Published : 02 Feb 2018 11:14 AM
Last Updated : 02 Feb 2018 11:14 AM
சங்கடஹர சதுர்த்தியில் சங்கரன்மைந்தனான ஆனைமுகத்தானை மறக்காமல் வணங்குங்கள். நம் சங்கடங்களையும் துயரங்களையும் போக்கி அருள்வான் கணபதி . நாளைய தினம் 3.2.18 சனிக்கிழமை சங்கடஹர சதுர்த்தி. மறக்காதீர்கள்!
பொதுவாகவே, விநாயகப் பெருமானை எல்லா நாளும் வழிபடலாம். தவிர, எந்த தெய்வங்களை வழிபட்டாலும் முதலில் முதல்வன் முழுமுதற்கடவுள் விநாயகரை வழிபட்ட பிறகுதான் அடுத்தடுத்து தெய்வங்களை வழிபடுவோம்.
அதேபோல், மாதந்தோறும் சதுர்த்தி வரும் . அதாவது அமாவாசையில் இருந்து நான்காம் நாளும்பெளர்ணமியில் இருந்து நான்காம் நாளும் சதுர்த்தி வரும். இந்த நாளில் விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வழிபடுவது ரொம்பவே சிறப்பு.
மாதந்தோறும் வருகிற சங்கடஹர சதுர்த்தி இன்னும் சிறப்பானது. இந்த நாளில், மாலையில் விநாயகருக்கு, கோயில்களில் சிறப்பு அபிஷேகங்களும் விசேஷ ஆராதனைகளும் பூஜைகளும் நடைபெறும்.
அப்போது, பால், தயிர், திரவியப் பொடி, பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், பன்னீர் முதலான 16 வகை பொருட்கள் கொண்டு அபிஷேகங்கள் நடைபெறும். இந்த நாளில், கணபதிபெருமானுக்கு, வெள்ளெருக்கம்பூ மாலையும் அருகம்புல் மாலையும் சார்த்தி வழிபட்டால், தோஷங்கள் அனைத்தும் விலகிவிடும். காரியத் தடைகள் யாவும் விலகிவிடும் என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.
மேலும் சங்கடஹர சதுர்த்தி நாளில், விநாயகருக்கு கொழுக்கட்டை அல்லது சுண்டல் அல்லது சர்க்கரைப் பொங்கல் என ஏதேனும் நைவேத்தியம் செய்து வழிபட்டால், வீட்டில் மங்கல காரியங்கள் விரைவில் நடந்தேறும். கடன் தொல்லையை நிவர்த்தி செய்து அருள்வார் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.
நாளை 3.2.18 சனிக்கிழமை அன்று, சங்கடஹர சதுர்ஹ்தி. மறக்காமல், மாலையில் கோயிலுக்குச் சென்று விநாயக வழிபாட்டைச் செய்யுங்கள். பிள்ளையாரப்பனை வணங்குங்கள். வணங்கிப் பிரார்த்தனை செய்யுங்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT