Published : 12 Mar 2024 04:58 AM
Last Updated : 12 Mar 2024 04:58 AM

‘நோன்புக்கான கூலியை இறைவன் நேரடியாகத் தருகிறான்’ - கே.ஏ.முகம்மது யூசுப் தாவூதி

‘‘ஓ! முஃமின்களே! உங்கள் மீது நோன்பைகடமையாக்கியுள்ளோம். முன் வாழ்ந்துசென்ற சமுதாயத்தவர்கள் மீது கடமையாக்கப் பட்டதைப்போல’’ என்று குர்ஆன் (2:183) நயம்படக் கூறுவதை பார்க்கிறோம்.

மனிதனின் உடலையும், உள்ளத்தையும் ஒரே நேரத்தில் பழுதடையச் செய்யும் மிகநெருக்கடியான காலம் இது. எந்த மந்திரங்களுக்கும் பணியாத அவசர உலகம். உடலின் அனைத்து உறுப்புகளும் சோர்வடைந்து விட்டன. உள்ளமோ சொல்லவே தேவையில்லை. எதையும் உள்வாங்கி நிதானமாக யோசிக்க மறுக்கிறது.

எனவே, இவ்விரண்டையும் ஒருசேர செயல்பட வைப்பதுதான் இந்த நோன்பின் பிரதான வேலை. தொடர்ந்து பதினோறு மாதங்கள் இயங்கிக் கொண்டிருந்த உடல் உறுப்புகளுக்கு ஒருமாத காலம் ஓய்வு.

ஜோர்டான் மருத்துவக் கல்லூரியில் டாக்டர் சுலைமான் என்ற மருத்துவ நிபுணர் 15 வயதிலிருந்து 64 வயது வரையிலான 42 ஆண்கள், 24 பெண்களிடம் ஆய்வு செய்தார். ரமலானுடைய ஆரம்பத்தில் இருந்த எடை கடைசியில் ஆறு கிலோ வரை குறைந்திருக்கிறது. கேன்சர் முதல் எய்ட்ஸ் வரை அனைத்து நோய்களுக்கும் சிறந்த சிகிச்சையாக இந்த நோன்பு அமைந்திருக்கிறது. நோன்பு ஆரோக்கியத்தை தருவதுடன் ஆயுளையும் அதிகரிக்கச் செய்கிறது என குறிப்பிடுகிறார்.

எடை கூடுவதால் தான்முழங்கால் மூட்டுவலி உண்டாகிறது. எனவே நோன்பின் மூலம் மூட்டுவலியும் குணமடைகிறது. பகல் முழுக்க உணவு சாப்பிடாததால் ரத்தக் குழாய்களில் படிந்துள்ள கொழுப்பு கரைந்து ரத்த நாளங்கள் சுத்தமடைகின்றன. ரத்தக் கொதிப்பு, மாரடைப்பு தவிர்க்கப்படுகிறது. பிட்ஸ்பர்க்பல்கலைக்கழக ஆராய்ச்சியில், இந்த நோன்புநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது என கூறினார்கள். எனவே உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் பயனுள்ளது நோன்பு ஆகும்.

நபி (ஸல்) அவர்கள் ‘நோன்பிருங்கள் ஆரோக்கியம் பெறுங்கள்’ என்றார்கள். இஸ்லாமியர்களின் நோன்பில் இன்னொரு கூடுதல் சிறப்பம்சம் உள்ளது. என்னவெனில் உடலுடன் சேர்ந்து உள்ளத்தையும் சுத்தப்படுகிறது. நோன்பிருக்கும் ஒருவர் தனதுஉணவையும், குடிபானத்தையும் சாப்பிடுவதை தவிர்த்திருக்கிறார். இந்நிலையில், பிறரது உணவையும் பொருளையும் அபகரிக்க ஆசைப்பட மாட்டார்.

மேலும், தவறு செய்வதிலிருந்து இந்த நோன்பு தடுக்கிறது. உள்ளத்தை தூய்மைப்படுத்தாத நோன்பு, நோன்பே அல்ல என்று நபி (ஸல்) கூறியதைப் பார்க்கிறோம். வருடம் ஒருமுறை நமது உடலையும் உள்ளத்தையும் சுத்தப்படுத்தும் கிரியா ஊக்கிதான் நோன்பு. இது நமது விருப்பத்துக்கு உரிய ஒன்றாக இல்லாமல் இறைவனின் கடமைகளில் ஒன்றாகக் கூறப்பட்டுள்ளது.

நோன்பு தரும் பயிற்சி: இதன் மூலம் உடலாலும் உள்ளத்தாலும் தூய்மையான, ஆரோக்கியமான, பலமிக்க ஒரு சமூகத்தைக் கட்டமைக்க இறைவன் விரும்புகிறான். அதுவே நமக்கு நோன்பு தரும் பயிற்சியாகும்.

நோன்பு என்றால் என்ன? சில செயல்களை விடுவதற்குப் பெயர் நோன்பு. இந்தநோன்பு மற்ற வணக்கங்களில் வித்தியாசமானது. தொழுகை என்பது சில உடற்பயிற்சிகளை கொண்டது என்று கூறலாம். நேராக நிற்பது, குனிவது, நெற்றியை பூமியில் வைப்பது என சில செயல்களுக்கு தொழுகை எனப்படும். அதேபோல ஜகாத் என்பது தனது பொருளாதாரத்திலிருந்து கணக்கிட்டு எடுத்து ஏழைகளுக்கு பகிர்ந்தளிப்பதற்கு ‘ஜகாத்’ என கூறப்படும்.

அதேநேரத்தில் நோன்பு என்றால் எந்த செயலும் செய்ய வேண்டியதில்லை. வழமையாகச் செய்து கொண்டிருக்கின்ற செயல்களாகிய உணவு சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பது, உடலுறவு கொள்வது போன்ற சில செயல்களை விடுவதற்குப் பெயர்தான் நோன்பு. பிரத்யேகமாக எந்த செயலையும் செய்ய வேண்டியதில்லை. ஆனால் இந்த நோன்புக்கான கூலியை பார்த்தால் நாம் பிரமித்து விடுவோம்.

மற்ற வணக்கங்களுக்கு கூலிகள் வானவர்களால் வழங்கப்படுகிறது என்றால் இந்த நோன்புக்கு மட்டும் கூலியை இறைவனே நேரடியாகத் தருகிறான். இந்த நோன்பாளிக்காக சுவனத்தில், ‘ரய்யான்’ என்ற பெயருடைய தனி நுழைவாயில் உள்ளதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

கட்டுரையாளர்:

முதல்வர், உஸ்வதுல் ஹஸனா ஓரியண்டல்

அரபிக் கல்லூரி, பள்ளப்பட்டி

கரூர் மாவட்டம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x