Published : 05 Jan 2018 12:37 PM
Last Updated : 05 Jan 2018 12:37 PM
பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்
மார்கழி மாதத்தை தனுர் மாதம் என்பார்கள். இந்த மாதம்தான் வேதங்கள் பயிலவும் தபஸ் செய்யவும் யோகா முதலான விஷயங்களைக் கற்றுக் கொள்ளவுமான அற்புதமான மாதம் என்று சொல்லிச் சிலாகிக்கிறார்கள். பிராணாயாமம், தியானம் முதலான யோகசாதகங்களை இந்த மாதத்தில் செய்யத் தொடங்கினால், கற்றுக் கொள்வதும் எளிது. புத்தியும் மனதும் பயிற்சியில் லயிக்கும் என்பார்கள் ஆன்மிக நெறியாளர்கள். அப்படியொரு மார்கழி மாதத்தில்... அதுவும் சிவனாருக்கு உகந்த திருவாதிரை நாளில்... இந்த மண்ணில் அவதரித்தார் பகவான் ரமண மகரிஷி!
வேங்கடராமன் என்று பெயர் சூட்டினர் பெற்றோர். வேங்கடரமணன் என்றும் சொல்வார்கள். திருச்சுழியில் உள்ள சேதுபதி தொடக்கப் பள்ளியில் சேர்த்தார்கள். நான்காம் வகுப்பு வரை, அந்தப் பள்ளியில்தான் படிப்பு. ஆனால் படிப்பில் பெரிதான நாட்டமில்லை. விளையாட்டிலேயே கழித்தார். எந்நேரமும் விளையாட்டு... விளையாட்டு... விளையாட்டு!
ஒருவழியாக ஊர மாற்றப்பட்டது. திண்டுக்கல், மதுரை என்று பள்ளி வாழ்க்கை ஓடியது. பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது, விளையாட்டில் இருந்து மெல்ல மெல்ல விலகினார் ரமணர். தேவாரம், கம்பராமாயணம், திருவாசகம், திருமந்திரம் என ஆன்மிகச் செய்யுளில் மனம் லயித்தார். எப்போதும் இந்தப் பாடல்களையே முணுமுணுத்துக் கொண்டிருந்தார்.
தூங்கும் நேரம் தவிர, எல்லா நேரங்களிலும் இறை பற்றிய பாடல்களிலேயே மூழ்கினார். இறைவன் குறித்தே சிந்தித்தார். கடவுள் மீது மட்டுமே நாட்டம் கொண்டிருந்தார். கடவுளை அடைவது எவ்விதம் என்றே யோசித்தபடி இருந்தார்.
கடவுளை அடைவது என்பதே அவரின் தேடலாயிற்று. கடவுள் தேடலே அந்தச் சிறுவயதில் அத்தனை விருப்பங்கள் கொண்டதாகிப் போனது. சிறுவன் வேங்கடராமனுக்குள் ஏற்பட்ட இந்தத் தேடல் ஒருகட்டத்தில், அதீதமானது. அதிகரித்தது. இன்னும் இன்னுமாகப் பல்கிப் பெருகியது. பெருகிக் கொண்டே இருந்தது.
1885ம் வருடம், வேங்கடராமனின் தந்தையார் இறந்தார். அப்பாவின் மரணம், அவருக்குள் என்னன்னவோ நிகழ்த்தியது. அம்மாவின் அழுகையும் சொந்தபந்தங்களின் கவலையும் சிறுவன் வேங்கடராமனைத் தாக்கியது. ஒவ்வொரு சடங்குகளும் சாங்கியங்களும் அவருக்குள் கேள்விகளாக வளர்ந்து, தேடலுக்குத் தூபமிட்டன.
மனிதன்... மனிதனாக ஏன் பிறக்கிறான். பிறந்தவன் ஏன் இறந்துபோகிறான். பிறப்பு உண்டெனில் இறப்பும் உண்டுதானா. இறப்பே இல்லாதவர் எவரும் கிடையாதோ. சரி... பிறந்தால் இறக்க வேண்டும் என்றால், இறந்தால் என்னாகும்? உடலுக்கு இறப்பா, ஆத்மாவுக்கு இறப்பா? இந்த உடல் என்பது நானா? ஆத்மா என்பது நானா? அப்படியெனில் நான் யார்? பிறப்பதற்கு முன்னதாக என்னவாக இருந்தேன். இறப்புக்குப் பிறகு என்னவாக ஆகிறேன். நான் யார்? ... சிறுவன் வேங்கடராமனுக்குள் கேள்விகள் துளைத்தெடுத்தபடி இருந்தன.
அவற்றில் முக்கியமான கேள்வி... திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டே இருந்தது. அதுதான்... நான் யார்? நான் யார்? நான் யார்?
இந்தக் காலகட்டத்தில்... வெளியூரில் இருந்து ஒருவர் வந்திருந்தார். வந்தவர், அருணாசலத்திலிருந்து வருகிறேன் என்றார்.
அருணாசலமா... அப்படியொரு ஊர் இருக்கிறதா என்ன? கேள்விப்பட்டதே இல்லையே. ‘அருணாசலம் எங்கே இருக்கிறது’ என்று கேட்டான் சிறுவன்.
’அட... நீ சின்னப்பயலாச்சே. உனக்கு எப்படித் தெரியும். அருணசாலம்தான், திருவண்ணாமலை. திருவண்ணாமலைதான் அருணாசலம். அற்புதமான ஊரு. பெரிய மலை இருக்கு அங்கே. அந்த மலையே சிவலிங்கம்தான்...’ என்றெல்லாம் விவரித்தார்.
வேங்கடராமனின் மனம் திருவண்ணாமலையில் நின்றது. கற்பனையாய் திருவண்ணாமலையைப் பார்த்தான். மலையைப் பார்த்தான். சிவலிங்கத்தைப் பார்த்தான். எல்லாவற்றையும் மதுரையில் இருந்து கொண்டே ஆசை ஆசையாகப் பார்த்துக் கொண்ருந்தான். அப்போது வேங்கடராமனுக்கு, புத்தகம் ஒன்று படிக்கக் கிடைத்தது. அது... சேக்கிழார் பெருமான் அருளிய பெரியபுராணம்!
நாயன்மார்களின் சரிதம். ஒவ்வொருவரின் சரிதம் படிக்கப் படிக்க, அழுதேவிட்டான் வேங்கடராமன். அழுதுகொண்டே படித்தார். அந்த நாயன்மார் சரிதங்கள்... வேங்கடராமனின் வாழ்க்கையை வேறுவிதமாகப் புரட்டிப் போட்டன. நாயன்மார்களின் வாழ்க்கையும் அவர்களுக்குள் சிவனார் நிகழ்த்திய அற்புதங்களும் பிறகு அவர்களை சிவபெருமான் ஆட்கொண்டு அருளிய விதமும் படித்து நெக்குருகினான் வேங்கடராமன்.
இப்போது, நாயன்மார்களைக் கடந்து சிவபெருமான் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. சிவம்... சிவம்... சிவம்... என உள்ளே அரற்றியபடி இருந்தான்.
அப்படி சிவத்தை நினைக்க நினைக்க... மனதுக்குள் விஸ்வரூபமெடுத்து நின்றது திருவண்ணாமலை. நினைக்கும் போதே தித்தித்தது. நினைக்கும் போதே வெப்பம் தகித்தது. நினைக்கும் போதே குளிர்ச்சியை உணர்ந்தான். நினைக்கும் போதே எல்லாம் மறந்தது. நினைக்கும் போதே, தெரியாததும் நினைவுக்கு வந்தது.
திருவண்ணாமலை... திருவண்ணாமலை... திருவண்ணாமலை!
அந்தப் பெரியவர் முகம் சட்டெனக் கண்ணுக்கு எதிரே வந்து நின்றது. அவர் சொன்ன வார்த்தையும் விளக்கமும் காதில் கேட்டுக் கொண்டே இருந்தன.
அருணாசலம்... அருணாசலம்... அருணாசலம்!
நான் யார் எனும் தேடலுடன் இருந்த வேங்கடரமணன்... திருவண்ணாமலையைத் தேடுவோம் என முடிவு செய்தார். திருவண்ணாமலையின் பிரமாண்டம் உணர்வோம் என முடிவு செய்தார். திருவண்ணாமலையைத் தெரிந்து கொண்டால், நான் யார் என்பதை அடுத்து தெரிந்து கொள்ளலாம் என அவனாகவே திட்டமிட்டான்.
திருவண்ணாமலைக்குப் புறப்பட்டான் வேங்கடராமன்!
வேங்கடராமன் என்கிற பகவான் ரமணருக்கும் ராம்ர்சுரத்குன்வர் என்கிற பகவான் யோகி ராம்சுரத்குமாருக்கும் என்னவொரு ஒற்றுமை.
தந்தையின் மரணம் வேங்கடரமணனை உலுக்கியது. ராம்சுரத்குன்வருக்கு குருவியின் மரணம் துளைத்தெடுத்தது. அந்தப் பெரியவர் , அருணாசலம் என்று சொல்லி, திருவண்ணாமலையைச் சுட்டிக் காட்டினார். அங்கே வந்த சாது ஒருவர், ‘தெற்கு’ பக்கம் போ என்று சொல்லி வழிப்படுத்தினார்.
சேக்கிழார் அருளிய பெரியபுராணம், வேங்கடராமனை என்னவோ செய்தது. ஸ்ரீஅரவிந்தர் அருளிய ‘Lights on Yoga' எனும் புத்தகம் புரட்டிப் போட்டது.
தெற்கின் மையப்பகுதியில் இருந்து வேங்கடராமன், திருவண்ணாமலைக்கு வந்தார். வடக்கே கங்கைக் கரையின் ஊரில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்தார் .
இது மகான்களின் மகிமை. திருவண்ணாமலையின் மகோன்னதம். கடவுளின் திருவிளையாடல்.
பகவான் ரமண மகரிஷியுடன் ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் இருந்தார்.
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜெயகுரு ராயா!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT