Last Updated : 26 Feb, 2018 12:15 PM

 

Published : 26 Feb 2018 12:15 PM
Last Updated : 26 Feb 2018 12:15 PM

வீட்டில் ஐஸ்வரியம், சுபிட்சம் நிச்சயம்... மாசி மகத்தில் தானம் செய்யுங்கள்!

மாசி மக நன்னாளில், 1.3.18 வியாழக்கிழமையில், புனித நீராடுவதற்கு முன்னதாக முறைப்படி சங்கல்பம் செய்துகொண்டு நீராடுங்கள். அப்படியே அந்த நல்லநாளில், இயன்ற அளவுக்கு தானம் செய்யுங்கள். உங்களின் தரித்திர நிலையெல்லாம் விலகிவிடும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்!

கும்பகோணம் மகாமகக் குளத்தில் புனித நீராடுவதற்கு முன்னதாக சங்கல்பம் செய்துகொள்ளுங்கள். எந்தவொரு காரியத்தை தொடங்குவதற்கு முன்பும், அன்றைய திதி, வார, நக்ஷத்திர, யோக, கரணம் ஆகியவற்றைக் கொண்டு, அதற்கு உரிய மந்திரங்களை உச்சரித்து எந்த நோக்கத்துக்காக அல்லது பலனுக்காக அந்த பூஜையைச் செய்கிறோமோ அதற்கு உரிய வேண்டுகோளை அந்தந்த கடவுளுக்கு முன் சமர்ப்பணம் செய்து துவங்குவதே சங்கல்பம் எனப்படுகிறது. பூஜைகள், புண்ணிய நதி அல்லது தீர்த்தங்களில் நீராடல், முன்னோர்களுக்கான திதி, தானம் கொடுத்தல் ஆகிய அனைத்துக்குமே தனித்தனி சங்கல்பங்கள் உள்ளன.

மகாமகக் குளத்தில் நீராடலுக்கு முன்பு காவிரியில் சங்கல்பம் செய்து கொண்டு நீராட வேண்டும். பின்னர் பஞ்ச கவ்யம் உட்கொள்ள வேண்டும். மகாமகக் குளத்தில் உள்ள ஒவ்வொரு தீர்த்தத்திலும் சங்கல்பம் செய்து நீராடுவது சிறப்பு என்கிறார்கள் ஆச்சார்யர்கள். .மகாமகக் குளம் என்றில்லை... இந்த நாளில் எந்தப் புனித தீர்த்தத்தில் நீராடினாலும் புண்ணியம்.

ஒரே சங்கல்பமாக, அனைத்து தீர்த்தங்கள், ஜீவநதிகள், தேவர்கள், சக்திகள் போன்றவர்களை நாம் செய்யும் சங்கல்பத்தில் அழைத்து, நமது வேண்டுதலுக்கு உரிய பலனைக் கொடுக்குமாறு பிரார்த்தித்துக் கொண்டு புனித நீராடவேண்டும். நீராடலுக்குப் பின்னர் நம்மால் இயன்ற தானங்களைச் செய்ய வேண்டும்.

புண்ணிய காலங்களில் தானம் செய்வது மிக மிக அவசியம். எல்லா தருணங்களிலும் தானம் செய்யச் சொல்லி வலியுறுத்துகின்றன சாஸ்திரங்கள். முற்காலத்தில் அரசர்கள் முதல் எல்லோருமே சமுதாயத்தில் உள்ள எளியவருக்கும், கல்விமான்களுக்கும், வேதம் படித்தவர்களுக்கும் தானங்கள் அளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அதேபோன்று புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்லும்போதும், புனித நதிகளில் நீராடும்போதும் மற்றும் முன்னோர்களை நினைவு கூரும்போதும் தானங்கள் செய்ய வேண்டும் என்பது நமக்கும் நம் குடும்பத்தாருக்கும் நாளைய நம் சந்ததியினருக்கும் பலன்களைத் தரக்கூடியது என்பது ஐதீகம்!

‘‘பசு, பூமி, தானியங்கள், ஆபரணங்கள், உணவு போன்றவற்றை தானமாகக் கொடுத்தனர். இளநீர் ஓட்டிலோ அல்லது பூசணிக்காயிலோ ஒரு துளையிட்டு அதில் முழுவதும் நவரத்தினங்களை நிறைத்து வைத்தும் தானம் செய்துள்ளதாகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இன்றைக்கு, நம் தகுதிக்கேற்ப, பயனுள்ள பொருட்களை தானமாக கொடுக்கலாம்!

வரும் 1ம் தேதி வியாழக்கிழமை மாசி மக நன்னாள். உணவு தானம் செய்யுங்கள். ஆடை தானம் வழங்குங்கள். வயதானவர்களுக்கு போர்வை முதலானவற்றை தானமாக வழங்குங்கள். புண்ணியங்கள் பெருகும். எதிர்ப்புகள் யாவும் விலகும். வீட்டில் ஐஸ்வரியமும் நிம்மதியும் குடிகொள்ளும். பித்ருக்களும் தெய்வசக்தியும் நமக்கு எப்போதும் துணை நிற்கும். துணையாக இருந்து காத்தருளும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x