Last Updated : 07 Feb, 2018 12:05 PM

 

Published : 07 Feb 2018 12:05 PM
Last Updated : 07 Feb 2018 12:05 PM

உங்கள் துறையில் ஜெயிக்க... குருவித்துறைக்கு வாங்க..!

குருவித்துறைக்கு வந்தால், குருவின் பேரருளையும் பெருமாளின் இறையருளையும் பெற்று, வாழ்வில் உயரலாம், ஜெயிக்கலாம் என்பது ஐதீகம்!

சப்தமலைகளாலும் சூழப்பட்டு, இந்திரலோகம் செல்ல முடியாமல் சிறையுண்டு கிடந்தான் கச்சன். பெண்ணொருத்தி தந்த சாபம் அது! இதை அறிந்த அவனுடைய தந்தை, கலங்கித் தவித்தார். அதேசமயம் கடும் கோபம் கொண்டார்.

உலகமே ஞானம் தேடி அவரைச் சரணடைகிறது. ஆனால், மகனை மீட்க அவருக்கு வழிதெரியவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் நாரதரிடம் ஓடினார். அவர் ஆலோசனை வழங்கி அருளினார். அதன்படி வேகவதி நதிக்கரையில், தனக்கெனப் படித்துறை அமைத்து, அந்த நதியில் நீராடி, ஆற்றங்கரையில் கடும் தவம் மேற்கொண்டார்.

இந்த தவத்தில் மனம் பூரித்தார் திருமால். அவருக்கு திருக்காட்சி தந்தார். அதுவும் எப்படிக் காட்சி தந்தார் தெரியுமா?

சித்திரை மாதத்தில், ஆயிரம் சித்திரங்கள் கொண்ட ரதத்தில் வந்து திருக்காட்சி தந்தார் பெருமாள். அத்துடன் அவரின் வேண்டுகோளை ஏற்றார். அவருடைய மகன் கச்சனையும் மீட்டுத் தந்தருளினார்!

அன்று முதல், அந்தத் தலத்தில் இருந்தபடி அனைவருக்கும் அருள்பாலித்து வருகிறார் பெருமாள். அவருக்கு சித்திர ரத வல்லப பெருமாள் எனும் திருநாமம் அமைந்தது. அதேபோல், கச்சனின் தந்தையும் அங்கே தனிச்சந்நிதியில், தனிக்கோயிலாகவே கொண்டு அனைவருக்கும் அருள்பாலித்து வருகிறார். அந்தத் தந்தை யார் தெரியுமா? குரு பகவான்!

குரு படித்துறை அமைத்து வழிபட்ட அந்த ஊர், குருவித்துறை என்றே அழைக்கப்படுகிறது. மதுரை மாவட்டம் சோழவந்தானுக்கு அருகில் உள்ளது குருவித்துறை.

குரு பகவான் குடிகொண்டிருக்கும் தலத்தில், குருப்பெயர்ச்சியின் போது சிறப்பு ஹோமங்களும் பூஜைகளும் நடைபெறுகின்றன. பெருமாளுக்கு உகந்த புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும் குருவுக்கு உகந்த வியாழக்கிழமையிலும் இங்கு வந்து வணங்கினால், தொழில் சிறக்கும்; கல்வி-கேள்வியில் சிறந்து விளங்கலாம் என்கிறார்கள் பக்தர்கள்!

அருகில் உள்ள நதியில் நீராடிவிட்டு, சித்திர ரத வல்லப பெருமாளுக்கு பொங்கலிட்டு, கண்ணாரத் தரிசித்தால், நம் தலைமுறையில் உள்ள மொத்த தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம். மேலும் திருமண தோஷங்கள் நீங்கப் பெற்று, விரைவில் திருமணம் கைகூடும். பிள்ளை பாக்கியம் பெறலாம் என்றும் சொல்கிறார்கள் பக்தர்கள்.

ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக, நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் ஸ்ரீசித்திர ரத வல்லப பெருமாள் கொள்ளை அழகுடன் சேவை சாதிக்கிறார். தாயாரின் திருநாமம் செண்பகவல்லித் தாயார்.

மதுரையில் இருந்து சுமார் 27 கி.மீ. தொலைவில் உள்ளது சோழவந்தான். இங்கிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது குருவித்துறை. பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து பஸ் வசதி உண்டு. மதுரை -திண்டுக்கல் சாலையில் உள்ள வாடிப்பட்டியில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது சோழவந்தான்.

குருவித்துறைக்கு வந்தால், எந்தத் துறையினராக இருந்தாலும் உங்களை ஜெயிக்கச் செய்வார் குரு பகவான்! வாழ்வில் சகல யோகங்களையும் தந்தருள்வார் சித்திர ரத வல்லப பெருமாள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x