Published : 23 Mar 2024 05:54 AM
Last Updated : 23 Mar 2024 05:54 AM

வாரந்தோறும் 3 நாட்கள் நவக்கிரக ஆன்மிக சுற்றுலா: தமிழ்நாடு சுற்றுலாத் துறை தகவல்

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில்

சென்னை: தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் வாரந்தோறும் நவக்கிரக ஆன்மிக சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுலாத் துறை இயக்குநர் சி.சமயமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னையிலிருந்து நவக்கிரக கோயில்களுக்கு சென்று திரும்பும் சுற்றுலா திட்டம் 3 நாட்களைக் கொண்டது. நவக்கிரக சுற்றுலா தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணிக்கு சுற்றுலாத் துறை அலுவலகத்திலிருந்து பேருந்து புறப்படும். சனிக்கிழமை, நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய் தலம்) தொடங்கி, திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் (புதன் தலம்), மயிலாடுதுறை மாவட்டம் கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி கோயில் (கேது தலம்), புதுச்சேரி மாநிலம் காரைக்கால் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் (சனி தலம்), திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில் (குரு தலம்) ஆகிய கோயில்களுக்கு சென்று இரவு தஞ்சாவூர் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதியில் சுற்றுலாப் பயணிகள் தங்க வைக்கப்படுவார்கள்.

இதையடுத்து ஞாயிற்றுக் கிழமை காலை தஞ்சாவூர் மாவட்டம் திங்களூர் கைலாசநாதர் கோயில் (சந்திரன் தலம்) தொடங்கி,திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில் (ராகு தலம்), திருமங்கலக்குடி சூரியனார் கோயில் (சூரியன் தலம்), கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோயில் (சுக்கிரன் தலம்) ஆகிய இடங்களுக்குச் சென்று திங்கள்கிழமை காலை 5 மணிக்குசென்னை சுற்றுலாத் துறை வளாகத்தை வந்தடையும். இந்த கோயில்கள் குறித்த தகவல் அனைத்தையும் இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

பேருந்து கட்டணம், தங்கும் விடுதி கட்டணம் அனைத்தும் சேர்த்து ரூ.5,200 முதல் ரூ.8,600 வரை டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் www.ttdconline.com என்ற இணையதளத்தின் மூலமோ, சென்னை சுற்றுலாத் துறை தலைமை அலுவலகத்துக்கு நேரில் வந்தோ இந்த ஆன்மிக சுற்றுலா பயணத் திட்டத்துக்கு முன்பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x