Published : 08 Jan 2018 02:36 PM
Last Updated : 08 Jan 2018 02:36 PM
பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்
கடவுள் எல்லா இடங்களிலும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான், எல்லோருடனும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் தாயைப் படைத்தார் என்பார்கள். அதேபோல், கடவுள், எல்லா இடங்களிலும் தாம் நீக்கமற நிறைந்திருக்க வேண்டும் என்பதற்காக, எல்லோருக்கும் அருளை வாரி வழங்குவதற்காகவும் மகான்களை உண்டுபண்ணினார் என்றும் சொல்லிச் சிலாகிக்கிறார்கள் ஆன்மிகப் பெரியோர்.
பள்ளி வகுப்பில், லீடர் என்று ஒருவரைத் தேர்ந்தெடுப்பார் ஆசிரியர். அவர் வகுப்புக்கு வராத நேரத்தில், அங்கே ஒழுக்கத்தையும் பணிவையும் கட்டிக் காபந்து செய்யக்கூடியவராக, மாணவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட லீடர் இருப்பார். கடவுளானவர், மனிதர்களில் இருந்தே மகான்களைக் கண்டுபிடித்தார். அந்த மகான்கள், கடவுளுக்கு நிகராகவும் கடவுளாகவுமே பார்க்கப்பட்டார்கள். வணங்கப்பட்டார்கள். வழிபாட்டுக்கு உரியவர்களானார்கள்.
ரிஷிகளின் தவத்தால், மக்களுக்குப் பலன்கள் கிடைத்தன. வேதவிற்பன்னர்களின் மந்திர ஜபத்தால் மக்கள் நலம் பெற்றார்கள். அதேபோல், மகான்களின் கருணைப் பார்வையால் அருளைப் பெற்றார்கள். குரு பார்க்க கோடி நன்மை என்பது, நவக்கிரகங்களில் உள்ள குரு பகவானின் பார்வையைக் குறித்துச் சொல்லப்பட்டிருந்தாலும், இந்த வாசகம் மகான்களுக்கும் பொருந்தும். ஏனெனில், மகான்கள் என்பவர்களும் குருமார்களே! நமக்கெல்லாம் குருவாக இருந்து நமக்கு வழிகாட்டியாக இருந்து, வழிக்குத் துணையாகவும் இருந்து நம்மை செம்மைப் படுத்துகிறார்கள்!
பகவான் ரமண மகரிஷியின் 'நான் யார்...’ எனும் ஒற்றைக் கேள்வி, அவரைத் தேடி வந்த பக்தர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருந்தது. அவர்களின் எண்ணங்களுக்கும் சிந்தனைகளுக்குமான திறவுகோலாக இருந்தன. இந்தக் கேள்வியும் பகவான் ரமணரின் அருட்பார்வையும் தம்மை ஏதோ செய்வதாக உணர்ந்தார்கள் பக்தர்கள்.
இந்தச் செய்தி மெல்ல மெல்லப் பரவியது. தமிழகம் முழுவதும் பரவியது. மாவட்ட வித்தியாசங்கள் இல்லாமல், எங்கிருந்தெல்லாமோ அவரைத் தேடி வந்தார்கள் பக்தர்கள். தமிழே தெரியாதவர்களும் கூட, ரமண மகரிஷியைத் தெரிந்து வைத்திருந்தார்கள். கர்நாடகத்தில் இருந்தும் ஆந்திரத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், பகவான் ரமணரை அனுதினமும் தரிசிக்க வந்து கொண்டே இருந்தார்கள்.
வந்திருக்கும் பக்தர்கள் சிலரைப் பார்ப்பார் பகவான் ரமணர். இன்னும் சிலரிடம் இரண்டொரு வார்த்தைகள் பேசுவார். அதிலும் சிலரிடம் ஏதும் பேசாமல், சிரித்தபடி ஆசி வழங்கி அனுப்பி வைப்பார். சில சமயங்களில், வந்திருப்பவர்களிடம் நிறையப் பேசுவார். அந்தப் பேச்சு, வந்திருப்பவருக்கு மட்டுமே ஆனதாக இருக்காது. அதாவது கேட்பவருக்கு மட்டுமேயானதாக இருக்காது. அது, அன்றைக்கு வந்த எல்லோருக்குமான பதில். எல்லோருக்கும் சொல்ல விரும்புவதை, வந்திருப்பவர், வராதவர் என எல்லோருக்கும் சொல்லவிரும்புவதை, விளக்குவார் ரமண பகவான்!
இன்னும் சில தருணங்களில், தனக்கு அருகில் இருப்பவரைக் கொண்டே எல்லோருக்குமான பாடத்தைச் சொல்லித் தருவார் பகவான் ரமண மகரிஷி.
அப்படிதான் ஒருமுறை...
கணபதி முனிவரிடம் பேசினார் பகவான். இவர், ரமணரின் சீடர்களில் ஒருவர். அதாவது பகவான் ரமணருக்கு நெருக்கமாக இருந்த சீடர்களில், முக்கியமானவர்.
'நான்ம் நான் என்பது என்ன? இந்த 'நான்’ என்பது எங்கிருந்து புறப்படுகிறது. அந்தப் புறப்படும் இடத்தை உள்ளுக்குள் கவனித்தால், மனமானது அங்கே ஒடுங்கிப் போகும். இதையே தவம் என்கிறோம்.
அதாவது, ஒரு மந்திரத்தைக் கொண்டு ஜபம் செய்கிறோம். அந்த மந்திரத்தைக் கொண்டு ஜபம் பண்ணினால், அந்த மந்திரத் த்வனியானது, எங்கிருந்து புறப்படுகிறது என்று யோசித்திருக்கிறோமா? யோசித்துப் பார்த்திருக்கிறோமா? அப்படி புறப்படும் இடத்தைக் கவனித்தால், மனம் அங்கே ஒடுங்கிக் கிடப்பதைப் புரிந்து கொள்ளலாம்.
அதுதான் உண்மையான தவம். அதுவே உண்மையான ஜபம். அதுதான் சத்தியமான பிரார்த்தனை. அதுவே கடவுளைத் தேடுதல். அதுதான் தன்னையே தேடுதல்.’ என்று ரமணர் சொல்ல, சுற்றியிருந்தவர்கள் வியந்து போய் மலைத்து நின்று அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
மகிழ்ச்சி குறித்து நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான விஷயங்கள் இருக்கிண்றன. கடற்கரைக்குச் சென்றால் மகிழ்ச்சி என்பார்கள் சிலர். கோயிலுக்குச் சென்றால் மகிழ்ச்சி கிடைப்பதாக சிலர் சொல்லுவார்கள். மிகப்பெரிய கூட்டத்துடன் இருப்பதே மகிழ்ச்சி என்று சிலரும் தனியே அமர்ந்திருப்பதே மகிழ்ச்சி என்று சிலரும் சொல்லுவார்கள்.
சொந்த ஊருக்குப் போனால் மகிழ்ச்சி என்றும் பார்க்காத ஊருக்கு, போகாத ஊருக்குப் போனால் மகிழ்ச்சி என்றும் இன்னும் சிலர் விளக்கம் தருவார்கள். மலை மகிழ்ச்சி என்பார்கள். மழை மகிழ்ச்சி என்று சொல்லுவார்கள். இருள் மகிழ்ச்சி என்பார்கள். ஒளி மகிழ்ச்சி என்று பலர் சொல்லுவார்கள்.
உண்மையில், மகிழ்ச்சி என்பது கடலிலும் கரையிலும் இல்லை. மலையிலும் மழையிலும் இல்லை. இருளிலும் ஒளியிலும் இருப்பது மகிழ்ச்சி இல்லை.
பகவான் ரமணர், தன்னைப் பார்க்க வந்திருந்த பக்தர்களிடமும் சீடர்களிடமும் சொன்னார்.
'மகிழ்ச்சி என்பது மனிதனுக்கு உள்ளேயே இருப்பது. அதுவே வெளிப்படுகிறது. அல்லது அதை வெளிப்படுத்துகிறோம். அப்படி வெளிப்படுவதும் வெளிப்படுத்துவதும் மகிழ்ச்சி. நமக்கு வெளியே உள்ள பொருட்களாலும் குணங்களாலும் வருவதே மகிழ்ச்சி என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அப்படி அல்ல! நம்முள்ளேயே இருப்பது. நமக்குள்ளேயே இருப்பது... அதுவே மகிழ்ச்சி!
இதைத் தெரிந்து கொள்ள என்ன வழி? இதை வெளிப்படுத்துவது எப்படி? இதற்குத்தான் குரு அவசியம். குரு என்பவர் ஒவ்வொருவருக்கும் அவசியம். மன விகாரங்களாகிய இருண்ட வனாந்திரத்தில் இருந்து, மனிதனை விடுவிக்க, குரு ஒருவரால் மட்டுமே முடியும். அவரால் மட்டும் இவை சாத்தியம். உபநிஷத்துகள் இதைத்தான் பன்னெடுங்காலமாக வலியுறுத்துகின்றன’ என்று அருளினார் ரமண பகவான்!
நம்மைப் போன்ற சாமான்யர்களுக்கு பகவான் ரமணரின் அருளுரைகள், புரிந்தது போலவும் இருந்தது. புரியாதது போலவும் இருந்தது. பலர், இன்னும் குழம்பினார்கள். இது நல்லதுதான். குழம்பினால்தான் தெளிய முடியும். சாமான்ய மக்களின் ஆரம்ப பாடம்... குழப்பம்தான். அதில் இருந்து அடுத்த பாடம்... தெளிவு!
ராம்சுரத் குன்வர், பகவான் ரமண மகரிஷியின் ஆஸ்ரமத்தில் இருந்து கொண்டு, அவரை உள்வாங்கிக் கொண்டார். அவரின் ஒவ்வொரு கருத்துகளும் விளக்கங்களும், ராம்சுரத் குன்வரை என்னவோ செய்தது.
அதில் அவர் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட விஷயம்... குரு என்பவர் அவசியம். குரு என்பவர் மிக மிக அவசியம்!
சரி... என்னுடைய குரு யார்?
ராம்சுரத் குமார் உள்ளே கேட்டுக் கொண்டார்.
அவரின் அடுத்த பயணம் அங்கிருந்து தொடங்கியது.
குரு என்பவர் யார்? தெரியவில்லை. குரு என்பவர் எப்படி இருப்பார்? தெரியாது. குரு என்பவர் எங்கே இருக்கிறார்? அதுவும் தெரியவில்லை.
ஆனாலும் சதாசர்வ காலமும் குருநாதர் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தார் ராம்சுரத் குன்வர்!
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜெயகுரு ராயா!
- ராம் ராம் ஜெய்ராம்
தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT