Published : 21 Mar 2024 09:45 AM
Last Updated : 21 Mar 2024 09:45 AM

திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலில் ஆழித் தேரோட்டம் கோலாகலம்

படம்: வெங்கடேஷ்

திருவாரூர்: ஆரூரா, தியாகேசா என்ற பக்தி முழக்கத்துடன் திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலில் ஆழித் தேரோட்டம் இன்று (வியாழக் கிழமை) காலை 8.30 மணிக்கு தொடங்கியது.

திருவாரூர் தியாகராஜ ஸ்வாமி பங்குனி உத்திர பெருவிழா கடந்த மாதம் 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று தொடங்கி ஒவ்வொரு நாளும் சுவாமி வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில், நேற்று இரவு 10:45 மணிக்கு தியாகராஜ சுவாமி அஜபா நடனத்துடன் திருத்தேரில் எழுந்தருளினார்.

தொடர்ந்து இன்று (வியாழன்) அதிகாலை 5.20 மணிக்கு விநாயகர் தேரும், 5.30 மணிக்கு சுப்பிரமணியர் தேரும் வடம் பிடித்து இழுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஆழித் தேரோட்டம் காலை 8:50 மணிக்கு தொடங்கியது. ஆழித் தேரோட்டத்தில் பங்கேற்பதற்காகவும் தேரை வடம் பிடித்து இழுப்பதற்காகவும் தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவாரூர் நகரில் குழுமியுள்ளனர் .

ஆரூரா, தியாகேசா என பக்தி முழக்கம் முழக்கத்துடன் ஆழித் தேரோட்டம் நடைபெற்று வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட பஞ்ச வாத்திய குழுவினர், பஞ்ச வாத்தியங்களை வாசித்து ஆழித் தேரோட்டத்தில் வடம் பிடித்து இழுத்து வரும் பக்தர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்கள்.

ஆழித் தேரை தொடர்ந்து அம்பாள், சண்டிகேஸ்வரர் தேரும் வடம் பிடித்து இழுக்கப்பட உள்ளது. ஆழித் தேரோட்டத்தை ஒட்டி, 1500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆழித்தேரோட்டத்தை ஒட்டி, இன்று திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. திருவாரூர் நகருக்கு மன்னார்குடி, தஞ்சாவூர், கும்பகோணம், திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டினம் மார்க்கங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x