Published : 23 Mar 2024 09:06 AM
Last Updated : 23 Mar 2024 09:06 AM

பங்குனி தேர் திருவிழாவையொட்டி உறையூர் கமலவல்லி நாச்சியாருடன் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சேர்த்தி சேவை

கமலவல்லி நாச்சியாருடன் சேர்த்தி சேவையில் பக்தர்களுக்கு சேவை சாதித்த நம்பெருமாள். படம்: ர.செல்வமுத்துகுமார்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி தேர் திருவிழா மார்ச் 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் 6-ம் நாளான நேற்று அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து தங்கப் பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி, உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயிலுக்கு முற்பகல் 11 மணியளவில் வந்தடைந்தார்.

தொடர்ந்து, சேர்த்தி மண்டபத்தில் பிற்பகல் 2 மணியிலிருந்து நள்ளிரவு 12 மணி வரை கமலவல்லி நாச்சியாருடன் சேர்த்தி சேவை சாதித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

பின்னர், நம்பெருமாள் அங்கிருந்து புறப்பட்டு வெளி ஆண்டாள் சந்நிதியில் மாலை மாற்றிக் கொண்டு, ரங்கம் ரங்கநாதர் கோயிலில் உள்ள கண்ணாடி அறையை சென்றடைந்தார்.

பங்குனித் தேர் திருவிழாவின் 9-ம் நாளான வரும் 25-ம் தேதி ரங்கநாதர் கோயில் தாயாரான ரங்கநாச்சியார் - நம்பெருமாள் சேர்த்தி சேவை நடைபெற உள்ளது.முக்கிய நிகழ்ச்சியான பங்குனித் தேரோட்டம் வரும் 26-ம் தேதி நடைபெற உள்ளது.விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் செ.மாரியப்பன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x