Published : 12 Feb 2018 04:42 PM
Last Updated : 12 Feb 2018 04:42 PM
விண்ணைத் தொட்டு நிற்கின்றன மேற்குத் தொடர்ச்சி மலைகள். இதன் அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக ஒயில் காட்டி நிற்கிறது தோரண மலை. யானையைப் போன்று காட்சியளிப்பதால் ‘வாரண மலை’ என்றும் சொல்லப்படுகிறது. வாரணம் என்றால் யானை. ஆனால், தோரணமலை என்றால்தான் சட்டென்று தெரிகிறது பக்தர்களுக்கு!
அழகுக்கெல்லாம் அழகு சேர்ப்பவன், பேரழகன் முருகன் குடிகொண்டிருக்கும் தலம் அல்லவா... தோரணமலை!
நெல்லை மாவட்டம் தென்காசியில் இருந்து கடையம் செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது தோரணமலை. இந்த மலையின் உச்சியிலும் முருகன் கோயில்கொண்டிருக்கிறான். அடிவாரத்திலும் அவனுக்கொரு கோயில் அமைந்திருக்கிறது.
அகத்தியர் தங்கியிருந்து இங்கே தவமிருந்திருக்கிறார். மூலிகைகளைக் கொண்டு மருத்துவப் பணி செய்திருக்கிறார். அவருடைய சீடரான தேரையர் என்பவர், இங்கே மகா சமாதி அடைந்தார் என்கிறது ஸ்தல புராணம்.
இன்னொரு விஷயம்... சித்த புருஷர்கள் ஏராளமானோர் இங்கு வந்து கடும் தவம் புரிந்திருக்கிறார்கள். வழிபட்டிருக்கிறார்கள். எனவே தோரணமலையில், இன்றைக்கும் சித்த புருஷர்கல் சூட்சும ரூபமாக இங்கே பூஜித்து வழிபடுவதாகச் சொல்கிறார்கள் முருக பக்தர்கள்! இதனால், இந்தத் தோரணமலைக்கு, வாரண மலை என்ற பெயருடன் தெய்வ மலை என்றும் ஓர் பெயர் உண்டு என்கிறார்கள்.
இத்தனைச் சிறப்புகளுக்கெல்லாம் சிகரம் வைத்தது போல், மலையின் உச்சியில் உள்ள குகை ஒன்றில், கோயில் கொண்டிருக்கிறார் குமரன்!
மலையடிவாரத்தில், அழகுற அமைந்து நம்மை வரவேற்கிறது கோயிலுக்கான நுழைவாயில்.
அடிவாரத்தில் கோயிலுக்கான நுழைவாயில் போன்று அழகிய தோரண வளைவு நம்மை வரவேற்கின்றன. சுற்றிலும் மலைமலையாய் சிகரங்கள். எங்கிருந்தோ வரும் பொதிகைத் தென்றல்... மலை மீது பட்டு, நம் முகத்தில் விழுந்து தலை கோதிவிடுகிறது. அடிவாரக் கோயிலில், முருகப்பெருமானுடன் வல்லப கணபதி தரிசனம் தருகிறார். தனிச்சந்நிதியில் குரு பகவான் அருள்பாலிக்கிறார். மகாலட்சுமி, சரஸ்வதி தேவி, சப்த கன்னியர், நாகர்கள், கன்னிமார் அம்மன், நவக்கிரகங்கள் என சந்நிதிகள் பல இருக்கின்றன. அடுத்து... சிவனார் மற்றும் கிருஷ்ண பரமாத்மாவின் சுதைச் சிற்பங்களும் இருக்கின்றன.
அடிவாரத்தில் இருந்து மலையேறுவதற்கு மொத்தம் 926 படிகள். வழியெங்கும் மூலிகைகளின் சுகந்தம், நாசியைத் தழுவி, நாபிக்கமலம் வரை சென்று தொட்டு, என்னவோ செய்கின்றன. நம் தீராத நோயையும் தீர்த்துவிடும். மனதின் பாரங்களையெல்லாம் அகற்றிவிடும்... அத்தனை சக்தி வாய்ந்ததாக இருக்கும் மூலிகை நறுமணம்... கோயிலுக்குச் செல்லும் போதே கிடைக்கிற அரிதான வரம்!
சிலபல வருடங்களுக்கு முன்பு வரை, பாதைகள் சரிவர இல்லாமல் இருந்தன. இப்போது பாறைகளை வெட்டி, படிகளாக்கியிருக்கிறார்கள். ஆனாலும் குழந்தைகளையும் முதியவர்களையும் கவனத்துடன் அழைத்துச் செல்லவேண்டும்!
படிகளைக் கடந்தால், பரமேஸ்வரனின் மைந்தன் வசிக்கும் அற்புதக் குகை. அதுவே கோயில், அதுவே சந்நிதி. அதுவே கருவறை. கிழக்கு நோக்கிய முருகன். ஞானகுருவென தேஜஸூடன் காட்சி தருகிறான். கையில் வேலும் அருகில் மயிலும் இருக்க... நமக்கென்ன பயம்... சொல்லுங்கள்!
தோரணமலைக்கு அருகில் உள்ளது முத்துமாலை புரம் எனும் கிராமம். அங்கே வாழ்ந்த ஒருவரின் கனவில், மலையின் மேலே சுனை இருக்கிறது. அந்தச் சுனைக்கு உள்ளே முருகன் சிலை இருக்கிறது. அதை எடுத்து வந்து, அருகில் உள்ள குகைக்குள் வைத்து வழிபடு. இந்த ஊரும் விவசாயமும் செழிக்கும்’ என அசரீரி கேட்டதாம்! அதன்படி சுனையின் ஆழத்தில்... முருகன் விக்கிரகம் கிடைக்க, குகைக்குள் வைத்துப் பிரதிஷ்டை செய்தார்கள். அன்று முதல் வழிபடத் தொடங்கினார்கள். இன்று வரை அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களே பரம்பரை அறங்காவலர்களாக இருந்து வருவதாகச் சொல்கின்றனர்.
திருக்கயிலையில் நிகழ்ந்த சிவ - பார்வதி திருக்கல்யாணமும் அப்போது, தேவர்கள், முனிவர்கள் உள்ளிட்ட அனைவரும் கயிலையில் கூடிவிட, பூமியின் வடதிசை தாழ்ந்து தென் திசை உயர்ந்தது. என்பதெல்லாம் தெரியும்தானே! அப்போது பூமியைச் சமப்படுத்த சிவபெருமான், அகத்தியரை பொதிகைக்கு அனுப்பி வைத்தார். மலையின் சாந்நித்தியத்தால் அகத்தியர் இங்கே சில காலம் தங்கி தவமிருந்தார் என்கிறது ஸ்தல புராணம்!
இத்தனை பெருமை வாய்ந்த தோரணமலைக்கு, ராமபிரானும் வந்து, தவம் புரிந்தார் என்று தெரிவிக்கிறது ஸ்தல புராணம்.
மகாகவி பாரதியாரின் துணைவியாருக்கு கடையம்தான் சொந்த ஊர் என்பார்கள். பாரதியார், இங்கே கடையத்துக்கு வரும் போதெல்லாம், இந்த தோரணமலை மீது ஏறி, குகையின் அழகனைக் கண்டு சிலிர்த்து, ‘குகைக்குள் வாழும் குகனே’ என்று பாடியதாகச் சொல்லுவார்கள்!
குகை அழகனுக்கு, தினமும் உச்சிகால பூஜை விமரிசையாக நடைபெறுகிறது. தைப்பூசமும் வைகாசி விசாகமும் பங்குனி உத்திரமும் சிறப்புறக் கொண்டாடப்படுகின்றன. மாதந்தோறும் தமிழ் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் விசேஷ பூஜைகளும் அபிஷேகங்களும் விமரிசையாக நடக்கின்றன.
தோரணமலைக்கு வந்து முருகக் கடவுளை, வணங்கிப் பிரார்த்தனை செய்தால், தடைப்பட்ட திருமணம் விரைவில் நிகழும்.சந்தான பாக்கியம் கிடைக்கும். நல்ல வேலை கிடைக்கச் செய்வார். நம் துயரங்களையெல்லாம் போக்கி அருள்வார் கந்தவேலன் என்கின்றனர் பக்தர்கள்!
நெல்லைக்கு வந்தால், தென்காசிக்கு வந்தால், திருக்குற்றாலத்துக்கு வந்தால், அப்படியே தோரணமலை நாயகனை கண்ணாரத் தரிசியுங்கள். மலையின் அழகிலும் மலை நாயகன் குமரனின் அழகிலும் மலைத்துப் போவீர்கள்!
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
-வேல் வேல்
தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT