Published : 20 Jan 2018 02:25 PM
Last Updated : 20 Jan 2018 02:25 PM
தலம், தீர்த்தம், மூர்த்தம் என மூன்று விஷயங்கள் முக்கியத்துவம் கொண்டவையாக ஒரு ஆலயத்தைச் சொல்லுவார்கள். சில கோயில்கள் தலம் சிறப்புடையதாக இருக்கும். இன்னும் சில கோயில்களின் தீர்த்தம் மிகவும் விசேஷமானதாக இருக்கும். பல கோயில்களில், மூர்த்தம் எனப்படும் சுவாமியின் விக்கிரகத் திருமேனி வெகு அழகாக இருக்கும்.
சுவாமிமலை எனும் முருகப் பெருமான் குடிகொண்டிருக்கும் கோயில், தலம், தீர்த்தம், மூர்த்தம் என மூன்றிலும் முதன்மையான, முக்கியமான திருத்தலம் என்று போற்றப்படுகிறது.
ஆறுபடைவீட்டில் ஒரு வீடு என்பதால் தலம் முக்கியத்துவம் வாய்ந்ததாகச் சொல்கிறார்கள் பக்தர்கள். சுவாமிநாத சுவாமி, தன் பெயருக்கேற்ற வகையில் அழகும் கருணையும் ததும்பக் காட்சி தருவதால்... மூர்த்தம் சிறப்பு என்று கொண்டாடுகிறார்கள்.
மூன்றாவதாக தீர்த்தம். இங்கே, பல தீர்த்தங்களைக் கொண்டு திகழ்கிறது சுவாமிமலை என்று சொல்லி சிலாகிக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்!
இங்கே உள்ள தீர்த்தங்கள் பலவற்றையும் பார்த்தோம். அழகன் முருகனின் சுவாமிமலை தலத்தில் உள்ள தீர்த்தங்களில், எந்தநாளிலும் நீராடலாம். ஆனாலும் குறிப்பிட்ட சிலநாட்களில் நேத்ர தீர்த்தத்தில் நீராடுவதும் தீர்த்தத்தைத் தெளித்துக் கொள்வதும் இன்னும் இன்னுமானப் புண்ணியங்களையும் பலன்களையும் வழங்கும் என்கிறது ஸ்தல புராணம்.
அதாவது, சுக்லபட்ச அஷ்டமியும் திருவாதிரை நட்சத்திரமும் கூடிய நாளில் நீராடி, சுவாமிநாத சுவாமியை வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷமும் அதனால் ஏற்பட்ட பாவமும் நீங்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
சுக்லபட்ச அஷ்டமியும் பரணி நட்சத்திரமும் கூடிய நாளில் நீராடினால், நீராடிவிட்டு, சுவாமி தரிசனம் செய்தால், கோ தோஷம் முதலான தோஷங்கள் யாவும் நீங்கும்.
ஆடி மாதம் பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் நீராடி வழிபட்டால், பிறரது பொருளைக் களவாடியதால் உண்டான பாவங்கள் நீங்கும். முன்னோர்களின் ஆசியும் கிடைக்கப் பெறலாம்!
ஆவணி மாதம் பூரட்டாதி மற்றும் உத்திரட்டாதி முதலான நட்சத்திரங்கள் கூடிய ஞாயிற்றுக் கிழமைகளில் நீராடி, சுவாமிநாத சுவாமியை வழிபடுபவர்கள் உயர் பதவியை அடைவார்கள். புகழுடன் வாழ்வார்கள்.
புரட்டாசி மாதம் அஷ்டமியில் நீராடி சுவாமிநாதரை வழிபடுபவர்கள், அன்னத்தை வீண் செய்ததால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கப் பெறுவர். அதாவது அன்ன தோஷம் நீங்கும். ஆயுள் நீடிக்கும். தனம் தானியம் பெருகும்!
ஐப்பசி மாதம் கிருஷ்ண பட்சம் கூடிய ஞாயிற்றுக் கிழமை அன்று இதில் நீராடி, கோயிலை) வலம் வந்து சுவாமி தரிசனம் செய்து, அன்னதானம் செய்தால், தீவினைகள் நீங்கப் பெறுவர். துர்தேவதைகள் நெருங்காமல் காத்தருள்வார் சுவாமிநாத சுவாமி.
கார்த்திகை மாதம் நீராடி வழிபட்டால், ஏழேழு பிறவிகளில் செய்த பாவங்கள் யாவும் தொலையும். சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப் பெற்று, இனிதே வாழலாம்!
மார்கழி மாதம் மிருகசீரிஷ நட்சத்திர நாளில் நீராடி, சுவாமிநாதரை வழிபட்டால் பெரிய பதவிகள் தேடிவரும். கெளரவப் பதவிகள் கிடைக்கப் பெறுவார்கள்.
தை மாதம் அஸ்த நட்சத்திரத்தில் நீராடி கந்தபெருமானை வழிபட்டால் யாகங்கள் செய்த பலன் கிடைக்கும்.ஹோமங்கள் வளர்த்த புண்ணியம் பெருகும்.
மாசி மாதம் மக நட்சத்திர நாளில் நீராடி முருகப்பெருமானை வழிபடுவோருக்கு வீடுபேறு கிடைக்கும். இல்லறத்தில் அமைதியும் ஆனந்தமும் குடிகொள்ளும்.
பங்குனி மாதம் உத்திர நட்சத்திர நாளில் நீராடி, பங்குனி உத்திர நாயகனான வேலவனை வழிபட்டால், எல்லா இன்பங்களும் கிடைக்கும். சுகபோக ராஜயோகம் கிடைக்கப் பெறுவார்கள் என்பது உறுதி!
இன்னொரு விஷயம் இங்கே...
முருகப்பெருமானுக்கு உகந்த நாள் என செவ்வாய்க்கிழமையை ஆச்சார்யப் பெருமக்கள் சொல்கிறார்கள். ஆகவே, செவ்வாய்கிழமை நாளில், இங்கே சுவாமிமலைக்கு வந்து நீராடி, சுவாமிநாத சுவாமியை மனதார வேண்டிக் கொண்டால், மங்கல காரியங்கள் நடந்தேறும். தடைப்பட்ட விஷயங்கள் நடைபெறும். பிள்ளை பாக்கியம் கிடைக்கப் பெற்று, இல்லத்தில் சகல சுபிட்சங்களும் கிடைத்து நிம்மதியும் அமைதியுமாக வாழலாம் என்பது உறுதி என்கிறார்கள் பக்தர்கள்.
-வேல் வேல்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT