Published : 19 Jan 2018 12:18 PM
Last Updated : 19 Jan 2018 12:18 PM
சுக்ல பட்ச சதுர்த்தியில் விநாயகரை வழிபட்டால், வாழ்வில் கவலைகளைப் போக்கி, சுபிட்சங்களை வாரி வழங்குவார் கணபதிபெருமான் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார், சுக்ல பட்ச சதுர்த்தி குறித்து விவரித்தார்.
சுக்ல பட்ச சதுர்த்தியானது ஞாயிற்றுகிழமையான 21.1.18 அன்று வருகிறது. அற்புதமான நாள். சாந்நித்தியம் நிறைந்த விரதம். ஆனால் முதல்நாளான சனிக்கிழமையன்ற தொடங்கிவிடுவதாலும் சனிக்கிழமை இரவுப் பொழுதானது சதுர்த்தியாக இருப்பதாலும் விரதம் மேற்கொள்பவர்கள், நாளைய தினமான 20.1.18 சனிக்கிழமை அன்று விரதம் இருந்து, விநாயகரை வணங்க வேண்டும். என்று தெரிவித்தார்.
‘ராக்கொண்டு’ வருதல் என்று இதனைச் சொல்லுவார்கள். எனவே சுக்ல பட்ச சதுர்த்தி, ஞாயிறன்று வந்தாலும் சதுர்த்தி விரதம் மேற்கொள்பவர்கள் நாளைய தினம் விரதமிருந்து, விநாயகரை வழிபடுங்கள்.
முடிந்தால், விநாயகப் பெருமானுக்கு புதிய வஸ்திரம் சார்த்துங்கள். அருகம்புல் மாலை அணிவித்து வேண்டிக் கொள்ளுங்கள். வெள்ளெருக்கம் பூமாலை சார்த்தி வழிபடுவது, தீய சக்திகளை இல்லத்தில் அண்டாமல் பார்த்துக் கொள்ளும்.
இன்னும் முடியுமெனில், விநாயகருக்கு கொழுக்கட்டையோ சுண்டலோ, எலுமிச்சை சாதமோ தயிர்சாதமோ நைவேத்தியம் செய்து, வேண்டிக் கொள்ளுங்கள். நைவேத்தியப் பிரசாதத்தை, அக்கம்பக்கத்தாருக்கு வழங்குங்கள். கவலைகளையெல்லாம் போக்கிவிடுவார் கணபதிபெருமான். சுபிட்சத்தைத் தந்து, இல்லத்திலும் உள்ளத்திலும் ஒளியேற்றுவார் பிள்ளையாரப்பன்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT