Published : 09 Mar 2024 06:30 AM
Last Updated : 09 Mar 2024 06:30 AM

சென்னை, புறநகரில் சிவாலயங்களில் மகா சிவராத்திரி கோலாகலம்: கோயில்களில் விடிய விடிய சிறப்பு வழிபாடு

மகா சிவராத்திரியை முன்னிட்டு, சென்னை சைதாப்பேட்டை, காரணீஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள். படம்: ம. பிரபு

சென்னை: சென்னை மற்றும் புறநகரில் உள்ள சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. கோயில்களில் பக்தர்கள் விடியவிடிய சிறப்பு வழிபாடு செய்தனர். சிவனுக்குரிய விரதங்களாக, மாத, நித்ய, யோக, மகா சிவராத்திரி என ஆண்டு முழுவதும் பல சிவராத்திரிகள் உள்ளன.

இதில் மகா சிவராத்திரி விரதம் சிறப்பானது என புராணங்கள் கூறுகின்றன. மாசி மாதம், தேய்பிறை சதுர்த்தசி நாளையே மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. ராத்திரி என்ற சொல்லுக்கு அனைத்தும் செயலற்று ஒடுங்குதல் என்று பொருள். உயிர்கள் செயலற்று, ஈசன் நினைவாக ஒடுங்கும் காலமே சிவராத்திரி.

இந்த புண்ணிய காலத்தில் சிவனின் நாமம் கூறி, நான்கு கால பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கத்தில் உள்ளது. மகா சிவராத்திரி நாளில், 3-ம் காலத்தில் ஈசனை வழிபட்டால் பாவங்கள் நம்மை விட்டுவிலகும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் நேற்று மகா சிவராத்திரி விழா தமிழகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி விழாவை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

4 கால பூஜைகள்: சிவராத்திரியை முன்னிட்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் விளையாட்டு மைதானத்தில் சிவ தரிசனம், நாட்டிய சங்கம் என இன்றுகாலை வரை பல்வேறு நிகழ்ச்சிகளும், 4 கால பூஜைகள், தீபாராதனைகளும் நடைபெற்றன. இதேபோல், சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயில், புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயில்களில் பக்தர்கள் கொண்டுவரும் பாலை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது.

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில், திருவொற்றியூர் தியாகராஜ சாமி கோயில், கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோயில், புழல் திருமூலநாதசாமி ஆகிய கோயில்களில் 4 கால பூஜைகள் நடைபெற்றன. அதேபோல், ஈஞ்சம்பாக்கம் சுந்தரலிங்கேஸ்வரர் கோயில், பாரிமுனை ஏகாம்பரேஸ்வரர், வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர், வேளச்சேரி தண்டீஸ்வரர், மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர், பள்ளிக்கரணை ஆதிபுரீஸ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களிலும், வடபழனி முருகன் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களிலும் நேற்று மகா சிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது.

பரதநாட்டியம், பட்டிமன்றம்: சிவாலயங்களில் நடைபெற்ற 4 கால பூஜைகளில் பக்தர்கள், வில்வம் இலைகள், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களை பூஜைக்காக வழங்கினர். அந்தவகையில், அனைத்து சிவாலயங்களிலும் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விடிய விடிய சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும், பக்தி சொற்பொழிவு, திருவிளக்கு பூஜை, மாணவ, மாணவிகளின் பரதநாட்டியம், பட்டிமன்றமும் நடைபெற்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x