Published : 17 Nov 2017 09:06 AM
Last Updated : 17 Nov 2017 09:06 AM
இந்த உலகம், நம்பிக்கையால் இயங்கிக் கொண்டிருக்கிறது. நம்பிக்கைதான் மனித குலத்துக்கான, மனித வாழ்வுக்கான தூண்டுகோல். கிரியாஊக்கி. வைட்டமின். எனர்ஜி. இந்தக் காலத்து பாஷையில் சொல்லவேண்டும் என்றால்... சார்ஜர்! அந்தக் காலத்திலேயே... ‘யானைக்குத் தும்பிக்கை, மனிதனுக்கு நம்பிக்கை’ என்று சொல்லிவைத்திருக்கிறார்கள். யானையின் பலம் தும்பிக்கையில் இருக்கிறது. மனிதர்களாகிய நம்முடைய பலம், நம்பிக்கையில்தானே இருக்கிறது. அதைக் கொண்டுதானே இயங்குகிறோம்.
அந்த நம்பிக்கை சும்மா வந்துவிடுமா? பாக்கெட்டில் ஏ.டி.எம். கார்டு இருந்து விட்டால், கையில் பணம் வந்துவிடுமா என்ன? அதை, ஏ.டி.எம். சென்டருக்குச் சென்று, அங்கே உள்ள மிஷினில் செருகி, நம்பர் அழுத்தி, தேவையான பணத்தை டைப் செய்து... என்று அடுத்தடுத்து நாம் இயங்கவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, முன்னதாக நம் அக்கவுண்ட்டில் பணம் இருக்கவேண்டும் என்பதுதான் ரொம்ப ரொம்ப முக்கியம். ‘அதான்... கிரெடிட் கார்டு இருக்கே... பணமே அக்கவுண்ட்ல இல்லேன்னாலும் எடுக்கலாமே...’ என்று சிலர் கேட்கலாம். ஆனாலும் வங்கி அனுமதி, அந்த அனுமதிக்கான குறைந்தபட்ச தகுதி என்றெல்லாம் இருக்கிறதுதானே. அப்படித்தான் நம்பிக்கைக்கும் ஏதோவொன்று மூலாதாரமாக இருக்கிறது. அதுதான் பக்தி.
வங்கிக்கும் நமக்குமான தொடர்பு போல, கடவுளுக்கும் நமக்குமான தொடர்பை ஏற்படுத்தித் தருவதுதான் பக்தி. இந்த பக்தியின் மூலமாக நமக்குள் ஏற்படுவதுதான் நம்பிக்கை. இந்த நம்பிக்கையை வைத்துக் கொண்டுதான் அன்றாட வாழ்வு துவங்கி, அடுத்த பத்து இருபது வருடங்களுக்கும் சேர்த்துத் திட்டமிடுகிறோம்; திட்டத்தைச் செயலாக்க முனைகிறோம். செயலாக்குகிறோம். ஆக, சிந்தனை, திட்டமிடல், செயலாக்குதல் என எல்லா விஷயங்களிலும் ஊடுருவி, ஒரு மாலுமி போல் இருந்து நம்மை வழிநடத்துகிறது பக்தி.
ஒவ்வொரு ஊருக்கும் ஓர் பெருமை உண்டு. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஓர் சாந்நித்தியம் இருக்கிறது. அந்தச் சக்தியின் விளைவாலும் சாந்நித்தியத்தின் மூலமாகவும், காந்தமென நம்மை ஈர்க்கும். இழுக்கும். இணைத்துக் கொள்ளும். நம் பரதக் கண்டத்தில் அப்படியான ஊர்கள் ஏராளம். மாநிலங்கள் நிறைய! அப்படியான ஊர்களிலும் மாநிலங்களிலும், தனிப்பெருமை கொண்டது கேரளம்!
எங்கும் நிறைந்திருக்கிறான் இறைவன். எல்லா இடங்களிலும் நீக்கமறப் பரவியிருக்கிறது இறைச் சக்தி. ஆனால் கேரளாவுக்கு தனிச் சிறப்பும் பெருமையும் உண்டு. மலையும் பசுமையும் சார்ந்த இடம் என்பதால் கிடைத்த கிரீடம் அல்ல அது. விவசாயம் தழைத்துக் கிடக்கிற பூமி என்பதால் உண்டான மகுடம் அல்ல! வேறு எந்த வார்த்தைகளைச் சொல்லியும் பெருமைப்பட்டுக் கொள்ள தேசங்கள் பல இருந்தாலும் கேரளத்துக்குக் கிடைத்திருக்கிற அந்தப் பெருமை.. .அளப்பரியது. ஆனந்தமானது. அது உங்களுக்குத் தெரிந்ததுதான். கேரளம்... கடவுளின் தேசம்!
பெற்றோர் என்றால் அம்மா, அப்பா இரண்டுபேரையும்தான் குறிக்கும் என்பது நமக்குத் தெரியும்தானே. அப்படித்தான் கடவுளின் தேசம் என்பதும். கடவுளின் தேசம் என்றால் என்ன அர்த்தம். அது... பக்தர்களின் தேசம் என்றுதான் நான் உணர்கிறேன். கோயில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்று சொல்லிவைத்தார்கள் ஆன்றோர். அதை சிரமேற்கொண்டு, கோயிலையும் உருவாக்கி, கோயிலைச் சுற்றி ஊரையே நிர்மாணித்தார்கள் மன்னர் பெருமக்கள். இங்கே... கேரள தேசம் கடவுளின் தேசம் என்றால்... அது பக்தர்களின் தேசமாகத்தான் உணரவேண்டும். அது நம்முடைய தேசம். நம்முடைய பூமி. நம்முடைய சக்தியைப் பெருக்கும் சக்திமிக்க ஸ்தலம்!
மலையும் மலை சார்ந்துமாகத் திகழும் இந்தக் கேரளத்தில் முக்கியமானதொரு மலையெனக் கம்பீரம் காட்டியும் அருட்பிரவாகமெடுத்தும் நிற்கிறது சபரிமலை. சொல்லும்போதே குளிர்ந்து போகிறது மனம். நினைக்கும்போதே, நெஞ்சே தக்கையாகிறது. அந்த மலையைப் பார்க்கும் போதே, மலைத்து தன்னையே, சுயத்தையே மறந்து போகச் செய்கிறது பக்தி. ஐயப்ப பக்தி. சுயத்தை மறக்கும்போதே கர்வத்தை இழக்கிறோம். இன்றைக்கு அதிகமாகப் புழங்குகிற சொல்லாகவும் செயலாகவும் திகழ்கிற ஈகோவைத் தொலைக்கிறோம். இந்த சபரிமலை எனும் சாந்நித்தியம் மிகுந்த மலை, அப்படித்தான் செய்யும். அந்த மலையும் மலையில் குடிகொண்டிருக்கும் ஐயன் ஐயப்ப சுவாமியும் அங்கே அவர் ஸ்தாபிதமானதும் இன்றைக்கும் தபஸ் பண்ணிக் கொண்டிருப்பதும் அவ்விதம்தான்!
‘அவனுக்கு நான் எந்த வகையிலும் சளைச்சவன் இல்லை தெரியும்தானே...’ என்கிறோம். ‘அவன் என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா...’ என்று கேலியாய், அலட்டலாய், கர்வமாய் பொருமுகிறோம். ஆனால்... சபரிமலையின் இன்னொரு சிறப்பாக, கர்வத்தையெல்லாம் தொலைக்கும், அழிக்கும் ஸ்தலமாக நான் நினைப்பது... அது கடவுளே கடவுளுக்காக சிருஷ்டி பண்ணின ஸ்தலம். பரசுராமர் எனும் அவதார புருஷர்... ஐயன் ஐயப்ப சுவாமியை, சுவாமியின் விக்கிரகத் திருமேனியை பிரதிஷ்டை செய்த புண்ணியம் மிகுந்த மலை அது! மலை போலான துக்கங்களும் துயரங்களும் மட்டுமின்றி, மலையென உயர்ந்து நம் உள்ளத்தில் இருந்துகொண்டு, நம்மை வளர விடாமல் செய்யும் கர்வத்தைத் தொலைக்கச் செய்யும் அற்புதமான க்ஷேத்திரம்!
அதனால்தான், ஐயப்ப சுவாமிக்கு விரதம் இருக்கத் துவங்கி விட்டால், மாலை அணிந்து கொண்டுவிட்டால், நெற்றியில் சந்தனம் தரித்து நித்திய அனுஷ்டானங்களில், காலையும் மாலையும் சரண கோஷம் சொல்ல ஆரம்பித்துவிட்டால், சிறியவர் பெரியவர் எனும் வித்தியாசம் இல்லாமல், எல்லோரும் எல்லோரின் காலிலும் விழுந்து நமஸ்கரிக்கிறார்கள். ‘சுவாமி சரணம்’ என்று யாரைப் பார்த்தாலும் யார் வேண்டுமானாலும் சொல்லி வணங்குகிறார்கள்.
சரணம் என்றால் சரணாகதி. இறைவனைச் சரணடைவது. இது எளிமையானதும் அல்ல. அவ்வளவு எளிதாகப் புரிந்து உணர்ந்து செயல்படுவதுமான விஷயமும் கிடையாது. ஆனால், சரணாகதித் தத்துவத்தை ஐயப்ப விரதத்தின் மூலமாகவே நமக்கு மிக எளிமையாக, மிக மிக இலகுவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
இதோ... பிறந்து விட்டது கார்த்திகை மாதம். ஒளியை உலகுக்கும் உள்ளத்துக்கும் தரும் ஒப்பற்ற மாதம். கார்த்திகேயனான முருகப்பெருமானுக்கு உரிய அருமையான மாதம். சிவ சக்தி ஐக்கியமாகி, அருள் வழங்கும் மாதம். அடியையும் தொட முடியாமல், முடியையும் எட்ட முடியாமல் மலையே சிவமெனத் திகழ்ந்த ஈசன், ஜோதியாக, ஒளியாகக் காட்சி தந்த அற்புதமான மாதம். அவ்வளவு ஏன்... சபரிகிரிவாசன் ஐயன் ஐயப்ப சுவாமிக்கான சக்தி மிக்க மாதம்!
‘எல்லா சாலைகளும் ரோம் நகரம் நோக்கி’ என்றொரு வாசகம் உண்டு. இது உண்மையா. தெரியவில்லை. ஆனால் கார்த்திகை மாதம் துவங்கிவிட்டால், கார்த்திகை, மார்கழி தை துவங்கும் நன்னாள் என எல்லா நாட்களும், மாலை அணிந்த எல்லா சாமிமார்களும் சபரிமலை நோக்கித்தான் யோசிக்கிறார்கள். அங்கே யாத்ரீகனாய் செல்கிறார்கள். சென்று யாசிக்கிறார்கள்.
இந்தக் கட்டுரையைப் படித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஐயப்ப சுவாமிக்கு மாலை அணிந்து விரதத்தைத் துவக்கி இருப்பார்கள். நாளை... நாளை மறுநாள்... என ஒவ்வொரு நாளும் இன்னும் இன்னுமாக விரதம் மேற்கொள்கிற பக்தர்களும் இருக்கிறார்கள்.
அத்தனை ஐயப்ப சுவாமிகளுக்கும் சுவாமி சரணம் சொல்லி, இந்த ‘சுவாமி சரணம்...’ தொடரைத் தொடங்குகிறேன்.
ஐயப்ப மலையையும், ஐயப்ப க்ஷேத்திரங்களையும் குருசாமி மார்களின் சிலிர்க்கச் செய்யும் அனுபவங்களையும் தமிழகத்தில் உள்ள ஐயப்பன் குடிகொண்டிருக்கும் ஆலயங்களையும் இந்தத் தொடர் மூலமாக, இந்தத் தினசரித் தொடர் மூலமாக வழங்க இருக்கிறேன். இவை அனைத்தும் சாஸ்தாவின் கட்டளை. பந்தளத்து ராஜாவின் ஆணை. மணிகண்ட சுவாமியின் பேரருள்.
நாளைய தினம்... விரத முறைகளைப் பார்ப்போம். விரதங்களை முறையே அனுஷ்டிப்போம்.
சுவாமியே... சரணம் ஐயப்பா!
- ஐயன் வருவான்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT