Last Updated : 13 Feb, 2018 10:31 AM

 

Published : 13 Feb 2018 10:31 AM
Last Updated : 13 Feb 2018 10:31 AM

108 லிங்கம் கொண்ட 108 சிவாலயம்! மகாசிவராத்திரியில் அற்புத தரிசனம்!

மகாசிவராத்திரி நாளில், 108 லிங்கம் கொண்ட 108 சிவாலயத்துக்கு வந்து தரிசனம் செய்யுங்கள். நினைத்த காரியம் யாவும் கைகூடும். பாவங்கள் அனைத்தும் விலகிவிடும் என்பது ஐதீகம்!

ஊரின் பெயரிலே... கோயிலுக்கு சென்று தரிசித்தால் கிடைக்கும் பலன் இருக்கிறது. இந்தக் கோயிலுக்கு வந்து தரிசித்தால், நம் பாவங்கள் அனைத்தும் நாசமாகிவிடும். ஆமாம்... ஊரின் பெயரும் அதுதான். பாபநாசம்.

தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் உள்ளது பாபநாசம். கும்பகோணத்தில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ளது பாபநாசம் திருத்தலம்.

மிகப் புராதனமான, புராணத் தொடர்பு கொண்ட திருத்தலம் இது என்று போற்றுகின்றனர் பக்தர்கள். கீழை ராமேஸ்வரம் எனும் பெருமை கொண்ட கோயில். எந்தத் தலத்துக்கும் இல்லாத பெருமையும் அதிசயமும் என்ன தெரியுமா... இங்கே 108 சிவலிங்கங்கள் இருக்கின்றன. ஆக இந்தத் தலத்துக்கு வந்து தரிசித்தால், 108 சிவலிங்க தரிசனம் பெறலாம். 108 சிவாலயங்களுக்குச் சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்!

தலம் விசேஷம். தீர்த்தப் பெருமை உண்டு. மூர்த்தமும் சொல்லில் அடங்காத சக்திகள் கொண்டது. எனவே தலம், தீர்த்தம், மூர்த்தம் எனும் விசேஷங்களைக் கொண்ட திருத்தலங்களில் இதுவும் உண்டு எனப் போற்றுகின்றனர் பக்தர்கள்.

சுவாமியின் திருநாமம் ராமலிங்கேஸ்வரர். ஆமாம்... ராமபிரான் வழிபட்ட திருத்தலம் இது. அம்பாள் பர்வதவர்த்தினி. சிவனாருக்கு உகந்த வில்வத்தை தல விருட்சமாகக் கொண்ட திருத்தலம் இது. குடமுருட்டி, சூரிய புஷ்கரணி, சந்திர புஷ்கரணி, அக்னி தீர்த்தம் என இந்தத் தலத்தின் தீர்த்தங்கள் அனைத்தும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்கின்றனர் பக்தர்கள்.

ராவணனை வதம் செய்துவிட்டு, லங்காபுரியை அழித்து விட்டு, ராமேஸ்வரம் வந்து அங்கிருந்து ராமபிரான், சீதையுடனும் லட்சுமணர் மற்றும் அனுமருடனும் வந்துகொண்டிருக்க, இங்கே... இந்த பாபநாசம் தலத்திற்கு வந்த போது, ஒரு விஷயத்தை உணர்ந்தார்கள். ராமபிரானை, ஏதோவொன்று நிழல் போலான உருவத்தில தொடர்ந்து கொண்டிருப்பதாக எல்லோரும் நினைத்தனர்.

யுத்தத்தில் பலரையும் கொல்ல நேர்ந்த தோஷத்துக்கு ஆளானதால், அந்தப் பாவம் தன்னைப் பின் தொடர்வதாக உணர்ந்தார் ஸ்ரீராமர். ஆகவே காவிரியும் தென்னந்தோப்பும் வயல்வெளிகளுமாக குளிர்ந்து மணம் பரப்பிக் கொண்டிருக்கும் இந்தத் தலத்தில், 108 சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வேண்டினால், பாவங்கள் அனைத்தும் நீங்கப் பெறலாம் எனச் சொன்னார் ராமபிரான்.

அதன்படி, காவிரியில் இருந்து மணல் எடுத்து வந்தார்கள். அந்த மணலைக் கொண்டு சிவலிங்கம் பிடித்து வைத்தார்கள். ஒவ்வொரு லிங்கமாக பிடித்துப் பிடித்து வைத்துக் கொண்டே வந்தார்கள். முன்னதாக, காசிக்குச் சென்று அங்கிருந்து சிவலிங்கம் ஒன்றை எடுத்துவரச் சொல்லி அனுமனை அனுப்பி வைத்தார் ராமர். அனுமனும் விரைந்தார் காசிக்கு!

அத்தனை சிவலிங்கங்களுக்கும் மூலவராக, நாயகராக ஆறடி உயரத்தில் சிவலிங்கம் அமைத்தார் ராமபிரான். அதுவே கருவறையில் குடிகொண்டிருக்கிறது என்கிறது ஸ்தல புராணம். ராமர் வழிபட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட மூலவர், ராமலிங்கேஸ்வரர் எனும் திருநாமம் கொண்டார். அவருக்கு அருகில் பிராகாரத்தில்... 106 சிவலிங்கங்கள் அமைக்கப்பட்டன. காசீயில் இருந்து அனுமன் கொண்டு வந்த சுமார் ஐந்தடி உயரமுள்ள லிங்கத்தையும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆக மொத்தம் 108 லிங்கங்களை அமைத்து ராமபிரான் வழிபட்ட சிவ ஸ்தலம்... ராமலிங்கேஸ்வரர் கோயில் என்று சொல்லப்பட்டாலும் 108 சிவாலயம் என்றே எல்லோராலும் சொல்லப்படுகிறது.

ராமபிரானின் பாபங்களையெல்லாம் நாசம் செய்து அவரின் தோஷத்தைப் போக்கிய தலம், பாபநாசம் என்றே அழைக்கப்பட்டது. இன்றைக்கும் இந்தத் தலத்துக்கு வந்து 108 சிவலிங்கங்களையும் தரிசிப்பவர்களின் பாவங்களையெல்லாம் போக்கி அருள்கிறார் சிவனார் என்கின்றனர் பக்தர்கள்!

அழகிய ஆலயம். அற்புதமான திருத்தலம். சாந்நித்தியம் நிறைந்த சந்நிதிகள். 108 லிங்கங்கள் கொண்ட கோயிலுக்கு வாழ்வில் ஒருமுறையேனும் வந்து தரிசித்தால், நம் முன் ஜென்மத்துப் பாவங்கள் உட்பட சகல பாவங்களும் நம்மை விட்டு விலகிவிடும். புண்ணியங்கள் பெருகச் செய்வார் சிவனார். குழந்தை பாக்கியம் கிடைக்கும். இழந்ததையெல்லாம் பெறுவீர்கள் என்பது உறுதி என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்!

மிக நீண்ட மண்டபத்தில் மூன்று வரிசைகளில் வரிசைக்கு முப்பத்தி ஐந்து லிங்கங்கள் இருக்கின்றன. மூன்றாவது வரிசையில் மட்டும் முப்பத்தி ஆறு லிங்கங்கள் இருக்கின்றன. ஆக மொத்தம் 106 லிங்கங்கள். காசியில் இருந்து அனுமன் எடுத்துவந்த லிங்கம்... அனுமத்லிங்கம் என்று அழைக்கப்படுகிறது. இது 107வது லிங்கம். நிறைவாக 108 வது லிங்கம்... கருவறையின் மூலவர்... ராமலிங்கேஸ்வரர்!

நினைத்த காரியம் கைகூட வேண்டும் என நினைப்பவர்கள், 108 சிவலிங்கங்களையும் தரிசனம் செய்தால், விரையில் காரியம் நடந்தேறுவதைக் காண்பீர்கள். காசியில் இருந்து கொண்டுவரப்பட்ட லிங்கம் உள்ள தலம். எனவே காசிக்கு இணையான தலம் என்பார்கள். அதேபோல் ராமர் வழிபட்ட ராமேஸ்வரத்துக்கு இணையாக இந்தத் தலமும் ராமர் வழிபட்ட ஸ்தலம் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்!

மகா சிவராத்திரி நன்னாளில், சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த மகா சிவராத்திரி நாளில், 108 லிங்க தரிசனம் தரும் 108 சிவாலயத்துக்கு வாருங்கள். வந்து தரிசனம் செய்யுங்கள். வாழ்வில் நினைத்துக் கூட பார்க்க முடியாத உயரங்களை அடைவீர்கள். சிகரங்களைத் தொடுவீர்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x