Last Updated : 28 Dec, 2017 11:17 AM

 

Published : 28 Dec 2017 11:17 AM
Last Updated : 28 Dec 2017 11:17 AM

எனையாளும் சாயிநாதா..! 7: ‘பாபா உங்களைப் பார்க்கிறார்!’

பாபாவின் அருள் சொல்லும் அற்புதத் தொடர்

தன்னை வெளிப்படுத்தவும் வெளிக்காட்டிக் கொள்ளவும் மகான்கள் எப்போதுமே முயலுவதே இல்லை. அது தானாகவே நிகழும். அப்படியான சூழல்களைத்தான் அதிசயம், அபூர்வம் என்று போற்றுகிறோம். ஆச்சரியப்பட்டுப் போகிறோம். வியப்புடனும் விந்தையுடனும் மகானைப் போற்றி வணங்குகிறோம்.

பகவான் சாயிபாபா, கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்ட தருணமும் அப்படித்தான். கூண்டில் ஏறி நின்ற பாபாவை, எவராலும் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. ‘என்ன இது அக்கிரமம்’ என்று குமைந்து போனார்கள். ‘இதெல்லாம் உலகத்துக்கு நல்லது இல்லை’ என்று பொருமித் தள்ளினார்கள். மற்றவர்கள் பிரமை பிடித்தவர்கள் போல் பாபாவையே பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

இந்த உலகில் ஏதேனும் சுவாரஸ்யங்கள் நிகழாதா என்று வினோதம் தேடி அலைபவர்கள், பாபாவை வெறும் ஆச்சரியப் பொருளாக மட்டுமே பார்த்தார்கள். அவர்களும் பாபா என்ன சொல்லப் போகிறார் என்று விழிகள் விரியக் காத்திருந்தார்கள்.

அந்த மேஜிஸ்திரேட் வந்து அமர்ந்து பாபாவைப் பார்த்தார். அவர் மீதான குற்றச்சாட்டுகளை நோட்டமிட்டார்.

‘அந்தப் பொருட்களை, நகைகளை திருடனிடம் நீங்கள்தான் கொடுத்தீர்களா? உங்களைத்தான் சொல்கிறான் அவன்’ என்று கேட்கப்பட்டது.

‘எல்லாம் என்னுடைய பொருட்கள்தான். அவனிடம் இருப்பது மட்டுமல்ல... உலகின் எல்லாப் பொருட்களும் என்னுடையதே! எல்லாப் பொருளின் மீதும் உரிமை எனக்கு உண்டு’ என்றார் பாபா.

பிறகு அங்கே பேரமைதி நிலவியது.

பெயர் என்ன என்று கேட்டால், சாயிபாபா என்கிறார். அப்பாவின் பெயர் பற்றிக் கேட்டால், அவர் பெயரும் சாயிபாபாதான் என்கிறார்.

திருடனிடம் பொருட்களை, நகைகளைக் கொடுத்தீர்களா என்று கேட்டால், எல்லாப் பொருளும் என்னுடையவை என்கிறார். உலகின் சகல பொருட்களும் என்னுடையவேதான் என்கிறார்.

பாபா சொன்னதையெல்லாம் யோசித்துப் பார்த்தார். அவர் மகான் என்பது தெரிந்து சிலிர்த்தார் மேஜிஸ்திரேட். எதுவும் பேசவில்லை. அமைதியாக அவரைப் பார்த்தபடி இருந்தார்.

சாயிபாபாவின் சில வார்த்தை பதில்கள், தன் கேள்விக்கான பதில்களா. இல்லை, வாழ்க்கை மொத்தத்துக்குமானவை என்பதைப் புரிந்து கொண்டார். இந்த பிரமாண்டமான தத்துவத்தை, மிக எளிமையாகச் சொல்லிவிட்டார் பாபா என பிரமித்துப் போனார்.

பாபாவைக் குற்றமற்றவர் என்று அறிவித்தார். தனிப்பட்ட முறையில், கோர்ட்டுக்கு அழைத்து வந்ததற்காக மன்னிப்பும் கோரினார். திருடனைப் பற்றி நன்றாக விசாரியுங்கள் என குறிப்பு எழுதிக் கொடுத்தார்.

பிறகு சில நாட்கள் கழிந்தன. ‘நான் பொய் சொல்லிவிட்டேன்’ என்று ஒத்துக்கொண்டான் திருடன். ‘திருடிய இடங்களைக் காட்டுகிறேன்’ என்று இறங்கிவந்தான். அதேநேரம், அந்த சமயங்களில், அவன் ஷீர்டிக்கும் வரவில்லை, மசூதிக்கும் செல்லவில்லை என்பதும் தெரியவந்தது.

பாபா அப்படித்தான். ஏன் அப்படியொரு பதிலைச் சொன்னார். ஏன் அப்படியொரு வினோதமான பேச்சால், வினோதமான விஷயங்களை எடுத்துரைத்தார். பாபா அப்படித்தான். இப்படி ஏதேனும் ஒரு கட்டத்தில், தன்னை வெளிப்படுத்துவார். அன்றைக்கு மட்டுமின்றி, அந்தக் காலத்தில் மட்டும் அல்லாமல், இப்போது கூட தன்னுடைய அருளாடல்களால் தன்னை வெளிக்காட்டிக் கொண்டே இருக்கிறார் பகவான் சாயிபாபா!

இன்னொரு விஷயமும் சொல்கிறார்கள் சாயிபாபா பக்தர்கள்.

‘பாபாவை நாம் பார்க்கவேண்டும், தரிசிக்க வேண்டும் என்றெல்லாம் இல்லை. அவரை நினைத்தாலே போதும். அவரை உள்வாங்கிக் கொண்டாலே போதும். அவர் பெயரை உள்ளுக்குள்ளே சொன்னாலே போதுமானது. பாபா நம்மை பார்த்துக் கொண்டே இருக்கிறார். நம்மை சதாசர்வ காலமும் கவனித்துக் கொண்டே இருக்கிறார். ஆகவே பாபாவின் பக்தர்கள், ஒழுக்கத்துடனும் நேர்மையுடனும் பேரன்புடனும் வாழ்வை அமைத்துக் கொள்கின்றனர்.

ஷீர்டிக்கு என்றில்லை. உங்கள் வீட்டுக்கு அருகில் பாபா கோயில் இருக்கிறதா. அங்கே சென்றிருக்கிறீர்களா. ஒரு முறை... ஒரெயொரு முறை... அங்கு சென்று பாபாவை தரிசித்து வாருங்கள். பிறகு உங்களை பாபா கண்காணிட்த்தபடியே இருப்பார்.

உங்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் வந்தால், பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டார் பாபா. உங்களை எவரோ வருத்தப்பட வைக்கிறார்கள் என்றால், அதைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார் பாபா. அங்கே ஏதேனும் ஒரு விளையாட்டை நிகழ்த்திக் காண்பிப்பார். நமக்காக தன் அருளாடலை அங்கே அரங்கேற்றித் தருவார் சாயிபாபா!

இன்றைக்கு தமிழகத்தின் பல இடங்களிலும் சாயிபாபாவுக்கு கோயில்கள் அமைந்துவிட்டன. ஒருகாலத்தில் பிள்ளையார் கோயிலும் அம்மன் ஆலயங்களும் இப்படித்தான் வந்தன. இப்போது பகவான் சாயிபாபாவின் அருள் வியாபித்திருக்கிற காலம். சின்னதாகவோ பெரிதாகவோ, பாபாவுக்குக் கோயில்கள் வரத் தொடங்கி விட்டன.

எல்லா இடங்களிலும் எல்லாக் கோயில்களிலும் பாபாவின் பிரமாண்டமான சக்தியானது, அருளானது நீக்கமற நிறைந்திருக்கிறது.

‘எங்கெல்லாம் பாபா எனும் சொல் உச்சரிக்கப்படுகிறதோ, ஷீர்டி நாயகனின் திருநாமம் சொல்லப்படுகிறதோ... அங்கே பாபாவின் விளையாடல் தொடங்கிவிடுகிறது என்று சிலிர்ப்புடன் சொல்கிறார்கள் பக்தர்கள்!

ஷீர்டி நாயகன் பாபாவை வியாழன் தோறும் வணங்குங்கள். வியாழன் என்றில்லாமல் ஒவ்வொரு நாளும் வழிபடுங்கள். நம் வாழ்க்கை வழிக்குத் துணையென வருவார் இந்த அற்புத மகான்!

மற்ற மகான்களுக்கும் ஷீர்டி சாயிபாபாவுக்குமான சின்ன வேறுபாடுகள் உள்ளன. அதில் முக்கியமானது... ‘பகவான் பாபா உங்களைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார்!’

பாபாவை நாம் பார்ப்பது முக்கியமா. பாபா, நம்மைப் பார்ப்பது அவசியமா.

யோசியுங்கள். இதையும் பார்த்துக் கொண்டிருக்கிறார் மகான் பாபா!

அவரின் பார்வை நம் மீது பட்டு, நம்மை என்னவோ செய்யும். ஏதேதோ வழங்கும்!

ஜெய் சாய்ராம்... ஜெய் சாய்ராம்... ஜெய் சாய்ராம்!

- அருள்வார்

தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in

முந்தைய அத்தியாயம் படிப்பதற்கு...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x