Published : 29 Mar 2024 05:23 AM
Last Updated : 29 Mar 2024 05:23 AM

திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம்

திருப்பரங்குன்றத்தில் நேற்று நடைபெற்ற சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை திருக்கல்யாண உற்சவத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த15-ம் தேதி பங்குனித் திருவிழாகொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம்இரவு பட்டாபிஷேகம் நடைபெற்று, கிரீடம், செங்கோல் சாற்றப்பட்டது.

இந்நிலையில், திருக்கல்யாணத்தையொட்டி நேற்று அதிகாலை தங்க சிம்மாசனத்தில் மணக்கோலத்துடன் சுவாமிஎழுந்தருளினார். திருக்கல்யாணத்துக்காக மதுரையிலிருந்து புறப்பட்ட மீனாட்சி சுந்தரேசுவரரை கோயில் சந்திப்பு மண்டபத்தில் வரவேற்றனர். பின்னர், மீனாட்சி- சுந்தரேசுவரருடன் கோயிலுக்குள் வந்து, ஒடுக்க மண்டபத்தில் கன்னிஊஞ்சலாடி, திருவாட்சி மண்டபத்தில் உள்ள ஆறுகால் மண்டபத்தில் அழகிரிசாமி நாயக்கர் மணக்கோல மண்டகப்படியில் எழுந்தருளினார்.

பின்னர், மீனாட்சி-சுந்தரேசுவரர் முன்னிலையில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். இரவு மீனாட்சி-சுந்தரேசுவரர் பல்லக்கிலும், சுப்பிரமணியர் வெள்ளி அம்பாரி வாகனத்திலும், தெய்வானை அனந்தராயர் புஷ்ப பல்லக்கிலும் எழுந்தருளினர். 16 கால் மண்டபத்தில் தீபாராதனை முடிந்து, மீனாட்சி சுந்தரேசுவரரை வழியனுப்புதல் நிகழ்ச்சி நடந்தது.

இன்று காலை தேரோட்டம் நடைபெறுகிறது. நாளை(மார்ச் 30) தீர்த்த உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x