Published : 19 Feb 2018 12:31 PM
Last Updated : 19 Feb 2018 12:31 PM
பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒருமுறை, பேலூர் காளி கோயிலுக்குச் சென்றிருந்தார். அப்போது, அங்கிருந்த கோயில் ஊழியர்கள், ‘நாங்க தினமும் பண்ற பிரசாதத்தை எங்கிருந்தோ வர்ற எறும்புகள் வந்து மொய்க்கிறதே. அதனால, கடவுளுக்கும் படைக்க முடியலை. பக்தர்களுக்கும் அதைக் கொடுக்க முடியலை’என்று சொல்லி புலம்பினார்கள்.
அவர்கள் சொல்வதைக் கேட்ட பரமஹம்ஸ்ர், ‘இன்னிக்கு கோயில் வாசல்ல ஒரு பிடி சர்க்கரையைப் போட்டு வைச்சிருங்க. அப்புறம் எறும்பு உள்ளே வரவே வராது பாருங்க’ என்றார்.
பகவான் ராமகிருஷ்ண பரமஹம்ஸர் சொன்னபடியே கோயில் ஊழியர்கள் வாசலில், சர்க்கரையை ஒரு கைப்பிடி எடுத்து வாசலில் போட்டார்கள்.
சிறிது நேரத்தில், எறும்புகள் சாரைசாரையாக வந்தன. கோயில் வாசலை அடைந்தன. அங்கே இருந்த சர்க்கரையைக் கண்டன. சர்க்கரையோடு சர்க்கரையாகக் கலந்து புரண்டன. சிறிது நேரத்தில், வந்தவழியே திரும்பிச் சென்றன.
அங்கே... கோயிலின் உள்ளே செய்து வைத்த பிரசாதங்களைப் பார்த்த ஊழியர்களுக்கு நிம்மதி கலந்த அதிர்ச்சி.
‘’பாருங்கள் சுவாமி. நீங்கள் சொன்னது போலவே, சர்க்கரையை கோயில் வாசலில் தூவினோம். எறும்புகள் அதைப் பார்த்துவிட்டு, மொய்த்துவிட்டு, அப்படியே போய்விட்டன. இங்கே பிரசாதங்களில் ஒரு எறும்பைக் கூட காணோம். இத்தனைக்கும் விதம்விதமான பிரசாதங்கள் இருக்கின்றன. எப்படி சுவாமி இப்படி?’’ என்று கேட்டார்கள்.
பரமஹம்ஸர் சிரித்துக் கொண்டே சொன்னார்... ‘’என்ன செய்வது... அந்த எறும்புகளும் மனிதர்களும் ஒன்றுதானே’’ என்றார்.
அங்கிருந்தவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. பரமஹம்ஸரே தொடர்ந்தார்.
‘’மனிதர்களும் வாழ்க்கையில் உயர்ந்த லட்சியங்களையெல்லாம் வைத்திருப்பார்கள். ஆனால் நடுவிலே கிடைக்கிற அற்ப சந்தோஷங்களுக்கு மயங்கி, மேலே போகாமலேயே விட்டுவிடுகிறார்கள்’’ என்று சொன்னாராம்!
எறும்பின் சின்னதான செயலைக் கொண்டே உலகத்து மனிதர்களுக்கே மிக எளிமையாகவும் அழகாகவும் போதித்த பரமஹம்ஸரை அங்கே இருந்தவர்கள், மீண்டும் நமஸ்கரித்தார்கள்!
- நாளை 20.2.18 செவ்வாய்க்கிழமை, பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸரின் பிறந்தநாள். பரமஹம்ஸரைப் போற்றுவோம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT