Last Updated : 16 Jan, 2018 01:17 PM

 

Published : 16 Jan 2018 01:17 PM
Last Updated : 16 Jan 2018 01:17 PM

வெற்றிவேல் முருகனுக்கு... - புதிய தொடர்

முருகா என்ற சொல்லுக்கு உருகாதார் யார். அந்த மூன்றெழுத்து... சொல்லும்போது நாவையும் கேட்கும் போது செவியையும் உணரும் போது புத்தியையும் தெளியும் போது அறிவையும் இனிக்க வைக்கிற மந்திரச் சொல்! கடவுளருக்கான மந்திரங்கள், நம்மை ஒருமுகப்படுத்தும். அவற்றில் சுவாரஸ்யம்... முருகா எனும் பெயரே மந்திரம் போல் நம்மை ஒருமுகப்படுத்திவிடும். அத்தனை சக்தி கொண்ட மூன்றெழுத்து நாயகன்... முத்தமிழ்க் குமரன்!

ஆனால் முருகனுக்குத்தான் எத்தனையெத்தனை பெயர்கள். யோசித்துப் பார்த்தால், இருக்கும் தெய்வங்களிலேயே முருகப்பெருமானுக்குத்தான், ஏராளமான திருநாமங்கள் இருக்கிறதோ... என்று மலைக்கவைக்கிறது. மலைகள் தோறும் இருப்பவன், அப்படித்தான் நம்மை மலைக்கச் செய்வான்!

இந்து சமயத்தில்... ஏராளமான தெய்வங்கள். ஏகப்பட்ட வழிபாடுகள். எக்கச்சக்க சடங்கு சாங்கியங்கள். அவை அனைத்துமே ‘எந்த ரூட்ல போனாலும் எப்படியாவது மடக்கிப் பிடிச்சிடலாம்’ என்பது மாதிரி, ஏதேனும் ஒரு தெய்வத்தை எடுத்துக் கொண்டாலும் சரி... எதையேனும் ஒரு வழிபாட்டில் லயித்துக் கிடந்தாலும் சரி... எந்த சடங்கு களையேனும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு நடைமுறைப்படுத்தினாலும் சரி... எல்லாமே ஆண்டவன் திருப்பாதங்களில் சரணடையும் விஷயத்தையே நமக்கு போதித்திருக்கின்றன.

‘போகிற இடம் எதுவாக இருந்தாலும் சரி, போய்ச் சேரும் இடம் கோயிலாக இருக்கவேண்டும்’ என்பார்கள்.

செளரம், சைவம், சாக்தம், கெளமாரம், காணாபத்யம், வைஷ்ணவம் என வழிபாடுகள் பல உள்ளன. இவை அனைத்தும் ஒவ்வொரு தெய்வங்களை வழிபடுவதற்கான வழிவகைகளைக் கொண்டு கட்டமைக்கப்பட்டன.

செளரம் என்பது சூரிய வழிபாடு. சைவம் என்பது சிவ வழிபாடு. சாக்தம் என்பது சக்தி வழிபாடு. அதாவது அம்மன் வழிபாடு. காணாபத்யம் என்பது கணபதி வழிபாடு. வைஷ்ணவம் என்பது மகாவிஷ்ணு வழிபாடு. கெளமாரம் என்பது முருக வழிபாடு! ஷண்மதம் என்பார்களே. அதாவது ஆறு வகையான வழிபாட்டு முறைகளைச் சொல்லியிருக்கிறது புராணம்!

ஷண்மதம் என்றால் ஆறு. இந்த ஆறில், ஒவ்வொன்றை எடுத்துக் கொண்டு, அதை மட்டுமே கொள்கையாகவும் கோட்பாடாகவும் வழிமுறையாகவும் வழிபாடாகவும் கொண்டு வணங்கி வருபவர்கள் உண்டு. எம்மதமும் சம்மதம் என்பது போல், எல்லா வழிபாட்டு முறைகளைப் பின்பற்றுபவர்களும் இருக்கிறார்கள்.

முதலாளி - தொழிலாளி பாகுபாடு மாதிரி பக்தி இருந்த காலமும் உண்டு. பக்தி என்பது இறைவனை அடையும் வழி என்பது பின்னாளில் தெரிய வந்தபோது, உணர்ந்து தெளிந்த போது, இன்னும் வழிபாடுகள் அதிகரித்தன. பூஜைகளிலும் தரிசனங்களிலும் லயித்துப் போனார்கள் மக்கள்.

பக்தி என்பது கடவுளை அடைவது. அதாவது பரமாத்மாவான இறைவனை, ஜீவாத்மாவாகிய மனிதர்கள் நெருங்குவது. ஆக, இப்படி நெருங்குவதற்கான எளிய வழிதான்... வழிபாடு! அந்த வழிகளில் மிக மிக எளிமையான, இனிமையான வழியே முருக வழிபாடு என்கின்றனர் கந்தக் கடவுளின் பக்தர்கள்!

கோயில்களைப் பார்ப்பதே கொள்ளை ஆனந்தம். கோயில்களில் தெய்வங்களையும் சிற்பங்களையும் பார்க்கப் பார்க்க, பரவசமும் அமைதியும் தருபவை. முக்கியமாக, கோயில்களில் பக்தர்கள் கூட்டம் பார்க்கும் போதெல்லாம், நம்மையும் அறியாமல், அந்தக் கூட்டக் குதூகலிப்பிற்குள் ஐக்கியமாகிவிடுவோம்.

கடவுளை வழிபட வேதம் தெரிந்திருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. மந்திரங்கள் சொல்லத் தெரிந்திருக்கவேண்டும் என்பது முக்கியமில்லை. ஜபங்களில் மூழ்கத் தெரிந்திருக்க வேண்டும் என்கிற கட்டாயம் ஏதும் கிடையாது. இறைவனை வாயாரக் கூப்பிட்டு, கண்ணாரத் தரிசித்து, மனதாரப் பிரார்த்தனை செய்துகொண்டால் போதும். கூப்பிட்ட நம் குரலுக்கு ஓடோடி வருவார்கள் தெய்வங்கள்.

எளிய மனிதர்களுக்கான வழிபாட்டு முறையே... இறைவனை கூப்பிட்டு வழிபடுவதுதான். அப்படி எளிய மனிதர்களுக்கான கூப்பிடு பொருளாக, பொருள் நிறைந்திருப்பவனாக, பொருள் கொடுப்பவனாக அருள்கிறான் கந்தக் கடவுள். இதனால்தான் எளிய மனிதர்கள், ‘எங்க சாமி... முருகப்பன்’ என்று கொண்டாடுகிறார்கள்.

தமிழகத்தில்... அப்பா சிவபெருமானுக்கும் தாய்மாமன் மகாவிஷ்ணுவுக்கும் ஏராளமான கோயில்கள் இருக்கின்றன. அம்மா உமையவளுக்கும் ஆலயங்கள் நிறையவே உண்டு. ஆனாலும் அப்பாவை விட, மாமாவை விட, அம்மாவை விட பிள்ளைக்குக் கொஞ்சம் மவுசு ஜாஸ்திதான். ஏனென்றால், எளிய மனிதர்களின் கடவுளாக, தமிழ்க்கடவுளாக போற்றப்படுகிறான் முருகப்பெருமான்!

முருகு என்றால் அழகு. முருகன் என்றால் அழகன். ஆமாம்... முருகன் பேரழகன். அவன் வாகனமான மயிலைவிட, கொள்ளை அழகு கொண்டவன். பாலகன். குமரன். பாலகுமாரன். சிறுவயதுக் கடவுள். வைஷ்ணவத்தில் குறும்புக் கண்ணனென்றால், இங்கே கோபக்கார பாலகன். அந்தக் கோபத்தில்தான் பாலனாக, பாலதண்டாயுதபாணியாக, ஓர் தலத்தில் நின்றுகொண்டிருக்கிறான். நின்றபடியே இருந்து, நம்மையெல்லாம் வென்று கொண்டிருக்கிறான்.

சின்னப் பிள்ளை என்று ஏமாற்றுகிறார்கள் என்றதால்தானோ என்னவோ, படைத்த பிரம்மனையே பிரணவப் பொருள் கேட்டு, கிடுக்கிப்பிடி போட்டான். சூரனை அழிக்க, படைவீடுகள் உருவாக்கினான். அதில் முக்கியமான ஆறு வீடுகள், ஆறுபடை வீடுகள் என்று அழைக்கப்படுகின்றன. பாலகனும் நானே. பலசாலி, பராக்கிரமசாலியும் நானே என்பதை உணர்த்தினான்.

ஆறுமுகங்களைக் கொண்டதால், அவனுக்கு ஆறுமுகம் என்று பெயர். சம்ஸ்கிருதத்தில், ஷண்முகம் என்று அர்த்தம். கடலோரத்தில் இருந்து கொண்டு ஆட்சி செய்வதால், செந்திலாண்டவர் எனும் பெயர் கொண்டான். இங்கே பாலகன் இல்லை அவன். அதேபோல், பிரம்மாவிடம் பிரணவப் பொருள் கேட்டான். சிறையிலடைத்தான். அப்பா சிவனார் தட்டிக் கேட்டார். ‘ அப்படியெனில் நீ சொல்லு’ என்றான். ஆக, அப்பனுக்கே பாடம் நடத்தினான். அதனால், சுவாமிகளுக்கெல்லாம் நாதனானான். சுவாமிநாதன் எனும் பெயர் பெற்றான்.

இப்படியெல்லாம் முருகப் பெருமைகளை அடுத்தடுத்த இன்னும் இன்னுமாக விவரமாகப் பேசுவோம்.

கந்தசஷ்டிக் கவசத்தில்... எல்லோருக்கும் பிடித்த வரிகள்...

காக்க காக்க கனகவேல் காக்க

நோக்க நோக்க நொடியினில் நோக்க

தாக்கத் தாக்க தடையறத் தாக்க

பார்க்கப் பார்க்க பாவம் பொடிபட!

இவ்வுலகின் மக்கள் அனைவரையும் கனகவேல் காக்கட்டும். வேல் போன்ற வேலவனின் கண்கள், நம்மை எப்போதும் பார்த்துக் கொள்ளட்டும். நம்மைத் தாக்குகிற , முடங்கச் செய்கிற தடைகளையெல்லாம் தாக்கட்டும். நம்மைப் பார்க்கப் பார்க்க, நம் பாவமெல்லாம் பொடிபடட்டும். தூள் தூளாகட்டும் !

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா எனும் கோஷம் சொல்லி, கந்தபிரானைத் தரிசிப்போம்!

தொடர்ந்து வழிநடத்தும் வள்ளிமணாளன், இந்தத் தொடரையும் வழிநடத்துவான்!

- வேல்வேல்

தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x