Last Updated : 28 Feb, 2018 05:03 PM

 

Published : 28 Feb 2018 05:03 PM
Last Updated : 28 Feb 2018 05:03 PM

இழந்த செல்வம், கெளரவம், நிம்மதி; நல்லன எல்லாம் தரும் நவ நதிப் பெண்கள்!

கும்பகோணம் பேருந்து நிலையம் ரயில் நிலையம் ஆகியவற்றுக்கு அருகில், சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது காசிவிஸ்வநாதர் கோயில். அழகும் சாந்நித்தியமும் நிறைந்த அற்புதமான ஆலயம் என்கிறார்கள் பக்தர்கள். .

கி.பி. 9-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் இது. தங்கள் பாவம் நீங்கி, புண்ணியம் சேர்க்கும் பொருட்டு, மகாமக தீர்த்தத்தில் சங்கமிக்கும் ஒன்பது நதிப் பெண்களும் இங்கே, சந்நிதி கொண்டு காட்சி தருகின்றனர். அதாவது, கங்கா, யமுனா, சரஸ்வதி, நர்மதா, காவிரி, கோதாவரி, துங்கபத்ரா, சரயு, கிருஷ்ணா என நவநதிப் பெண்கள் காட்சி தந்தருள்கின்றனர்.

மகாமக வைபவத்தின் போது, யாக சாலைக்கான புற்று மண், இந்தக் கோயிலில் இருந்துதான் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்தத் தலத்துக்கு வந்து வேண்டிக் கொண்டால், காசிவிஸ்வநாதருக்கு வில்வம் சார்த்தி பிரார்த்தனை செய்து கொண்டால், பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும்; புண்ணியங்கள் பல்கிப் பெருகும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்!

குறிப்பிட்ட வயது வந்தும் பூப்படையாதவர்கள், திருமணத் தடையால் மங்கல காரியம் நடக்காமல் தள்ளிப்போகிறதே... என அவதிப்படுபவர்கள், கொஞ்சி விளையாடக் குழந்தை இல்லையே எனக் கலங்குபவர்கள் எனப் பெண்கள் பலரும் இங்கு வந்து நவ கன்னியரை வணங்கினால் சீக்கிரமே மங்கல காரியங்கள் இல்லத்தில் நடந்தேறும்; நல்ல நல்ல இனிமையான நிகழ்வுகளும் திருப்பங்களும் வாழ்வில் அரங்கேறும் என்பது ஐதீகம்!

12 வெள்ளிக்கிழமைகள் மகாமகக் குளத்தில் நீராடி, நவ கன்னியரை, நதிப் பெண்களை ஆத்மார்த்தமாக வணங்கி வந்தால், பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள். திருக்குளத்தில் நீராடி பொங்கல் படையலிட்டும் வேண்டிக் கொள்கிறார்கள். அப்படி வழிபட்டால், விரைவில் சந்தான பாக்கியம் கிடைக்கும். இழந்த கெளரவத்தையும் இழந்த செல்வத்தையும் இழந்த நிம்மதியையும் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x