Last Updated : 08 Feb, 2018 02:48 PM

 

Published : 08 Feb 2018 02:48 PM
Last Updated : 08 Feb 2018 02:48 PM

வீட்டுக்கு வீடு பிரார்த்தனை செய்தால் கோயில் தீ விபத்துகளை தடுக்கலாம்! - ஜோதிடர் சந்திரசேகர பாரதி

தொடர்ந்து நடைபெற்று வரும் கோயில்களின் தீ விபத்துகளை, கூட்டுப் பிரார்த்தனையாலும் வீட்டுக்கு வீடு அவரவரும் செய்கிற வேண்டுதல்களாலும் குறைக்கவும் தடுக்கவும் முடியும். சனி ப்ரீதி ஹோமம் செய்வதும் ஆகமங்களுக்கு உட்பட்டு ஆலயங்களில் பூஜை செய்வதும் நல்ல பலன்களை வழங்கும் என்கிறார் ஜோதிடர் சந்திரசேகர பாரதி.

''12 ராசிகளில், தனுசு ராசி நெருப்பு ராசி என்று அழைக்கப்படுகிறது. தவிர, தனுசு ராசி என்பது குருவின் ராசி. குருவின் மூலத் திரிகோண ராசி. அதாவது குருவின் வீடு, மூலத்திரிகோண வீடு எல்லாமே தனுசுதான். அப்படி குருவின் வீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார் சனி பகவான்.

அதாவது நெருப்பு ராசியில் சனி பகவான் இருப்பதால், மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மிகப்பெரிய தீவிபத்து ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலின் ஸ்தல விருட்சம், தீப்பிடித்து எரிந்திருக்கிறது. இதுபோன்ற துர்சம்பவங்கள், இப்படியான சேர்க்கையால் நடந்தே தீரும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்'' என்கிறார் ஜோதிடர் சந்திரசேகர பாரதி.

அவர் மேலும் விவரித்தார்.

‘’தனுசு எப்படி நெருப்பு ராசியோ அதேபோல் தனுசின் முத்திரையைக் கொஞ்சம் பாருங்கள். வில் அம்புதான் தனுசின் முத்திரை. வில்லும் அம்பும் போருக்கான குறியீடுகள். எனவே, ஒருபக்கம் தீவிபத்துகளும் இன்னொரு பக்கம் போர் மூளும் அறிகுறிகளும் தென்படும். ஆனால் இவற்றால் பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் எந்த பாதிப்பும் இருக்காது என்பதை உறுதியாகச் சொல்லமுடியும்.

மேலும் இன்னொரு விஷயம்... செவ்வாய் கிரகமும் நெருப்புக் கிரகம் என்றும் இதன் கோள் நெருப்புக் கோள் என்றும் விவரிக்கின்றன ஜோதிட நூல்கள். நெருப்புக் கோளான செவ்வாயும் இப்போது விருச்சிகத்தில் இருக்கிறது. இன்னும் ஏறக்குறைய ஒரு மாதத்தில், அதாவது (மார்ச் 10ம் தேதி முதல்) நெருப்பு ராசியான தனுசுக்கு செல்லும். அதாவது நெருப்பு ராசியான தனுசுடன் நெருப்புக் கோளான செவ்வாயும் சேரும். அங்கேதானே உட்கார்ந்திருக்கிறார் சனி பகவான். எனவே இன்னும் இதன் தாக்கம் வீரியமாகும். ஆகவே ஆச்சார்யர்களாகட்டும் பொதுமக்களாகட்டும் அவர்கள் தெய்வ வழிபாட்டில் கூடுதல் கவனம் செலுத்துவது உத்தமம்!

சரி... கோயில்களிலேயே தீ விபத்தெல்லாம் நிகழ்ந்து கொண்டிருக்கிறதே... என்று கேட்கலாம்.

அதாவது, கோயில், மடம் என்பதெல்லாம் குருவுக்கான இடங்கள். குருவைக் குறிக்கும் தலங்கள். குருவின் ஆதிக்கம் நிறைந்த இடங்கள். குருவின் ராசி தனுசு. அந்த தனுசில் சனி பகவான் உட்கார்ந்திருக்கிறார். அதாவது கோயில்களுக்கு உரிய குரு பகவானின் இடத்தில், சனீஸ்வரர் அமர்ந்திருக்கிறார். அதனால்தான் கோயில்களில் இதுபோன்ற தீ விபத்துகள் நிகழ்கின்றன.

எல்லாக் கோயில்களிலும் அந்தந்த கோயில்களுக்கு உண்டான ஆகம விதிகளின்படி, ஹோமங்கள், விசேஷ பூஜைகள் மேற்கொள்வது அவசியம். பக்தர்களும் அவரவர் வீட்டில் இருந்து கொண்டு, இந்த வீரியம் குறைந்து, விபத்துகள் நிகழாமல் இருக்க பிரார்த்தனை செய்வது மிகுந்த பலனைத் தரும். காலையும் மாலையும் விளக்கேற்றி வழிபடுங்கள்.

குரு தனது சொந்தவீடான தனுசு ராசிக்கு, 2019ல் செல்கிறார். அப்போது குருவின் பலம் அதிகரிக்கும். அதன் பிறகு இந்த வீரியங்கள் குறையும். விபத்துகள் நிகழாது.

ஆன்மிக அமைப்புகளும் ஆச்சார்யப் பெருமக்களும் சனிப்ரீதி ஹோமங்கள் செய்யலாம். பக்தர்கள் அனைவரும் சேர்ந்து கூட்டுப் பிரார்த்தனை செய்வது கூடுதல் பலனை வழங்கும் என்கிறார் ஜோதிடர் சந்திரசேகர பாரதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x