்குமானதாக உங்கள் பிரார்த்தனை இருக்கட்டும். எல்லோரின் நலனுக்காகவும் ஐயனிடம் வேண்டுங்கள்.
அதுமட்டுமா? காடுகரையெல்லாம் நீரால் நிறைந்திருக்க வேண்டுங்கள். நீரின்றி அமையாது உலகு என்பது தெரியும்தானே. நீர் இருந்தால்தான் விவசாயம். விவசாயம் செழித்தால்தான் உணவு. யாருக்கும் எந்த வீட்டுக்கும் உணவுப் பஞ்சமே வரக்கூடாது என பிரார்த்தனை செய்யுங்கள்.
அக்கம்பக்கத்தாரின் பிரச்னைகளை அங்கே அவனிடம் முறையிடுங்கள். கடனில் தத்தளிப்பவர்களை தூக்கிவிடப்பா என்று அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். கல்யாணக் கவலையுடன் தவிப்பவர்களுக்காக, கல்யாண மாலை விரைவில் தோள் சேரவேண்டும் என்று மணிகண்டனின் கோரிக்கையாக வையுங்கள்.
நோயுற்றவர்களுக்காகவும் வயோதிகர்களுக்காகவும் நல்ல வேலை கிடைக்க தவிப்பவர்களுக்காகவும் காசும்பணமும் இருந்தால் சொந்த பூமியோ வீடோ வாங்கலாம் என்று ஏங்குவோருக்குமாக எல்லோருக்குமாக, உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்காக, அவர்களின் நலனுக்காக மனதார மணிகண்டனிடம் வேண்டுங்கள். எல்லாரின் சங்கடங்களையும் தீர்க்கச் சொல்லி சாஸ்தாவிடம் முறையிடுங்கள். அனைவரின் கஷ்டங்களையும் போக்கச் சொல்லி, கண்கண்ட தெய்வமான ஐயப்ப சுவாமியிடம் அழுது கேளுங்கள்.
உங்கள் பிரார்த்தனைகளையெல்லாம் நிறைவேற்றித் தந்தருளும் பீடம் அது. நீங்கள் வைக்கிற வேண்டுகோளையெல்லாம் நிவர்த்தி செய்கிற சந்நிதி அது. தெய்வத்தின் சந்நிதி, சாந்நித்தியம் கொண்டது. யோக பீடத்தில், நமக்காகவே தபஸ் செய்து கொண்டிருக்கும் தவக்கோல நாயகன், பிறருக்கான நம்முடைய பிரார்த்தனையை மட்டுமின்றி, நம்மையும் நம் குடும்பத்தாரையும் நம் சந்ததியினரையும் காத்தருள்வான். சகல வளங்களும் தந்தருள்வான்!
அந்த தெய்வச் சந்நிதியில்... மனதார வேண்டுங்கள்.
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!
- ஐயன் வருவார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT