Published : 22 Dec 2017 03:51 PM
Last Updated : 22 Dec 2017 03:51 PM
மணிகண்ட சுவாமியை நாமெல்லாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். வழிபட்டு வருகிறோம். பந்தள தேசத்தில், அரண்மனையில் அந்த முதல்மந்திரி மட்டும் மணிகண்டனின் வருகையைப் பிடிக்காமல் இருந்தாலும், அரண்மனை மொத்தமும் கொண்டாடிக் களித்தது. மகாராணியோ இமைப்பொழுதும் பிரியாமல் மணிகண்டனை சீராட்டிக் கொண்டிருந்தாள். செல்லமாக, பிரியத்துடன், ராஜராஜன் என்றும் அவனை, மணிகண்டனை அழைத்துக் கொஞ்சினாள். அணைத்து அன்பு பாராட்டினாள்.
மணிகண்டனுக்கு கல்வி கற்கும் வயது வந்தது. பந்தள தேசத்தின் அந்த வனத்தில், ஆஸ்ரமம் அமைத்து குருகுலம் நடத்திக் கொண்டிருந்தார் முனிவர் பெருமான் ஒருவர். ஒரு சுபயோக சுபநாள் பார்த்து, ராஜாவும் ராணியும் மணிகண்டனை அழைத்துக் கொண்டு முனிவரிடம் சென்றார்கள். நமஸ்கரித்தார்கள். குருதட்சணை வழங்கினார்கள்.
மணிகண்டன் அங்கேயே தங்கினான். சதாசர்வ காலமும் குருவுக்கு அருகிலேயே இருந்து குரு ஸ்தலத்திலேயே இருந்து கல்வி கற்கத் தொடங்கினான். குருவிடம் மிகுந்த மரியாதையுடன் நடந்து கொண்டான். சொல்லிக் கொடுப்பதை சட்டெனக் கிரகித்துக் கொண்டான். எல்லோரிடமும் பணீவுடனும் அன்புடனும் நடந்துகொண்டான்.
எல்லோரும் அவனுடைய செயல்களைக் கண்டு பூரித்தார்கள். ‘நல்ல பையனா இருக்கானே...’ என்று பாராட்டினார்கள். ஆனால் முனிவருக்கு... இவன் சாதாரணன் இல்லை என்பதை அப்போதே, அவன் குருகுலத்துக்கு வந்தபோதே உணர்ந்தார். இவனுக்குப் புதிதாக நாம் ஏதும் கற்றுத் தரவேண்டிய அவசியமில்லை என அறிந்தார். ஆனாலும் இந்தச் சிறுவனுக்கு குருவாக நாம் இருப்பது பெரும்பாக்கியம். எந்த ஜென்மத்தில் நாம் செய்த தவத்தில் விளைவோ... என்று நெகிழ்ந்து போனார்.
மணிகண்டன் சூட்டிகையாக, சுறுசுறுப்பானவனாக, அமைதியானவனாக, வேகம் உள்ளவனாக, விவேக குணம் கொண்டவனாக, புத்தித் தெளிவுடன் இருந்தான். ஆயுதப் பயிற்சிகளை மிக எளிதாக கற்றுக் கொண்டான். அம்பு விடும் பயிற்சியில் தேர்ந்தவனானான். எல்லாப் பயிற்சிகளிலும் எவருமே நினைக்க முடியாத அளவுக்கு, மளமளவென வளர்ந்திருந்தவனை, ஆஸ்ரமத்தில் இருந்தவர்கள் வியப்புடன் பார்த்தார்கள். மலைத்துப் போனார்கள். குருகுலவாசம் முடிந்தது.
மணிகண்டன் அங்கிருந்து செல்லும் தருணம் வந்தது. குருவுக்குக் காணிக்கையாக, பொன்னு,ம் பொருளும், பழங்களும் வஸ்திரங்களுமாகக் கொடுத்து அனுப்பினான் மன்னன். அதையெல்லாம் வழங்கிவிட்டு, நமஸ்கரித்தான் மணிகண்டன். ‘உங்களின் அருளாலும் முயற்சியாலும் நிறையக் கற்றுக் கொண்டேன். வேறு என்னவேண்டுமானாலும் கேளுங்கள் குருவே!’ என்றான் .
அந்த முனிவர் தயங்கினார். பிறகு இரண்டு நிமிடங்கள் மெளனமாக இருந்தார். ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, ‘மணிகண்டா... ஒன்றே ஒன்று கேட்கவேண்டும்’ என்றார். ‘கேளுங்கள் குருநாதா’ என்றான் மணிகண்டன். ‘இது மனிதர்களின் சக்திக்கு மீறிய செயல். அதையே உன்னிடம் கேட்கிறேன். இயலுமெனில் செய்’ என்றார்.
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த முனிவரின் மனைவி, தன் கணவர் என்ன கேட்கப் போகிறார் என யூகித்தாள். அவள் கண்களில் இருந்து வழிந்தது கண்ணீர்.
அவரே தொடர்ந்தார்.
‘எங்களுக்கு மகன் இருப்பது தெரியும் உனக்கு. அவன் வாய் பேச முடியாதவன் என்பதும் அறிவாய் நீ. எங்களுக்கு இருக்கிற ஒரே கவலை... அவனைப் பற்றித்தான்! அவனுடைய குறையை நீதான் போக்கவேண்டும்’ என வேண்டினார். முனிவர் சொல்லி முடிக்கும் முன்னே, அவரின் மனைவி வெடித்துக் கதறினாள். பெருங்குரலெடுத்து அழுதாள். விறுவிறுவென அந்த அன்னைக்கு அருகில் சென்றான் மணிகண்டன். அவரின் இரண்டுகைகளையும் இறுகப் பற்றிக் கொண்டான்.
‘அப்படியே ஆகட்டும் . கவலையே படாதீர்கள்’ என்றான் மணிகண்டன். குருநாதரின் மகனை அழைத்தான். தட்டில் இருந்து ஒரு பழத்தை எடுத்தான். கையில் வைத்துக் கொண்டான். குருவின் மகனிடம் கொடுத்து, சாப்பிடச் சொன்னான். அவனும் அந்தப் பழத்தை அங்கேயே சாப்பிட்டான். அவன் சாப்பிட்டு முடித்ததும், ‘இங்கே பார். என்னையே பார். நம்பிக்கையுடன் இரு. இப்போது நான் சொல்வதை நம்பிக்கையுடன் சொல்’ என்று சொல்லி, அவனை அருகில் அழைத்துக் கொண்டவன், பஞ்சாட்சர மந்திரம் மற்றும் அஷ்டாக்ஷர மந்திரம் ஆகியவற்றைச் சொன்னான். அவனை சொல்லச் சொன்னான்.
ஓம் நமசிவாய எனும் பஞ்சாட்சரம். ஓம் நமோ நாராயணாய எனும் அஷ்டாக்ஷரம். இரண்டையும் சொன்னான். ‘ம்... சொல்லு’ என்றான். அவன் தொண்டைப் பகுதியில் கைவைத்தான். ‘சொல்லு...’ என்றான்.
அங்கே நிகழ்ந்தது அற்புதம். மணிகண்டன் அந்த மந்திரத்தை நிறுத்தி நிறுத்திச் சொல்ல, அவனும் அதை அப்படியேச் சொன்னான். அதாவது பேசினான். அதாவது அந்தப் பையனுக்குப் பேச்சு வந்தது. எல்லோரும் அதிசயித்தார்கள். அந்தப் பையனின் அம்மா ஓடிவந்து, மகனைக் கட்டிக் கொண்டாள். திரும்பி, மணிகண்டனைப் பார்த்தாள். கையெடுத்துக் கும்பிட்டாள். கும்பிட்டபடியே அவனை நெஞ்சாரத் தழுவிக் கொண்டாள்.
இன்றைக்கு, குருவுக்கெல்லாம் குருவாகத் திகழ்ந்து சபரிபீடத்தில் அருளாட்சி செய்து கொண்டிருக்கிறார் ஐயப்பன். அன்றைக்கு, பந்தள தேசத்தில் ராஜகுமாரனாக வளரும் போதே குருவுக்கே குருவாக இருந்து, அவரின் மகனுக்கு அருள்பாலித்தார். சொல்லப்போனால், ஐயப்ப சுவாமியின் அருளாடல் என்பது, சாஸ்தாவின் பேரருள் என்பது அப்போதே அந்த்ச் சிறுவனுக்கு நிகழ்ந்துவிட்டது. சிறுவன் மூலமாக தான் யார் என்பதை, கற்றுக் கொடுத்த குருவுக்கான தட்சணையாகச் செய்தான் மணிகண்டன்.
அந்த முனிவர், மணிகண்டனின் குருநாதர், அவனிடம் ‘நீ யாரப்பா.. சாமான்யன் இல்லை என்பது மட்டும் தெரிகிறது. யாரென்று தெரியவில்லை. கண்ணா... நீ யாரப்பா...’ என்று கேட்டார்.
குருவிடம் உண்மையை மறைப்பது மகாபாபம். மணிகண்டன் எனும் சிறூவன், இறைவனே! ஆனாலும் மானிடனாய் இருந்து, பந்தள தேசத்தின் இளவரசனாக வளர்ந்து வருபவன். இப்போது சொல்லிக் கொடுத்தவரே குரு. உண்மை மறைத்தல் குருவுக்குச் செய்யும் அவமரியாதை என நினைத்தவன், யாருக்கும் சொல்லவேண்டாம்; யாரிடமும் சொல்லவேண்டும் என்று சொல்லி, சகலத்தையும் சொன்னான் .
‘என் அவதாரத்தின் நோக்கம் முடியும் தருணம் வந்துவிட்டது. அது முடிந்தது, மகர சங்கராந்திப் பெருநாளில், காட்சி தருவேன். வருடந்தோறும் காட்சி தருவேன். ஜோதி ஸ்வரூபனாகக் காட்சி தந்தருள்வேன்’ என்றான். மீண்டும் வணங்கிவிட்டு, அங்கிருந்து கிளம்பினான்.
ஒரு ஜோதியானது, சுடரானது நடந்து செல்வது போல் உணர்ந்து சிலிர்த்தார் முனிவர்.
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!
-ஐயன் வருவான்
தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT