Published : 29 Nov 2017 09:12 AM
Last Updated : 29 Nov 2017 09:12 AM
அடியார்க்கு அடியேன் என்றொரு வாசகம் உண்டு. கேள்விப்பட்டிருக்கிறீர்கள்தானே. அடியவர்களுக்குச் செய்யும் தொண்டு, இறைவனுக்குச் செய்யும் தொண்டு. கடவுளை நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு, அடியவர்களுக்கு, அடியவராக சேவை செய்வதே உயர்ந்த பண்பு என்கின்றன ஞான நூல்கள். நமக்கு முன்னே, பல்லாயிரம் ஆண்டுகளாக பலரும் அப்படித்தான் வாழ்ந்து காட்டிச் சென்றிருக்கிறார்கள்.
கடவுளை, கடவுளாகவே பார்க்க வேண்டும் என்றில்லை. ‘ஏம்பா... இப்படி என்னை சோதிக்கிறே’ என்று சந்நிதியின் முன்னே கடவுளிடம் பேசுகிறோம். ‘எனக்கு என்ன தரணும்னு உனக்குத் தெரியும். அதனால உங்கிட்ட, இதைக்கொடு, அதைக்கொடுன்னு கேக்கமாட்டேன்’ என்று நம் அப்பாவிடம் பேசுவது போல், அம்மாவிடம் சொல்வது போல், சகோதரர்களிடம் முறையிடுவது போல் கடவுளிடம் பேசுகிறோம்.
கடவுளை நம்மில் ஒருவராகப் பார்க்கத் தொடங்குவதுதான், பக்தியின் அடுத்தக்கட்டம். இறைவனுக்கு என்ன படைப்பது என்பதையெல்லாம் அறியாத, அறிவதில் விருப்பம் இல்லாத, ஓர் பக்தன், தான் சாப்பிடுவதற்கு வைத்திருந்த மாமிசத்தை, புலாலை, அசைவத்தை ஆண்டவனுக்குப் படைத்ததைப் படித்திருப்போம். தன் காலையே தூக்கி, இறைத் திருமேனியின் முகத்தில், கண்ணில் வைத்து, அந்தக் கண்ணில் இருந்து வழிந்த ரத்தம் துடைத்து, தன் கண்ணையே பிடுங்கி கடவுளுக்கு நேத்ரம் சமர்ப்பித்த, கண்ணப்ப நாயனாரையும் அவரின் பக்தியையும் இன்றைக்கும் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
கடவுள் எனக்கு நண்பன் என்றவர்களும் இருக்கிறார்கள். இருந்திருக்கிறார்கள். காதலுக்குத் தூது போகாத நண்பர்களே உலகில் இல்லைதானே. நம் நண்பர்களுக்காக நாமும் நமக்காக நம் நண்பர்களும் தூது போயிருப்பார்கள்தானே. அப்படி, கடவுளையே தன் தோழனாக உறவு பாராட்டிய சுந்தரருக்காக, சிவபெருமானே இறங்கி வந்து, பரவை நாச்சியாரிடம் காதல் தூது சென்ற சரிதத்தையும் படித்து வியந்திருப்போம்.
அவ்வளவு ஏன்... முருகன் என்றொரு நண்பன். எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில், சலூன் கடை வைத்திருக்கிறான். ரொம்ப நல்லவன். மிகுந்த சிவ பக்தன். தோள் பட்டையில் சிவலிங்கம் தரித்தும் வீட்டில் சிவலிங்கத்தை வைத்தும் பூஜை செய்கிறவன்.
என்னை ஆச்சரியப்பட வைத்த மனிதர்களில் முருகனும் ஒருவன். அந்த நண்பனின் பக்தி என்னை வியக்கவைக்கும். சிலிர்க்கச் செய்யும்.
திடீர் திடீரென்று கடை சார்த்திவிடுவான். திறந்திருக்கவே மாட்டான். ‘என்னய்யா... நேத்திக்கி இந்தப் பக்கமா போகும்போது பாத்தேன். கடை திறக்கலியா’ என்று கேட்டால், ‘ஆமாங்கய்யா. நேத்திக்கி அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கல்யாணம்யா. அதான் கடைக்கு லீவு விட்டுட்டேன்’ என்பான்.
கல்யாணமா. ஓ... கல்யாண நாளா. முருகனின் அப்பாவும் அம்மாவும் அவனுடைய இளம் வயதிலேயே இறந்துவிட்டதைச் சொல்லியிருக்கிறானே. ‘என்னய்யா சொல்றே?’ என்று கேட்டால்... அவன் சொன்ன
பதிலைக் கேட்டால், அசந்துபோவீர்கள்.
‘ஐப்பசி மாசம், திருக்கல்யாணம் நடக்கும் கோயில்ல. அம்மையப்பனுக்கு கல்யாணம் நடக்கும்போது, நாம கடைல இருந்தா எப்படி? அந்தக் கல்யாணக் கோலத்தைப் பாக்கறதுக்காக, அகத்தியரே ஆசைப்பட்டிருக்கார்னா பாத்துக்கோங்கய்யா. அதான் போயிட்டேன்’ என்று சாதாரணமாகச் சொன்னான்.
சலூன் கடை வைத்திருக்கும் இனிய நண்பன் முருகன், சிவபெருமானை அப்பாவாகவும் பார்வதிதேவியை அம்மாவாகவும் நினைத்து, பக்தி செலுத்திக்கொண்டிருக்கிறான் ‘அன்னாபிஷேகத்துக்கு போயிருந்தேங்கய்யா. அப்பா செம சூப்பரா இருந்தாரு’ என்று சிலாகிக்கிற பக்தர்கள், இங்கே நிறையவே உண்டு.
கல்பாத்தி ஸ்ரீநிவாச ஐயர் என்கிற சாமி அண்ணாவும் அறுபது எழுபது வருடங்களுக்கு முன்பு அப்படி வாழ்ந்தவர்தான். ஐயப்ப சுவாமியை தோழனாகவும் ஐயப்ப பக்தர்களை ஐயப்ப சுவாமியாகவும் வரித்துக் கொண்டு வாழ்ந்தவர்.
அப்படி வாழ்வதற்கு சாமி அண்ணாவின் தம்பி கிருஷ்ண ஐயர் வலது கரமாகத் திகழ்ந்தார். ராமருக்கு லட்சுமணன் போல, சாமி அண்ணாவுக்கு கிருஷ்ணன் என்று எல்லோரும் புகழ்ந்தார்கள்.
சொல்லியதைச் செயலாக்குவது ஒருபக்கம். சாமி அண்ணா நினைப்பதை உணர்ந்து செயலாற்றும் வேகக்காரர் கிருஷ்ணய்யர்.
முந்தைய காலங்களில் சபரிமலை மேல்சாந்தி பதவி நேரடியான அப்பாயிண்ட்மெண்ட் எனும் முறைப்படியே இருந்தது. இப்போது உள்ள சீட்டு எடுக்கும் முறை அறிமுகப்படுத்தப்படாத காலம் அது.
ஒருமுறை தன் சபரிமலை தரிசனத்தை முடித்துக் கொண்டு சாமி அண்ணா திரும்பிக்கொண்டிருந்தார். வழியில் ஒரு விஷ்ணு ஆலயத்துக்குச் சென்றார்.
உள்ளே இருந்த மேல்சாந்தி இவர் வந்திருப்பதை அறியவில்லை. ரொம்ப மும்முரமாக சந்தனக்காப்பு அலங்காரம் செய்து கொண்டிருந்தார்.
“ஸ்வாமி சரணம்” என்று குரல் கொடுத்தார் சாமி அண்ணா.
குரலைக் கேட்ட மாத்திரத்தில் போட்டது போட்டபடி சாமி அண்ணாவை நோக்கி ஓடிவந்தார். அந்த பூஜகர். சாமி அண்ணாவைக் கண்டதும் ஏனோ முகத்தில் சட்டென்று ஒரு அமைதி; நிம்மதி; ஆனந்தம்.
அந்த பூஜகருக்கு, சபரிகிரீசனுக்கு சேவை செய்ய வேண்டும் என்று மிகுந்த ஆவல். மேல்சாந்தி பதவிக்கு விண்ணப்பித்திருந்தார். இதுவரை உள்ள நேரடி அப்பாயிண்ட்மெண்ட் முறையை மாற்றி, அந்த வருடத்தில் இருந்து பெயர்கள் கொண்ட சீட்டுகளை ஒரு குடத்தில் போட்டு, அந்தச் சீட்டில் பெயர் வருபவருக்கே மேல்சாந்தி பதவி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தக் காரணத்தால் - அவர் தனக்கு எங்கே மேல்சாந்தி பதவி கிடைக்கப்போகிறது என்று தீர்மானித்து விட்டார். அந்த ஏக்கத்திலும் துக்கத்திலும் கவலையுடன் இருந்தவர், சாமி அண்ணாவைப் பார்த்ததும் உற்சாகமானார். தன் வருத்தத்தை ஐயரிடம் பகிர்ந்து கொண்டார்.
“உங்கள் ஐயப்பன் தானே... நீங்க கொஞ்சம் எனக்காக
சிபாரிசு செய்யக் கூடாதா?” என்று சாமி அண்ணாவிடம் விளையாட்டாகக் கேட்டார்.
“ஐயப்பனுக்கு சேவை செய்ய அவ்வளவு ஆசையா?” என்று கேட்டார் சாமி அண்ணா. ‘‘ஆமாம் அண்ணா. கண்கண்ட தெய்வமான சாஸ்தாவுக்கு சேவை பண்ற பாக்கியம், பெரிய கொடுப்பனையாச்சே’’ என்றார்.
அடுத்த நொடி... சாமி அண்ணா, கண்கள் மூடி, நெஞ்சில் கைவைத்து சத்தமாகச் சொன்னார்... “கவலையை விடுங்க. உங்கள் எண்ணம் உண்மையானதுன்னா, நீங்கதான் தேர்ந்தெடுக்கப்படுவீங்க. அவ்வளவு ஏன்... நீங்க தேர்வு செய்யப்பட்டாச்சு. இது என் வாக்கு அல்ல. ஐயப்பனோட சத்திய வார்த்தை’’ என்றார்.
இதைக் கேட்டு, அந்த பூஜகர் மட்டும் அல்ல... அங்கே இருந்த அனைவருமே ஸ்தம்பித்து நின்றார்கள்.
‘‘சரி வரேன். தேர்வான சேதி வரும். வந்ததும் மறக்காம போன் பண்ணுங்க’’ என்று சொல்லிச் சென்றார் சாமி அண்ணா.
அன்று மாலை. போன் வந்தது. ‘அண்ணா... சாமி அண்ணா. தெய்வ வாக்கு பலிச்சிருச்சுண்ணா. மேல்சாந்தியா எம்பேர்தான் வந்துது. இது ஐயப்ப ஆசீர்வாதம்ணா. நமஸ்காரம்ணா...’’ என்று தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த மேல்சாந்தியால் பேசமுடியவில்லை. நா தழுதழுத்தது.
உண்மையான பக்தி எங்கே இருக்கிறதோ, எவரிடம் இருக்கிறதோ... அவரைத் தேடிச் சென்று அருள்வான் ஐயன் ஐயப்பன்
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!
- ஐயன் வருவான்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT