Last Updated : 08 Feb, 2018 09:30 AM

 

Published : 08 Feb 2018 09:30 AM
Last Updated : 08 Feb 2018 09:30 AM

பலம் தரும் ஸ்ரீசக்ர தரிசனம்!

ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆலயங்களில் தரிசனம் செய்தால், இரட்டிப்பு பலன்களும் பலமும் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

காஞ்சி காமாட்சி அம்பாள், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி, சென்னை காளிகாம்பாள், மாங்காடு காமாட்சி முதலான ஆலயங்களில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே!

சென்னை திருவொற்றியூரில் அமைந்துள்ள ஸ்ரீதியாகராஜர் கோயிலில், வட்டப்பாறை அம்மனின் சந்நிதி அமைந்திருக்கிறது. கடும் உக்கிரத்துடன் இருந்தாள் அம்மன். ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்து, அவளின் கோபத்தைத் தணித்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம்!

அதேபோல், திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் இருந்து அகிலத்தையே காத்தருளும் அகிலாண்டேஸ்வரியின் ஒரு காதில் ஸ்ரீசக்ர தாடங்கமும் இன்னொரு காதில் சிவசக்ர தாடங்கமும் அணிவித்தார் ஆதிசங்கரர்.

அதன் பிறகு அவள் உக்கிரம் தணிந்தது. கருணையே உருவெடுத்து அருள்பாலிக்கலானார்!

சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் திருக்கோயிலில், அம்பாள் சந்நிதியில் மேரு அமைக்கப்பட்டுள்ளது. அதில்,

அந்தந்த மாத்ருகா அட்சரங்கள் அனைத்தும் அந்தந்த ஸ்தானத்தில் வைக்கப்பட்டுள்ளன.

கொல்லூர் மூகாம்பிகை சக்தியும் சாந்நித்தியமும் கொண்டு அருள்பாலித்து வருகிறாள் அல்லவா. ஆதிசங்கரர் மூகாம்பிகை அம்பாளுக்கு முன்னே அவள் பார்வை படும்படியாக ஸ்ரீசக்ரப் பிரதிஷ்டை செய்தார் என்கிறது அந்தக் கோயிலின் ஸ்தல புராணம்!

நேபாளத்தில் அமைந்துள்ள ஸ்ரீகுஹேஸ்வரி கோயிலில் உள்ள தாமரை மலரின் மொட்டுப் பகுதிக்கு நடுவே ஸ்ரீசக்ரம் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு அருகில் உள்ள திருப்போரூர் முருகப் பெருமான் கோயிலின் பிராகாரத்தில், சிதம்பர சுவாமிகள் ஸ்ரீசக்ர சந்நிதியை அமைத்து வழிபட்டார் என்கிறது ஸ்தல புராணம்.

காசியம்பதியில், அனுமன் காட்டில் முத்துசாமி தீட்சிதர் பூஜித்து வழிபட்ட சிவலிங்கத் திருமேனியின் உச்சிப் பகுதியில் ஸ்ரீசக்ரம் பொறிக்கப்பட்டுள்ளது என்றெல்லாம் விவரிக்கிறார் ரமேஷ் ஜம்புநாத குருக்கள்.

திருவிடைமருதூரில் மூகாம்பிகை முன் மகாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தேவி உபாசகரான பாஸ்கரராயர் பூஜித்தது இந்த மகாமேரு.

நெரூர் சதாசிவ பிரம்மேந்திராள் சுவாமிகள், தஞ்சாவூரில் உள்ள புன்னை நல்லூர் மாரியம்மனின் முன்னே, ஸ்ரீசக்ரப் பிரதிஷ்டை செய்து பூஜித்தார்.

ஸ்ரீசக்ரம், மகிமை மிக்கது. வலிமையானது. சக்தியையும் சாந்நித்தியத்தையும் கொண்டது. ஸ்ரீசக்ரப் பிரதிஷ்டை செய்த ஆலயங்களைத் தரிசிப்பதும் வழிபடுவதும் பிரார்த்தனை செய்வதும் பன்மடங்குப் பலன்களைத் தரவல்லது என்கிறார் ரமேஷ் ஜம்புநாத குருக்கள்.

ஸ்ரீசக்ர வழிபாடு செய்வோம். வளமும் நலமும் பெறுவோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x