Published : 18 Jan 2018 11:04 AM
Last Updated : 18 Jan 2018 11:04 AM
பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்
வார்த்தைகளை சாதாரணமாகக் கடந்து போய்விடமுடியாது. வெறுமனே பேச்சுதானே என்றெல்லாம் ஒதுக்கிவைத்துவிடமுடியாது. வார்த்தைகளுக்கு இடையேதான் பரஸ்பரம் மனிதர்களுக்குள் இருக்கிற பாசமும் தொடர்பும் பந்தமும் நட்பும் இருக்கிறது. அந்த வார்த்தையைக் கொண்டே அந்தப் பாசத்தின் அடர்த்தியை, தொடர்பின் நெருக்கத்தை, பந்தத்தின் வலிமையை நட்பின் மேன்மையை உணர்ந்துவிடமுடியும்.
இன்னும் இருக்கின்றன வார்த்தைகளின் வலிமைகள்.
‘நல்லா இருக்கீங்களா’ என்ற வார்த்தையை வெறும் சம்பிரதாயச் சொல்லாக மாற்றிவிட்டோம். அப்படி மாறிவிட்டது. ஆனால் இந்த ‘நல்லா இருக்கீங்களா’ எனும் வார்த்தையில் இருந்தே, பலருக்கும் துவங்குகிறது, நன்றாக இருப்பதற்கான வாழ்க்கை!
‘என்ன ரொம்ப இளைச்சீட்டீங்க’ என்று கேட்பதற்கு உள்ளே இருக்கிற பிரியத்தை சட்டென்று உணர்ந்துகொள்ள முடியும். ‘உடம்பைக் கவனிங்க, ஜாக்கிரதை’ என்று எச்சரிக்கை சொல்கிற மனிதர்கள் யாருக்கெல்லாம் அதிகமோ, அவர்கள் பாக்கியசாலிகள்.
மேலும் நிறைய மனிதர்கள் இங்கே, ஏதோவொரு வார்த்தையை எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கிறவர்களாகவே இருப்பதைக் கவனித்திருக்கலாம்.
‘வாழ்க வளமுடன்’ என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லுவார்கள் சிலர். எனக்குத் தெரிந்து கோயில் பட்டாச்சார்யர் ஒருவர், ‘ராதேகிருஷ்ணா ராதேகிருஷ்ணா’ என்று அடிக்கடி சொல்லுவார். இன்னொருவர், ‘நாராயணா’ எனும் சொல்லையும் சிவாச்சார்யர் அண்ணா ஒருவர், ‘தாயே... தாயே...’ என்று அம்பாளைக் குறித்தும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். இன்றைக்கு, பகவான் யோகி ராம்சுரத்குமாரின் பக்தர்கள் பலரும், பேச்சின் ஆரம்பத்திலும் நடுவிலும் இடையிடையேயும் பேச்சின் நிறைவிலுமாக ‘யோகி ராம்சுரத்குமார்’ என்று சொல்லுவதைக் கேட்டிருப்போம். நானே கூட அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பேன்.
குருவின் நாமம், இறைவனின் திருநாமம், நல விசாரிப்புகள் கடந்து பல வார்த்தைகள் இருக்கின்றன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான சொற்களை அடிக்கடிப் பயன்படுத்துவார்கள். ‘நல்லாருக்குல்ல’ என்று ஒருசிலரும் ‘பரவாயில்லயே...’ என்று இன்னொரு சிலரும் சொல்லுவார்கள். ‘என்ன சொல்றீங்க’ என்று சிலர் சொல்லிவிட்டுக் கேட்பார்கள். ‘நல்லது’ என்பார்கள். ‘பெரியவிஷயம்’ என்பார்கள். ‘சான்ஸே இல்லை’ என்பார்கள். ‘சூப்பர்ல’ என்பார்கள்.
பகவான் யோகி ராம்சுரத்குமாரின் திருநாமத்தைச் சொல்லிக் கொண்டு, அப்படிச் சொல்வதாலேயே பலன் பெற்றவர்களும் பலம் பெற்றவர்களும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். நல்ல நல்ல அதிர்வுகள் கொண்ட வார்த்தைகளைச் சொல்லி, ஊக்கமும் உத்வேகமுமாக வாழ்பவர்கள் உண்டு.
பகவான் யோகி ராம்சுரத்குமார், ராம்சுரத் குன்வராக இருந்தபோது, காசிக்கு அருகில் தன் கிராமத்தில் இருந்துகொண்டே, திருவண்ணாமலையில் இருக்கும் ரமணரிடம் ‘என்னை ஆட்கொள்ளுங்கள்’, என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்றெல்லாம் கேட்டார். அப்போது, பகவான் ரமண மகரிஷி, திருவண்ணாமலையில் ஆஸ்ரமத்தில் இருந்துகொண்டே சகலத்தையும் அறிந்தபடி... இங்கிருந்தே சொன்னார்... ‘சரி’ என்று!
அவ்வளவுதான். ராம்சுரத் குமாரின் முகம், சட்டென்று தாமரையாயிற்று. மலர்ந்து போனார். ’சரி... சரி... சரி...’ என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்தார். இந்த சரி என்கிற சொல், அவருக்குள் ஏகப்பட்ட மாற்றங்களை உண்டுபண்ணியிருந்தன. வீட்டில் , பள்ளியில்., தெருவில், கங்கைக்கரையில் என எங்கே, யாரைப் பார்த்தாலும் ‘சரி...’ ‘சரி...’ என்றே சொல்லி வந்தார்.
அவர்களுக்கு புரியவே இல்லை. ‘சரி’ என்ற வார்த்தை என்ன பாஷை என்று கூட அதைக் கேட்டவர்களுக்குத் தெரியவில்லை. ஆனால், முகத்தில் சிரிப்பை வைத்துக் கொண்டு, மிகுந்த உற்சாகத்துடன், கண்கள் மின்ன... இவர் யாரைப் பார்த்தாலும் சொன்ன சரி சரி என்று சொன்ன வார்த்தைகள், அவர்களுக்கும் தொற்றிக் கொண்டது. ‘என்ன அர்த்தம்னு தெரியலை. ஆனா நல்ல அர்த்தமாத்தான் இருக்கும் போல’ என்று ஒருவரையொருவர் சொல்லிக் கொண்டார்கள்.
ராம்சுரத்குன்வர், இந்த சரி எனும் ரமணர் சொன்ன வார்த்தையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். சரி எனும் வார்த்தையைத் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தார். சில தருணங்களில், சரி என்று வாய்விட்டு சொல்லிவிட்டு, நெகிழ்ந்து போனார். அமைதியானார். அவரால் சட்டென்று உள்ளுக்குள் போகமுடிந்தது. உள்ளுக்குள் இருந்து வெளியே பார்க்கமுடிந்தது. கண்களை மூடிக்கொண்டிருந்தாலும் , சுற்றி யார்யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதையெல்லாம் தெரிந்து கொண்டார்.
அப்படி உள்வாங்கி தியானிக்கிற தருணங்களிலும் ’சரி..’ எனும் வார்த்தை, மந்திரம் போல் ஓடிக்கொண்டே இருந்தது.
சரி என்று சிக்னல் கிடைத்துவிட்டது. இனி, இந்த வண்டி கிளம்பவேண்டும், அவ்வளவுதான்
என்பதாகவே நினைத்துக் கொண்டிருந்தார். அப்படியான நினைப்பே இன்னும் குதூகலத்தைக் கொடுத்தது அவருக்கு! ’சரி... கிளம்பவேண்டியதுதான்’ என உள்ளே சொல்லிக் கொண்டே இருந்தார்.
ராம்சுரத் குன்வருக்குள் சரி எனும் வார்த்தை ஒட்டிக்கொண்டதற்கு இன்னொரு சுவாரஸ்யமான காரணமும் உண்டு. ஆமாம்... பகவான் யோகி ராம்சுரத்குமார் கற்றுக் கொண்ட தமிழ் வார்த்தை... ‘சரி!’
இதுதான் முதன்முதலாக அவர் கற்றறிந்த தமிழ்ச் சொல். ஆகவே இன்னும் தித்தித்தது இந்தச் சொல்!
இந்த நிலையில், ஒருநாள்... திருவண்ணாமலைக்குப் பயணப்பட்டார் ராம்சுரத் குன்வர்.
பகவான் ரமண மகரிஷியை எப்போது வேண்டுமானாலும் தரிசிக்க முடியும். யார் வேண்டுமானாலும் தரிசிக்கலாம். எல்லோருடனும் சிரித்து உரையாடுவார் ரமணர்.
ஆனால் சமீப காலமாக, எல்லா நேரமும் எல்லோரும் ரமண மகரிஷியை தரிசிப்பதில்லை. குறிப்பிட்ட நேரங்கள் மட்டுமே தரிசனம் தந்து வந்த காலம் அது.
ஏன்? எதனால்?
பகவான் ரமணருக்கு கேன்ஸர்.
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜெயகுரு ராயா!
- ராம்ராம் ஜெய்ராம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT