Published : 17 Jan 2018 10:42 AM
Last Updated : 17 Jan 2018 10:42 AM
சிவன் கோயிலில் துர்கை சந்நிதி அமைந்திருக்கும். இந்த துர்கையை சிவ துர்கை என்பார்கள். ஆனால் விஷ்ணு துர்கை அமைந்திருக்கும் ஆலயம் எங்கே இருக்கிறது தெரியுமா? இந்தத் துர்கைக்கு இன்னொரு விசேஷமும் உண்டு.
முதலில் ஆலயம் எங்கே இருக்கிறது என்று பார்ப்போம்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது வடகுரங்காடுதுறை.
இங்கே பிரமாண்டமான ஆலயத்தில் குடியிருந்தபடி அருள்பாலிக்கிறார் ஸ்ரீதயாநிதீஸ்வரர். அற்புதமான ஆலயம். அழகிய பிராகாரங்களைக் கொண்ட திருக்கோயில். இங்கே சோம வாரம் எனப்படும் திங்கட்கிழமைகளிலும் மாத சிவராத்திரி, பிரதோஷம் முதலான நாட்களிலும் வந்து வேண்டிக் கொள்வது மிகுந்த பலன்களை வாரி வழங்கும் என்பது ஐதீகம்.
மேலும், தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு, தன் திருநாமத்துக்குப் பொருத்தமாகவே, அருளையும் பொருளையும் அள்ளித்தந்து அருள்கிறார் சிவனார் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்!
புராண- புராதனப் பெருமை கொண்ட இந்தத் தலத்தில் உள்ள ஸ்ரீவிஷ்ணு துர்கை விசேஷமானவள்!
பொதுவாக சிவாலயத்தில் இருக்கும் துர்கையை சிவதுர்கை என்றே அழைப்பார்கள். ஆனால், கையில் சங்கு- சக்கரத்துடன் பெருமாள் அம்சமாகத் திகழ்வதால், ஸ்ரீவிஷ்ணுதுர்கை என்று போற்றப்படுகிறாள்.
எட்டுத் திருக்கரங்களுடன் அற்புதமாகக் காட்சி தரும் ஸ்ரீவிஷ்ணுதுர்கைக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. இந்தத் துர்கைக்குப் பாலபிஷேகம் செய்யும்போது, அந்தப் பாலானது நீலநிறத்தில் காட்சியளிக்கும் அதிசயத்தை இன்றைக்கும் தரிசிக்கலாம் எனச் சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர் பக்தர்கள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT