Published : 25 Mar 2024 05:38 AM
Last Updated : 25 Mar 2024 05:38 AM
நாகப்படடினம்: குருத்தோலை ஞாயிறையொட்டி வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய வளாகத்தில் நேற்று ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை ஏந்தி பவனி சென்றனர்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய ஞாயிறு தனது பாடுகளை மக்களுக்கு உணர்த்த கழுதை மேல் அமர்ந்து ஜெருசலேம் நகர் நோக்கி சென்றதாக நம்பப்படுகிறது. அப்போது, குருத்தோலையை ஏந்தி,ஓசன்னா பாடலைப் பாடியபடி அவர் பவனியாகச் சென்றதை கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறாக அனுசரிக்கின்றனர். மேலும், அந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் கிறிஸ்தவ மக்கள் குருத்தோலை ஞாயிறன்று குருத்தோலையை ஏந்தி பவனியாகச் செல்வர்.
அதன்படி, நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நேற்று பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக, பேராலய வளாகத்தில் குருத்தோலை பவனிநடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்று, குருத்தோலைகளை ஏந்தியபடியும், ஓசன்னா கீர்த்தனைகளைப் பாடியவாறும் ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து, வேளாங்கண்ணி பேராலய கலையரங்கில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT