Published : 08 Jan 2018 04:21 PM
Last Updated : 08 Jan 2018 04:21 PM
ஐயப்ப பக்தர்களே... உங்களுக்காக...!
சபரிமலையும் அதற்குத் தொடர்பு உள்ள இடங்களும் சாதாரண இடங்கள் அல்ல. தெய்வாம்சம் நிறைந்த புண்ணிய மண் அவை. புண்ணிய பூமி அவை! ஏனெனில், மணிகண்டன் எனும் மனித அவதாரத்தின் போது, ஐயன் ஐயப்ப சுவாமி நடமாடிய இடங்கள். சொல்லப் போனால், ஐயப்பனின் கால் படாத இடங்களே அங்கு இல்லை என்பதே சத்தியம்!
எருமேலி எனப்படும் எரிமேலியில் இருந்து சபரிமலைக்குச் செல்லும் வழியில் உள்ள இடங்கள் அனைத்துமே முக்கியமானவை. அதில் முக்கியமான, முதன்மையானதொரு இடம்... பெரியானை வட்டம். எல்லா இடங்களும் மணிகண்டன் நடமாடிய இடமெனில், இந்தப் பெரியானை வட்டம் என்கிற இடம் மட்டும் என்ன ஸ்பெஷல்... ஏன் சிறப்பு? கேள்வி எழலாம்.
தேவலோகத்தில் இருந்து பூலோகத்துக்கு முதன்முதலாக, குழந்தையாக வந்தார் அல்லவா மணிகண்டன். அப்படி அவர் தவழ்ந்த இடம் இதுதான். குழந்தையின் அழுகுரல், மணிகண்டன் எனும் குழந்தையின் அழுகுரல் பட்டு எதிரொலித்த இடம், முதன்முதலான இடம் இங்கேதான்!
ஆமாம்... இந்த இடத்தில்தான் பந்தள ராஜாவான ராஜசேகர பாண்டிய மன்னன் மணிகண்ட சுவாமியை முதன்முதலாக இங்கே பார்த்தான். அதனால்தான் இங்கே அந்தக் காலத்தில் ரிஷிகள் பலரும் பர்ணசாலை அமைத்து கடும் தவம் மேற்கொண்டார்கள். அந்தத் தவத்தின் பலனாகத்தான், மணிகண்ட சுவாமி, புலிப்பால் கொண்டு வருவதற்காக, வேட்டைக்கு வந்தபோது, இங்கு வந்து, ரிஷிகள் அனைவருக்கும் திருக்காட்சி தந்தருளினார். அப்படி ரிஷிகளும் ஞானிகளும், யோகிகளும் முனிவர்களும் நெடுங்காலம் தபஸ் செய்த இடம் என்பதால்தான், ஐயன் ஐயப்ப சுவாமி அருட்காட்சி கொடுத்த இடம் என்பதால்தான்... பெரியானை வட்டத்தில் ஒரு தனித்த அதிர்வலைகளை உணரமுடியும்!
ஆமாம்... இப்போதும் உணரமுடியும். பெரியானைவட்டம் போயிருக்கிறீர்களா பக்தர்களே! அதுவரை சத்தம், பேச்சுச் சத்தம், சிரிப்புச் சத்தம் என்றெல்லாம் இருக்கும். ஆனால் பெரியானைவட்டம் வந்ததும், அந்தப் பேச்சு மந்திரமாக ஒலிக்கத் தொடங்கும். பாடல்களாக இசைக்கத் தொடங்கும். சரண கோஷங்களாக வான் முட்டி எதிரொலிக்கும்.
பெரியானைவட்டத்தில்... எங்கு பார்த்தாலும் பக்தர்களாகவே இருப்பார்கள். ஒருபக்கம் ஹோமம் நடந்துகொண்டிருக்கும். இன்னொரு பக்கம் பஜனை நடந்து கொண்டிருக்கும். அங்கே பார்த்தால், பூஜைகள் அமர்க்களப்படும். இங்கே இன்னொரு பக்கத்தில், ஐயப்பனுக்கு லட்சார்ச்சனை அமோகமாக நடந்துகொண்டிருக்கும்.
அந்த பெரியானைவட்டம் எனும் இடம்... நம் குருசாமிகளை வணங்குவதற்கான அற்புதமான இடம். குருசாமிகள் ரூபத்தில் உள்ள ரிஷிகள் பெருமக்களை வணங்குவதற்கான இடம். குருவுக்கெல்லாம் குருவாகத் திகழும் தர்மசாஸ்தாவை மனமுருகப் பிரார்த்தனை செய்து கொள்ளும் ஸ்தலம்.
இன்னொரு விஷயம்... பெரியானைவட்டத்தில், ஒரேயொரு நாள் இரவு தங்கிப் பாருங்கள். அங்கே தங்கியிருந்து, ஐயன் ஐயப்பனுக்கு நடைபெறும் லட்சார்ச்சனையிலும் ஹோமத்திலும் பூஜையிலும் பஜனையிலும் கலந்துகொள்ளுங்கள். அங்கே தர்மசாஸ்தாவின் சூட்சும சக்தி இன்றைக்கும் வியாபித்திருப்பதாக ஐதீகம்! அன்றைக்கு ரிஷிகள் தவம் இருந்தது போல், இன்றைக்கும் பூஜைகளும் சடங்குகளும் ஹோமங்களும் யாகங்களும் பஜனைப் பாடல்களுமாக வழிபடும் அன்பர்களுக்கெல்லாம் அவர் வந்து அருள் வழங்கிக் கொண்டிருப்பதாக ஐதீகம்!
மணிகண்ட சுவாமி, குழந்தையாக தவழ்ந்த இடம் பெரியானைவட்டம். சொல்லப்போனால், இங்கேதான், மணிகண்டன் தவழ்ந்த பம்பா நதி ஓடுகிறது. அப்படியெனில் இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் பம்பா நதி... அது 1960களில் பக்தர்களுக்காக, பக்தர்களின் வசதிக்காக விரிவு செய்யப்பட்டது என்கிறார்கள்.
ஆக, பெரியானை வட்ட அனுபவத்தை தவறவிட்டுவிடாதீர்கள் ஐயப்ப பக்தர்களே! அங்கே... உங்களுக்கு அருள் வழங்கக் காத்திருக்கிறார் ஐயப்ப சுவாமி.
எரிமேலியில் பேட்டைத்துள்ளல் எனும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சியை நடத்துபவர்கள் வேறு யாருமல்ல. பக்தர்களாகிய நாம்தான் ஆட்டக்காரர்கள். முகத்தில் வேஷம் தரித்துக் கொண்டு, பலூன்களை தலையில் செருகிக் கொண்டு, ஆடுவதும் பாடுவதுமாக, சரண கோஷங்கள் முழங்க... பேட்டைதுள்ளலைப் பார்ப்பவர்கள் கூட, அவர்களின் கால்கள் கூட ஆடத் தொடங்கிவிடும். பக்தியின் இன்னொரு வடிவம் அது! ஐயப்ப பகவானை வணங்குவதற்கான இன்னொரு வழி இது!
எருமேலியில் பேட்டைத் துள்ளுவதும், மனதை குதூகலப்படுத்தும். பெரியானைவட்டத்தின் பூஜைகளில் பங்கேற்பது... மனதை அமைதிப்படுத்தும். சபரிமலையில் அந்த பீடத்தில்... ஐயன் ஐயப்ப சுவாமியைத் தரிசிப்பது... ஆனந்தப்படுத்தும்!
குதூகலம், அமைதி, ஆனந்தம்... இவைதானே இந்த வாழ்க்கையில் நம் ஒவ்வொருவரின் தேவையும்!
அதை வழங்கத்தான் கலியுகத் தெய்வமான ஐயப்ப சுவாமி அங்கே... சபரி பீடத்தில் தயாராக இருக்கிறார்.
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT