Published : 03 Feb 2018 09:41 AM
Last Updated : 03 Feb 2018 09:41 AM
ஒருவரின் வாழ்நாளை நிர்ணயம் செய்வதும், அவரவர் தகுதிக்கேற்ப உணவை வழங்குபவரும் சனி பகவானே என்கிறது ஜோதிட சாஸ்திரம். எனவே அவரை ஆயுள்காரகன் என்பார்கள். ஜீவனகாரகன் என்பார்கள்.
இன்னும் சொல்லப் போனால், அவர் தர்மப்பிரபு. தர்மத்துக்கு மிக மிக கட்டுப்படுபவர். பூஜைக்குச் சென்ற நளன், தன் காலில் சரியாக தண்ணீர் விட்டுக் கழுவவில்லை என்பதைக் கூட சனிபகவானால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அந்த அளவுக்கு சனீஸ்வரர், பர்பெக்ஷன் எதிர்பார்ப்பவர்.
பூஜா தர்மத்தை மீறியதாக ஏழரை ஆண்டுகள், அவனது குடும்பத்தையே பாடாய் படுத்தியவர். எல்லாம் பர்பெக்ட் ஆக இருக்க வேண்டும் என்று ரொம்பவே எதிர்பார்ப்பார்.
இதில் கொஞ்சம் பிசகினாலும் அவரது கோபத்துக்கு ஆளாகி விடுவோம். அவரவர் செய்த பாவ, புண்ணியத்தின் அடிப்படையில் உணவு கிடைக்கும். அதுபோல, ஆயுளை நிர்ணயம் செய்பவராகவும் திகழ்கிறார்.
ஒருமுறை தேவலோகத்தில் ஒரு மண்டபம் கட்ட முடிவாயிற்று. அதில், தேவலோகத்தில் வசிப்பவர்கள் அனைவரும் தங்கி, ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமாக இருக்கலாம் என்பது திட்டமாம்.
சிவபெருமானுக்கு இதில் விருப்பமே இல்லை. அதேநேரம், அவரின் மனைவி உமையவள், மண்டபம் கட்டும் விஷயத்தில் ஆர்வமாக இருந்தாள்.தேவஜோதிடர்கள் மண்டபம் கட்டுவதற்கு நாள் பார்த்தனர். அப்போது ஒருவர், இதைக் கட்டி முடித்தாலும் எரிந்து போகும். சனியின் பார்வை சரியில்லை என்றார்.
இருந்தாலும், சனீஸ்வரனை சரிக்கட்டி விடலாம் என நினைத்த பார்வதி மண்டபத்தை கட்டுவதற்கு ஏற்பாடு செய்தாள். பிறகு சிவபெருமானிடம், மண்டபத்தை அழியாமல் பாதுகாக்கும்படி சனீஸ்வரனிடம் சொல்வோம். அவன் நம்மை மீறவா செய்வான்? அப்படி மீறினால், நீங்கள் எனக்கு ஒரு சமிக்ஞை செய்யுங்கள். அவன் எரிப்பதற்கு முன் நானே எரித்து விடுகிறேன். அவன் ஜெயிக்கக்கூடாது என்றாள்.
எல்லாருக்கும் பாவபுண்ணிய பலனைத் தர வேண்டும் என்ற உத்தரவு போட்டவரே மீறலாம் என்றால் எப்படி? சிவனார், நானே அவனிடம் விஷயத்தைச் சொல்கிறேன். அவன் கேட்க மறுத்தால், தலைக்கு மேல் உடுக்கையைத் தூக்கி அடித்து சமிக்ஞை செய்கிறேன். நீ தீ வைத்து விடு என சொல்லிவிட்டு சென்றார்.
இதையடுத்து, சனீஸ்வரனிடம் சென்று, தேவர்களுக்காக இந்த மண்டபத்தை விட்டுக்கொடேன் என்றார். சிவபெருமானே சொல்கிறார் என்ன செய்வது... என்று சனீஸ்வரர் தடுமாறினார்.
வேறு வழியின்றி, தாங்கள் நடனமாடுவதில் வல்லவர். உங்கள் நடனத்தை நான் பார்த்ததில்லை. எனக்காக ஆடிக்காட்டுங்கள். விட்டு விடுகிறேன், என்றார்.
அவ்வளவுதானே. இதைக்கூடவா செய்யமாட்டேன் என்ற சிவனார், உடுக்கையை தலைக்கு மேல் தூக்கி அடித்தபடியே ஆடினார்.
பார்வதியின் உடுக்கைச் சத்தம் கேட்டாள். சனீஸ்வரன் சம்மதிக்கவில்லை போலிருக்கிறதே! என்று நினைத்து, மண்டபத்துக்கு தீ வைத்தாள். சனீஸ்வரனும் கடமையைச் செய்து விட்டார், சிவனும் நினைத்ததை சாதித்து விட்டார். அவரவர் பாவ புண்ணியத்தைப் பொறுத்து சனீஸ்வரன் பலன் வழங்கியே தீருவார் என்பதற்கு இந்த சம்பவத்தைச் சொல்கிறது புராணம்!
சனீஸ்வரரிடம் மட்டுமின்றி, எல்லாரிடமும் எப்போது பர்பெக்ஷனிஸ்டாக இருப்போம். எள் தீபமேற்றி, சனி பகவானை வணங்கி, வளம் பெறுவோம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT