Last Updated : 25 Dec, 2017 01:29 PM

 

Published : 25 Dec 2017 01:29 PM
Last Updated : 25 Dec 2017 01:29 PM

குருவே... யோகி ராமா..! 24: அருணை மலை... அடிமுடி தேடிய கதை!

பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்

பளிச்சென்று சட்டை போட்டுக் கொண்டாலே, கர்வப்படுகிறவர்கள் நாம். சின்னதாக ஒரு பொருள் வாங்கினாலே அலட்டிக் கொள்கிறோம். அப்படியெனில் உலகையே படைத்த பிரம்மாவுக்கும் உலக மக்களை ரட்சிப்பதே தன் கடமை என அருளை வாரி வழங்கிக் கொண்டிருக்கும் மகாவிஷ்ணுவுக்கும் எப்படியிருக்கும் , யோசித்துப் பாருங்கள்.

இந்த உலகையே படைக்கும் பிரம்மனுக்கு,, தான் மிகவும் உயர்ந்தவன் என்ற கர்வம் உதித்தது. ஆணவம் தலைக்கேறியது. அரவணையில் துயில் கொள்ளும் திருமாலை வலியத் தேடிச் சென்றார். ‘இந்த உலகமே எனது படைப்பு. ஆகவே, நானே பெரியவன்; பெருமைக்கு உகந்தவன்’ என்று எகத்தாளத்துடன் சிரித்தார்.

அதைக் கேட்டு இடிமுழங்கச் சிரித்தார் மகாவிஷ்ணு. ஆதிசேஷன் மீது பள்ளிகொண்டிருந்தவர் விருட்டென்று எழுந்தார். மரம் வைத்தால் போதுமா. தண்ணீர் ஊற்ற வேண்டாமா. மரத்தை வைத்தது பிரம்மா. மக்களுக்கு அருள் செய்யும் பணி செய்வது திருமால். மனதில் நினைத்துக் கொண்டார். ’இனிய பிரம்மாவே... நீயே என் உந்தியில் இருந்து உதித்தவன் என்பதை மறந்துவிட வேண்டாம். ஆகவே படைத்தவனை விட, படைப்பைக் காப்பவனே உயர்ந்தவன். மறந்துவிடாதே’ என்றார் மகாவிஷ்ணு.

அப்போது அங்கே வந்தார் நாரதர் பெருமான். அவ்வளவுதான். இனி சொல்லக் கேட்கணுமா? சொல்லித் தான் தெரியணுமா?

பிரம்மா உயர்ந்தவர்தான். மகாவிஷ்ணுவாகிய நீங்களும் உயர்ந்தவர்தான். அதேசமயம் உங்களை விட உயர்ந்தவர் சிவபெருமானே என்று கொளுத்திப் போட்டார். இரண்டுபேரும் கோபமானார்கள்.

இதையெல்லாம் அறிந்த ஈசன், அங்கே தோன்றினார். கள்ளச்சிரிப்புடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் நாரதர்.

’சரி... இருவரில் யார் எனது அடியையோ அல்லது முடியையோ தொடுகிறீர்கள் என்று பார்ப்போம். அப்படி யார் தொடுகிறார்களோ காண்கிறார்களோ அவரே முதன்மையான வர், பெருமைக்கு உரியவர்’ என்றார் சிவனார்.

அதன் பிறகுதான் நடந்தது சிவனாரின் திருவிளையாடல்.

ஈசனின் அடியையும் முடியையும் தேடும் படலத்தில் இறங்கினர் இரண்டுபேரும். சிவனார் விஸ்வரூபமெடுத்து நின்றார். பெருமாள், அடியை... சிவனாரின் திருவடியைத் தேடிப் புறப்பட்டுப் போய்க் கொண்டிருக்க, பிரம்மாவோ, சிவனாரின் முடியைத் தேடி அதாவது சிரசைப் பார்க்கும் நோக்கத்தில் மேலே மேலே என போய்க் கொண்டே இருக்க, சிவனாரின் விஸ்வரூபமெடுத்தபடி இருக்க... தேடிக் கொண்டே இருந்தனர்.

பிறகு ஒருகட்டத்தில், ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் ஜோதியாக திருவடிவம் கொண்டு ஓங்கி உயர்ந்து நின்றார். பரமேஸ்வரன். ம்ஹூம்... முடியவே இல்லை. ஆனாலும் தொடர்ந்தனர் பிரம்மாவும் மகாவிஷ்ணுவும்.

அவரது திருவடி பாதாளங்கள் ஏழினையும் தாண்டியது. கிடு கிடுவெனக் கீழே இறங்கிக் கொண்டே சென்றது. மகாவிஷ்ணுவால் தொடரவே இயலவில்லை. திருமுடியோ அண்டங்களின் மேல் முகடுகளைப் பிளந்து கொண்டு மேலே மேலே, இன்னும் இன்னும் என உயர்ந்தபடி சென்றிருந்தது. .

உடனே , வராக அவதாரம் எடுத்த திருமால், பூமியை, பாதாளத்தைக் குடைந்து குடைந்து சென்றூ கொண்டே இருந்தார். சிவனின் திருவடி வளர்ந்துகொண்டே சென்றதால், முயற்சியைக் கைவிட்டு முழு முதல் மூர்த்தியாம் சிவனைத் தொழுது நின்றார். இரக்கம் காட்டக் கூடாதா என்று உள்ளே பிரார்த்தித்தார்.

அடுத்து, அன்னப் பறவையென உருவம் கொண்டார் பிரம்மா. பற பற என மேலே பறந்தபடி இருந்தார். சிவனாரின் திருமுடியைக் காணும் முயற்சியில் முழு மூச்சுடன் முனைந்தார்.

அழல் உருவின் ஆற்ற வொண்ணா வெப்பத்தால் வெந்தது அன்னத்தின் சிறகுகள். கீழே விழுந்தார் பிரம்மா. அப்படி விழும்போது சிவனாரின் தலையில் இருந்து தாழம்பூ ஒன்று, மேலிருந்து கீழே விழுந்து கொண்டிருந்தது. அந்தப் பூவின் இதழைக் கண்டதும் உற்சாகமானார் பிரம்மா. அந்தத் தாழம்பூவைச் சாட்சியாக்கிக் கொண்டார். பொய்சாட்சி. ‘சிவமுடியைப் பார்த்தேன்’ என்று பிரம்மா சொல்ல, தாழம்பூவும் ஆமாம் ஆமாம் என்றது பிரம்மாவுக்காக!

சிவனாரின் திருவடியையோ திருமுடியையோ பார்க்காததும் பார்க்க முடியாததும் குற்றம் அல்ல. ஆனால் உண்மையாக இல்லை பிரம்மா. பொய் வேறு சொல்ல... கொதித்துப் போன சிவபெருமான். பிரம்மாவுக்கு ஆலயம் இல்லாது போகவும் தாழம்பூ, பூஜைக்கு உகந்ததாகப் பயன்படுத்தமாட்டார்கள் என்றும் சபித்தார்.

சிவபெருமானே முழு முதற் பரம்பொருள் என்பதை திருமாலும் பிரம்மாவும் உணர்ந்தனர். நமஸ்கரித்தனர். மாமலையாக, ஜோதியாக உருவெடுத்து விஸ்வரூபமாக இருந்த பரமேஸ்வரன், அவர்களுக்கு லிங்கோத்பவராக திருக்காட்சி தந்தருளினார்.

ஆதியும் அந்தமுமாக விஸ்வரூபம் காட்டி நின்ற இடம்... மலையென ஓங்கி உயர்ந்து நின்ற இடம்... ஜோதியென திருவுருவம் காட்டி நின்றருளிய இடம்... திருவண்ணாமலை. அதனால்தான் இங்கே உள்ள இந்தத் தலத்தின் நாயகனுக்கு, சிவனாருக்கு, அண்ணாமலையார் என்றும் அருணாச்சலேஸ்வரர் என்றும் திருநாமங்கள் அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம்!

சிவனார் கருணாமூர்த்தி. அம்பாள் கருணைக் கடல். அவளின் திருநாமம் - உண்ணாமுலை அம்பாள். அதாவது சம்ஸ்கிருதத்தில் அபிதகுசாம்பாள்!

மலையைப் போலவே ஊரின் அளவுக்கு பிரமாண்டம் காட்டி நிற்கிறது அண்ணாமலையார் ஆலயம். எத்தனையோ மன்னர் பெருமக்கள், அவரவர்களின் ஆட்சியில், இந்தத் தலத்தின் உன்னதங்களையும் மகோன்னதங்களையும் அறிந்து, வியந்து, சிலிர்த்து ஏராளமான திருப்பணிகளைச் செய்திருக்கிறார்கள்.

ஆறு பிராகாரங்கள். ஒன்பது கோபுரங்கள். நான்கு திசைகளிலும் நான்கு உயரமான கோபுரங்கள் எனக் கம்பீரமாகக் காட்சி தருகின்றன அருணாச்சலேஸ்வரர் கோயில். ஒவ்வொரு கோபுரத்தின் பின்னணியிலும் சுவையான வரலாறு பொதிந்திருக்கிறது.

ராஜகோபுரத்தின் வழியே நுழைந்தால் சுமார் நூறு, நூத்தம்பைது அடி தூரத்தைக் கடந்தால்தான் முதல் பிராகாரத்தையே அடைய முடியும். ராஜகோபுரத்தின் உட்புறம் நடக்கும்போது வலப் புறமும், இடப்புறமும் பார்த்தால் கோபுரத்தின் உட்புறத்தில் அவ்வளவு அற்புதமான நுட்பமானச் சிற்பங்கள்!

வலப்புறத்தில், எதிரே... விஸ்தாரமாக அமைந்திருக்கிறது ஆயிரங்கால் மண்டபம். இந்த ஆயிரங்கால் மண்டபத்தின் அருகில் இருக்கும் பாதாள லிங்கேஸ்வரர் சந்நிதி, விசேஷமானது. அபூர்வமானது. மகா சக்தியை உள்ளடக்கியது. அந்த இடத்தில் நின்று வழிபடுவோருக்கெல்லாம் உன்னத சக்தியை வழங்கக் கூடியது. அதை உணர்ந்து அங்கே தபஸ் செய்தவர்கள் பலர் உண்டு. அவர்களில் முக்கியமானவர் யார் தெரியுமா?

அதற்கு முன்னதாக, அங்கே இடதுபுறத்தில் கம்பத்து இளையனாராக அருணகிரிநாதருக்குக் காட்சி கொடுத்த முருகப்பெருமானின் கோயில் அமைந்துள்ளது. இந்த முருகன் கோயிலுக்குத் தெற்கில் சிவகங்கை தீர்த்தக் குளம். அருணகிரிநாதருக்கு அருளும் ஞானமும் கிடைத்த அற்புதச் சந்நிதி இது.

அண்ணாமலையையும் திருவண்ணாமலையின் தொன்மையையும் உணர்ந்து புரிந்து கொண்டிருந்த ராம்சுரத் குன்வர், அருணகிரியாரையும் அறிந்து கொண்டார். மெய்சிலிர்த்தார். முருகப்பெருமான், அருணகிரிநாதருக்கு அருளிய விளையாடல்களில் மனம் லயித்தார்.

அப்படியே, அந்த பாதாளலிங்கேஸ்வரரையும் அவர் அமைந்திருக்கும் சந்நிதியின் சாந்நித்தியத்தையும் உணர்ந்து வியந்தார். அங்கே தபஸ் செய்தவரையும் அறிந்தார். புரிந்தார். உணர்ந்தார். சிலிர்த்தார். தரிசிப்பது என விரும்பினார்.

அங்கே... பாதாள லிங்கேஸ்வரர் சந்நிதியில் தவமிருந்தவர், ராம்சுரத் குன்வர் தரிசிக்க வேண்டும் என விரும்பிய அந்த மகான்... பகவான் ஸ்ரீரமண மகரிஷி!

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

ஜெயகுரு ராயா!

- ராம்ராம் ஜெய்ராம்

தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in

முந்தைய அத்தியாயம் படிப்பதற்கு...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x