Last Updated : 11 Jan, 2018 05:35 PM

 

Published : 11 Jan 2018 05:35 PM
Last Updated : 11 Jan 2018 05:35 PM

எனையாளும் சாயிநாதா..! 9: பக்தரின் தற்கொலை முடிவு!

பாபாவின் அருள் சொல்லும் அற்புதத் தொடர்

விளையாட்டாய் ஒரு கதை சொல்வார்கள். கதை சொல்லும் பாணி விளையாட்டுதான். ஆனால் அதன் கருத்து, விளையாட்டு அல்ல!

அதாவது, தற்கொலை செய்துகொள்பவர்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர். அதாவது தற்கொலை செய்து இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்தக் கட்டுரையை வாசித்துக் கொண்டிருக்கும் நிமிடங்களில், நாடு முழுவதும் தற்கொலை செய்து கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கையைக் கேட்டாலே, சுள்ளென்று கோபம் வரும் நமக்கு!

‘அட என்னய்யா உலகம் இது. வாழவே பிடிக்கலப்பா. பேசாம செத்துடலாம் போல’ என்று அலுப்பும்சலிப்புமாக சொல்லிக் கொண்டிருப்பவர்கள் அநேகம். வாழ்க்கை என்ன என்றே தெரியாமல், வாழவே பிடிக்கவில்லை என்று சொல்கிறார்களே என்று தத்துவஞானிகள் பலர் அறிவுறுத்தியுள்ளார்கள்.

‘தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்கிறாயே. எப்படியெல்லாம் சாகலாம் சொல்’ என்று புலம்பிக் கொண்டிருந்தவனிடம் கேட்டார் ஒருவர்.

அவன் கத்தியால் தன்னைத் தானே குத்திக் கொள்ளலாம். துப்பாக்கியை எடுத்து நெற்றிப் பொட்டில் வைத்து சுட்டுக் கொள்ளலாம். பூச்சிக்கொல்லி மருந்தோ விஷமோ குடித்துச் சாகலாம். வேகமாக வரும் ரயிலுக்கு முன்னே விழுந்துவிடலாம்’ என்று அடுக்கிக் கொண்டே போனான்.

அதையெல்லாம் கேட்டு ஆச்சரியப்பட்டுப் போன அந்த மனிதர், ‘அடேங்கப்பா, சாவதற்கு இவ்வளவு வழிகள் இருக்கிறதாப்பா’ என்று வியந்து கேட்க... ‘ஆமாம்... இதெல்லாம் எனக்குத் தெரிஞ்சது மட்டும்தான். இன்னும் எவ்வளவோ இருக்கு சாகறதுக்கு!’ என்றான் வீராப்பாக!

அவர் அமைதியாக அவனைப் பார்த்தார். லேசாகப் புன்னகைத்தார்.

‘ஏம்பா. சாகறதுக்கே இவ்ளோ வழி இருக்கும்போது, வாழ்றதுக்கு எவ்ளோ வழி இருக்கும். அதைக் கொஞ்சம் யோசிச்சுப் பாத்தியா. அப்படி யோசிச்சிருந்தா, இந்நேரம் நல்லா வாழ்ந்திருப்பியேப்பா. அப்ப, உன்னை சாகச் சொன்னாக் கூட சாக மாட்டே...’ என்று சொல்லிச் சிரித்தாராம்.

அவனுக்கு உடம்பே தூக்கிப் போட்டது. தலையில் தட்டிக் கொண்டான். ‘ஆமாம்ல... இது தெரியாமப் போச்சே’ என்று உற்சாகமாய் சென்றான் என்றொரு கதை உண்டு. படித்திருக்கிறீர்களா.

பகவான் சாயிபாபாவிடம் ஆசி கேட்டு வந்து நிற்பவர்களில் ஒருசிலர், உறவுகளால் ஒதுக்கப்பட்டோ, சொந்தபந்தங்களால் ஏமாற்றப்பட்டோ, தற்கொலை செய்து கொண்டு செத்துப் போய்விடவேண்டும் எனும் நிலையில் இருப்பார்கள். அப்படி வருபவர்கள், ‘நான் செத்துப் போக ஆசைப்படுறேன்’ என்று சொல்லி, குமுறி அழமாட்டார்கள். எதுவும் பேசாமல், பாபாவையே கையெடுத்துக் கும்பிட்டபடி பார்த்துக் கொண்டே இருப்பார்கள்.

பாபா அமர்ந்திருக்க, அவருக்கு எதிரே வரிசையாக பக்தர்கள் உட்கார்ந்திருப்பார்கள். அந்த பிரமாண்ட ஹாலின் ஓர் ஓரத்தில், சாயிநாதன் நாமாவைச் சொல்லியும் அவரின் பெருமைகளைப் பட்டியலிட்டும் பாடிக் கொண்டே இருப்பார்கள்.

கண்களில் பாபாவின் தரிசனம். செவிகளீல் பாபாவின் பாடல்கள். மனசுக்குள் பாபாவின் திருநாமம். வேறு எந்தச் சிந்தனைகளும் இல்லை. எந்த நினைப்புடன் வந்தாலும் அவரின் பார்வை, அதையெல்லாம் சுட்டுப் பொசுக்கிவிடும். கெட்ட சிந்தனைகளையோ அல்லது அவல முடிவுகளையோ அவர் வேரறுத்துவிடுவார்.

இப்படித்தான் ஒரு சம்பவம்... கோபால் நாராயண் என்பவர் மிகச்சிறந்த சாயிபாபா பக்தர். புனேவைச் சேர்ந்தவர். மத்திய அரசின் வரித்துறை பிரிவில் உயர் அதிகாரியாகப் பணியாற்றியவர். பல ஊர்கள், பல மாநிலங்கள் என்று பணியில் இருந்தாலும் பாபாவையே நினைத்துக் கொண்டிருப்பவர். ஓய்வு பெற்ற நிலையில்... ஒரு பக்கம் வயோதிகமும் இன்னொரு பக்கம் உடல் உபாதையும் ஒருசேரத் தாக்கின. முக்கியமாய் ஏழ்மை அவரை ரொம்பவே இம்சித்தது.

இளமையில் வறுமை கொடுமை என்பார்களே. முதுமையிலும் வறுமை கொடுமைதான். குடும்பம் பெரிது. தேவைகளும் பெரிது. முதிர்ந்த வயதிலும் வேலைக்குப் போகலாமென்றால், கிடைத்தபாடில்லை. எவரும் வேலை கொடுத்தபாடில்லை. போதாக்குறைக்கு, உடலும் நோயும் வதைத்தெடுத்தன!

இந்த சமயத்தில்தான் ஷீர்டிக்கு வந்தார் கோபால் நாராயண். புனேயில் வசிக்கும் கோபால் நாராயணுக்கு ஷீர்டிக்கு வருவது ஒன்றும் பெரியவிஷயமல்ல. ஆனால் அதேசமயம், தற்போதைய பொருளாதார நெருக்கடியும் உடல்கோளாறும் அவரை ரொம்பவே முடக்கிப்போட்டது. வருடந்தோறும் சாயிபாபாவைத் தரிசிக்க வந்துவிடுபவர், சில வருடங்களுக்குப் பிறகு அப்போதுதான் வந்திருந்தார்.

அது 1916ம் வருடம். ஷீர்டிக்கு வந்தவர், பாபாவை தரிசித்துவிட்டு, கிளம்பலாம் என்றிருக்கும் போது, அவரால் சுத்தமாக முடியவில்லை. உடல்நிலை ரொம்பவே மோசமாகிவிட்டது. உடன் வந்திருந்த மனைவி, பதறிவிட்டார். என்ன செய்வது என்று தெரியாமல், கைபிசைந்து தவித்தார். கலங்கிப் போனார்.

இந்த உடல்நிலையை வைத்துக் கொண்டு, பயணிப்பது இயலாத காரியம். அதுமட்டுமின்றி, அது இன்னும் விபரீதமாகிவிடும் என்று அங்கிருந்தவர்கள் எச்சரித்தனர். ஆகவே ஷீர்டியிலேயே தங்குவது எனத் தீர்மானித்தனர். அதன்படி அங்கேயே இரண்டு மாதங்கள் தங்கினார். ஆனாலும் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. மேலும் பொருளாதாரப் பிரச்சினை அவரை ரொம்பவே நொறுங்கடித்தது. இன்னும் துவண்டுபோனார். சொல்லப் போனால் அவருக்கு வாழவே பிடிக்கவில்லை.

அப்போதுதான் அந்த முடிவுக்கு வந்தார் கோபால் நாராயண். ஷீர்டியில் அவர் தங்கியிருந்த இடத்துக்கு அருகில் கிணறு ஒன்று இருந்தது. அந்தக் கிணற்றில் விழுந்து இறப்பது என முடிவுக்கு வந்துவிட்டார். அப்படி முடிவு எடுத்துவிட்டு, ஏதேதோ யோசனைகளில் இருந்தார்.

‘வாழவே பிடிக்கலை. வாழவே வழியில்ல. வாழவே முடியல’ என்கிற நிலையில் இருந்த கோபால் நாராயண், கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்வது தவிர வேறு வழியில்லை எனும் முடிவுக்கு உறுதியாக வந்திருந்தார். அந்த முடிவில் உறுதியாக இருந்தார்.

அப்போது அங்கே இரண்டுபேர் வந்தார்கள். யார் அவர்கள்? கோபால் நாராயண் என்ன ஆனார்?

ஜெய் சாய்ராம்... ஜெய் சாய்ராம்... ஜெய் சாய்ராம்!

-அருள்வார்

தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x