Published : 27 Feb 2018 02:57 PM
Last Updated : 27 Feb 2018 02:57 PM
தில்லையம்பல நடராஜ பெருமானுக்கு இந்தத் தமிழ் வருடத்தின் நிறைவு அபிஷேகம் நாளை 28.2.18 புதன்கிழமை நடைபெறுகிறது.
நடராஜர் என்றாலே நினைவுக்கு வரும் திருத்தலம் சிதம்பரம். தில்லையம்பதி என்று போற்றப்படும் சிதம்பரம் திருத்தலத்தில், மிகப் பிரமாண்டமான கோயிலில் குடிகொண்டிருக்கிறார் நடராஜ பெருமான்.
தில்லையம்பலத்தான், ஆடல்வல்லான், நடன நாயகன் என்றெல்லாம் கொண்டாடப்படுகிற நடராஜரின் பஞ்ச சபைகளில், சிதம்பரம் க்ஷேத்திரம் கனகசபை என்று போற்றப்படுகிறது. இத்தனை பெருமைமிகு சிதம்பரத்தில், தில்லை மூவாயிரம் பேர் என்று சொல்லப்படுகிற தீட்சிதர்களைக் கொண்டு பூஜைகள் நடைபெறுவது இன்னொரு சிறப்பு.
அதேபோல், சிதம்பரம் திருத்தலத்தில் நடராஜருக்கு வருடத்துக்கு ஆறு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. சித்திரை மாதத்தில் திருவோண நட்சத்திரத்தில் அபிஷேகம் நடைபெறும். அடுத்து ஆனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தின் போது அபிஷேகம் நடைபெறும்.
அதன் பிறகு ஆவணி மாதத்தில் வளர்பிறை சதுர்த்தசியில் நடராஜருக்கு அபிஷேகம் நடைபெறும். புரட்டாசியிலும் வளர்பிற சதுர்த்தசி வேளையில் அபிஷேகமும் மார்கழியில் திருவாதிரையிலும் அபிஷேகம் நடைபெறும். ஆறாவதாக, மாசி வளர்பிறை சதுர்த்தசியில் அபிஷேகம் நடைபெறும். அதாவது மாசியில் நடைபெறும் அபிஷேகம்... அந்த வருடத்தின் நிறைவு அபிஷேகம்!
அந்த வகையில், நாளை 28.2.18 புதன்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி நாளில், தில்லையம்பலத்தானுக்கு, திருச்சிற்றம்பல நாயகனுக்கு நடராஜபெருமானுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.
நாளைய தினம் காலை 8 மணிக்கு நடராஜ பெருமான், கனகசபைக்கு வந்து எழுந்தருள்வார். இதையொட்டி யாகசாலை பூஜைகள் நடக்கின்றன. மகாருத்ர யாகம் நடைபெறுகிறது. மகா ருத்ர ஜப பாராயண நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.
நாளை இரவு 7 மணிக்கு மேல், நடராஜருக்கு மகா ருத்ர மகா அபிஷேகம் விமரிசையாக நடைபெறும். இந்த அபிஷேக தரிசனத்தையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தெல்லாம் கூட சிதம்பரத்துக்கு வருவார்கள்.
பால், தயிர், தேன், பழங்கள், இளநீர், எலுமிச்சை, பன்னீர், சந்தனம் முதலான 16 வகையான பொருட்களால் பிரமாண்டமாக அபிஷேகம் நடைபெறும்.
கிட்டத்தட்ட இரவு 7 மணிக்குத் தொடங்கும் அபிஷேகங்களும் பூஜைகளும் முடிந்து, அதையடுத்து மூன்று கால பூஜைகளும் நடந்து நடை சார்த்துவதற்கே இரவு 11 மணியாகிவிடும் என்கிறார் வெங்கடேச தீட்சிதர்.
நடராஜர் அபிஷேகத்தைக் காணுங்கள். இந்த தமிழ் வருடத்தின் நிறைவு அபிஷேகம் இது. கண்ணாரத் தரிசியுங்கள். கலையிலும் ஞானத்திலும் சிறந்துவிளங்குவீர்கள். ஞானத்தையும் யோகத்தையும் தந்தருள்வார் ஆடல்வல்லான்.
ஆடல்வல்லானே போற்றி... திருச்சிற்றம்பலம்... திருச்சிற்றம்பலம்... திருச்சிற்றம்பலம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT