Last Updated : 29 Jan, 2018 09:22 AM

 

Published : 29 Jan 2018 09:22 AM
Last Updated : 29 Jan 2018 09:22 AM

108 வருடத்துக்குப் பிறகு ‘பிரதோஷம்’! 108 பிரதோஷ தரிசனப் பலன் நிச்சயம்!

108 வருடத்துக்கு பிறகு வரும் மகிமை மிக்க பிரதோஷ நன்னாள் இன்று. சிவனாருக்கு உரிய சோம வாரம் எனப்படும் திங்கட்கிழமையில், சிவபெருமானுக்கு உகந்த திருவாதிரை நட்சத்திர நாளில், சிவபெருமானுக்கு உரிய பிரதோஷம் சேர்ந்து வருகிறது என்று சொல்லிச் சிலாகிக்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தை மாதம் உத்தராயன புண்ய காலம் தொடக்க மாதம் என்று போற்றுகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். இந்த தை மாதமே பிரதோஷ நாளில் தொடங்கியது அல்லது தை மாதப் பிறப்பில் பிரதோஷமும் சேர்ந்து வந்தது என்று பெருமையுடன் விவரிக்கிறார் பாலாஜி வாத்தியார்.

அதேபோல், சுமார் 108 வருடங்கள் கழித்து வருகிறது பிரதோஷம் இன்றைய தினம். அதாவது 29.1.18 ம் தேதியான இன்றைய தினம் ரொம்பவே உன்னதமான, மகோன்னதமான பிரதோஷம் என்று சிவ ரகஸ்யம் எனும் நுல் விவரிக்கிறது.

இதற்கொரு கதை சொல்லப்படுகிறது.

அதாவது, ஸ்ரீசைலம் திருத்தலத்தில் வாழ்ந்து வந்த அந்தணன் ஒருவன், ஏழ்மை நிலையில் இருந்தான். மேலும் இதனால் கொடும் பாவங்களைச் செய்து வந்தான். இந்த நிலையில், வழிபாடு இல்லாத ஆலயம் ஒன்றில், தன்னையும் அறியாமல் செய்த அவனுடைய செயலானது, ஈசனால், பூஜையாக ஏற்கப்பட்டது. வழிபாடாகவே ஏற்றுக் கொண்டான். அவனுக்கு வரங்களைத் தந்தருளினான் என்கிறது சிவ ரகஸ்யம் எனும் நூல்.

அப்படி வரம் பெற்று, பொன்னும் பொருளும் பெற்று, ஆடைகளும் ஆபரணங்களும் பெற்று, பசுக்களையும் குதிரைகளையும் , வீடுகளையும் நிலங்களையும் பெற்று இனிதே வாழ்ந்தான். அப்படி அவன் வரம் பெற்றது... திருவாதிரை நட்சத்திரமும் திரயோதசி திதியும் கூடிய திங்கட்கிழமை நன்னாளில் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில், சிவபெருமானுக்கு உகந்த இந்த மூன்று விஷயங்களும் ஒருசேர வருவது வெகு அபூர்வம். அது 29.1.18ம் தேதியான இன்று வந்திருக்கிறது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

சுமார் 108 வருடங்களுக்குப் பிறகு வருகிற இந்தப் பிரதோஷ நாளில், மறக்காமல் அருகில் உள்ள சிவாலயத்திற்கு மாலையில் செல்லுங்கள். நந்திதேவருக்கும் சிவபெருமானுக்கும் நடைபெறும் பிரதோஷ பூஜையில் கலந்து கொள்ளுங்கள். சந்தனம், பால், தயிர், இளநீர், தேன் முதலான அபிஷேகப் பொருட்களை வழங்குங்கள். வில்வமும் செவ்வரளியும் ஏனைய மலர்களும் வழங்கி வழிபடுங்கள். நந்திதேவருக்கு அருகம்புல் மாலையும் சார்த்துங்கள். முடிந்தால் தயிர்சாதம் அல்லது சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்யுங்கள்.

இன்னும் சொல்லப் போனால், சிவனாருக்கும் நந்திதேவருக்கும் வஸ்திரம் வழங்கி ஆராதனை செய்யுங்கள். நாம் தெரிந்தும் தெரியாமலும் செய்த சகல பாவங்களும் விலகிவிடும் என்பது உறுதி. ஜாதகத்தில் உள்ள சந்திர தோஷம், ராகு கேது முதலான சர்ப்ப தோஷங்கள், களத்திர ஸ்தானத்தில் உள்ள தோஷங்கள், நவக்கிரக தோஷங்கள் முதலானவை நிவர்த்தியாகும் என்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள்.

இன்றைய பிரதோஷ நன்னாளில் வழிபட்டால், தொழில் மேன்மையடையும். வியாபாரம் விருத்தியாகும். லாபம் கொழிக்கும். கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம். கடன்களையெல்லாம் அடைப்பதற்கான வழி பிறக்கும். வாழ்க்கை சிறக்கும். திருமணத் தடை அகலும். தேர்வு எழுதும் மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண் எடுத்து வெற்றி பெறுவார்கள் என்பது உறுதி என்கிறார் பாலாஜி வாத்தியார்.

திங்கள், திரயோதசி, திருவாதிரை... மூன்றும் இணைந்த அரிதான பிரதோஷ நாளில், நமசிவாய நாயகனை, தென்னாடுடைய சிவனை வணங்குங்கள். எல்லா நலமும் வளமும் பெறுவீர்கள்! நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x