Published : 22 Mar 2024 06:56 AM
Last Updated : 22 Mar 2024 06:56 AM

‘ஆரூரா, தியாகேசா’ பக்தி கோஷம் முழங்க திருவாரூர் தியாகராஜர் கோயிலில் ஆழித்தேரோட்டம்

திருவாரூரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் அசைந்தாடி வந்த ஆழித்தேர். படம்: ஆர்.வெங்கடேஷ்

திருவாரூர்: திருவாரூரில் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, ‘ஆரூரா, தியாகேசா’ என பக்தி முழக்கத்துடன் ஆழித் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில், சைவ சமய தலைமை பீடங்களில் ஒன்றாக விளங்குகிறது. இது சைவ சமயக் குரவர்களான அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற ஸ்தலம் ஆகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஆழித் தேரோட்டம் நடைபெறும்.

இத்தேரோட்டம் ஆயில்ய நட்சத்திரத்தில் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், பல்வேறு காரணங்களால் 28 ஆண்டுகளாக பல்வேறு நாட்களில் நடத்தப்பட்டு வந்தது. 2021-ம் ஆண்டு முதல் பங்குனி ஆயில்ய நட்சத்திரத்தில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பங்குனி மாத ஆயில்ய நட்சத்திரமான நேற்று ஆழித் தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, நேற்று முன்தினம் இரவு ஆழித் தேரில் தியாகராஜர் எழுந்தருளினார். தொடர்ந்து, நேற்று காலை மாவட்ட ஆட்சியர் சாரு, திருவாரூர் எஸ்.பி. ஜெயக்குமார் உள்ளிட்டோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். முன்னதாக நேற்று அதிகாலை விநாயகர், முருகன் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.

ஆழித் தேரோட்டத்தை தொடர்ந்து அம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்கள் இழுக்கப்பட்டன. சுமார் 500 மீட்டர் நீளமுடைய 4 வடங்கள் கட்டப்பட்டு, ஆயிரக்கணக்கானபக்தர்கள் வடம் பிடித்து ஆழித் தேரை இழுத்துச் சென்றனர். மாநிலம் முழுவதும் இருந்து வந்திருந்த சிவனடியார் திருக்கூட்டத்தினர் பஞ்ச வாத்தியங்களை இசைத்து, ‘ஆரூரா, தியாகேசா’ என பக்தி கோஷங்கள் முழங்க தேர் இழுக்கும் பக்தர்களுக்கு உற்சாகமூட்டினர். காலை 8.50 மணிக்கு புறப்பட்ட ஆழித்தேர் கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக மாலை 6 மணிக்கு மீண்டும் நிலையை அடைந்தது.

விழாவில், தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ல மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் சத்தியஞான மகாதேவ பரமாச்சாரிய சுவாமிகள், திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கலைவாணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பாதுகாப்பு பணியில் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த 2 ஆயிரம் போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, தேரோட்டம் நடைபெறும் அனைத்துவீதிகளிலும் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

நேற்று அதிகாலை 5 மணியளவில் லேசான மழைத்தூறல் இருந்தது. தொடர்ந்து, காலை 9.45மணிவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதன்பிறகும்வெயிலின் தாக்கம் அதிகம் இல்லாதால் பக்தர்கள் ஆர்வத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x