Published : 29 Dec 2017 03:44 PM
Last Updated : 29 Dec 2017 03:44 PM
ஐயப்ப பக்தர்களே... உங்களுக்காக!
புலியின் மீது அமர்ந்து, சிங்கம் போல் கம்பீரமாய் வந்த மணிகண்டனைப் பார்த்து, அனைவரும் வியந்தார்கள். அரண்மனை பணியாட்கள் எல்லோரும் ஓடிவந்துவிட்டார்கள். வந்து பார்த்து வாயடைத்து நின்றார்கள். மகாராணிதான் பாவம்... என்ன செய்வதென்று தெரியாமல், மலங்க மலங்க முழித்தார். கைபிசைந்து தவித்தார்.
அரண்மனையின் நடுப்பகுதி முழுக்க புலிகளே வியாபித்திருந்தது. நடுவே நின்ற புலியின் மீது மகன் உட்கார்ந்திருப்பதைக் கண்டு பெருமைப்படச் சிரித்தான் மன்னன். விறுவிறுவென ஓடிவந்தான்.
‘அய்யய்யோ... புலிகள் இவ்ளோ இருக்கு. அதுங்க பக்கத்துல ஓடுறாரே... என்று ஊழியர்களும் மகாராணியும் புலம்பிப் பதறினார்கள். ‘மன்னா... மன்னா...’ என்று அலறினார்கள். ஆனால் பூனைக்குட்டியை விட சாதுவாக நின்றுகொண்டிருந்தன புலிகள். மன்னனும் புலிகள் குறித்த பயமே இல்லாமல் மணிகண்டனுக்கு அருகே சென்றான். மகனை ஆரத்தழுவிக் கொண்டான்.
‘புலிப்பால்தான் கேட்டார் மருத்துவர். ஆனால் புலிகளின் கூடாரத்தையே கொண்டு வந்து இங்கே நிறுத்திவிட்டாயே...’ என்று மன்னர் வியந்து போற்றினார். ‘உன் வீரத்தை நானே கொஞ்சம் குறைத்துதான் மதிப்பிட்டேன். என்னை மன்னித்துக்கொள் மணிகண்டா’ என்று சொல்லிவிட்டு, இன்னொரு முறை மணிகண்டனைத் தழுவிக் கொண்டான்.
பிறகு... மணிகண்டனிடம்... ‘ஆனாலும் எனக்கொரு சந்தேகம். எனக்கு மட்டும் அல்ல... இந்த உன் செயலால், பந்தள தேசத்துக்கே அந்த சந்தேகம் ஏற்பட்டிருக்கும். இப்படியான செயல், சாதாரண மானிடன் செய்யும் செயலே அல்ல. எந்த மனிதராலும் செய்யவே முடியாது. தவிர, நீ காட்டுக்குப் போன கையுடன், உன் அம்மாவுக்கு தலைவலி சரியாகிவிட்டது. இதன் பின்னே என்னவெல்லாம் இருக்கின்றன என்பதை யூகித்துக் கொண்டேன். ஆனால் ஒன்று மட்டும் தெரியவில்லை. நீ யார்? யார் நீ?’ என்று மகனின் கைகளைப் பிடித்துக் கொண்டு கேட்டான் மன்னன்.
அங்கே சிறிதுநேரம் அமைதி. அந்த அமைதியை உடைக்கும் விதமாக, பெருங்குரலெடுத்து அழுதபடி ஓடிவந்த மகாராணி, மணிகண்டனின் காலடியில் வந்து விழுந்தாள். மயங்கினாள். அவளை ஆசுவாசப்படுத்தி, தெளிய வைத்து எழச் செய்ததும் நிதானத்துக்கு வந்தாள். ஆனாலும் அவள் கண்களில் இருந்து கண்ணீர் வந்துகொண்டே இருந்தது. வழிந்து கொண்டே இருந்தது.
’மன்னித்து விடு மணிகண்டா. அம்மா என்று அழைக்க, எனக்கு எந்தத் தகுதியுமில்லை. அந்தத் தகுதியை நான் இழந்துவிட்டேன். காட்டுக்கு அனுப்பினால், விலங்குகளுக்கு இரையாகிவிடுவாய் என்று தப்புக்கணக்கு போட்டேன். மாபாதகம் செய்யத் துணிந்தேன். ஆனால் எல்லா சதிகளையும் முறியடித்து வென்று வந்திருக்கிறாய். என் வயிற்றில் பிறந்தவன், பந்தளத்தை ஆள வேண்டும் என்று ஆசைப்பட்டேன். நீதான் இந்தத் தேசத்தை ஆட்சி செய்யவேண்டும். என்னை மன்னித்து விடு மணிகண்டா’ என்று அவனைக் கட்டிக் கொண்டு அழுதாள். மன்னிப்புக் கேட்டாள்.
இதைக் கேட்டு ஆத்திரமானான் அரசன். ‘எனக்குத் தெரியும். இப்படி ஏதோவொரு சூழ்ச்சி நடக்கிறதென்று. உங்களை என்ன செய்கிறேன் பார்’ என்று உடைவாளை எடுத்தான். அவனை தடுத்து நிறுத்தினான் மணிகண்டன்.
இதையடுத்து அந்த முதலமைச்சரும் வைத்தியரும் ஓடி வந்து மன்னன் காலில் விழுந்தார்கள். மணிகண்டனை நமஸ்கரித்தார்கள். மன்னித்துவிடுங்கள் என்று கதறினார்கள். எல்லோரையும் அமைதிப்படுத்தி ஆசுவாசப்படுத்தினான் மணிகண்டன்.
‘அமைதியா இருங்கள் தந்தையே. விதிப்படி என்ன நடக்கவேண்டுமோ அவை நடந்திருக்கின்றன. நான் இந்த பூமிக்கு வந்த அவதார நோக்கமானது நிறைவேற, ஒருவகையில் இவர்கள் அனைவரும் உதவி செய்திருக்கிறார்கள். எல்லோரையும் மன்னித்துவிடுங்கள்’ என்றான்.
அப்படியே புலிகள் பக்கம் திரும்பினான். ‘இந்திரனே... இந்திராதி தேவர்களே. எல்லோரும் வாருங்கள். தேவலோகம் போகலாம்’ என்று மணிகண்டன் சொல்ல, அங்கிருந்த புலிகள் உருவம் மாறின. தேவர்கள் தங்களின் உருவத்தில் காட்சி தந்தார்கள். இதையெல்லாம் பார்த்த மன்னன், கதிகலங்கிப் போனான்.
‘மணிகண்டா... என்னப்பா இதெல்லாம். தேவர்களா. இவர் தேவர்களின் தலைவன் இந்திரனா. நீ தேவலோகம் போகப்போகிறாயா. நீ சொன்னால் அத்தனைபேரும் கட்டுண்டு போகிறார்களே. அப்படியெனில் நீ யாரப்பா. யார் நீ. சொல் மணிகண்டா’ என்று மகனைப் பிடித்துக் கொண்டு கேட்டார். தோள் பிடித்துக் கேட்டார்.
அப்போது எல்லோரும் தேவர்பெருமக்களைப் பார்த்தனர். மணிகண்டனைப் பார்த்தனர். மன்னனைப் பார்த்தனர். மகாராணி ஓடி வந்து தழுவிக் கொண்டாள்.
‘மணிகண்டன் சரிதத்தை, மணிகண்டன் யாரென்பதை நான் சொல்கிறேன்’ என்று ஓர் சத்தம் வாசலில் கேட்டது.
எல்லோரும் திரும்பி வாசல் பக்கம் பார்த்தார்கள். ‘முனிவரே வருக வருக...’ என்று மன்னனும் மகாராணியும் வரவேற்றார்கள்.
அந்த முனிவர் உள்ளே வந்தார். எல்லோரும் வரவேற்று, நமஸ்கரித்தார்கள். விறுவிறுவென வந்தவர், மணிகண்டனின் காலில் விழுந்து நமஸ்கரித்தார்.
எல்லோரும் திடுக்கிட்டுப் போனார்கள்.
அந்த முனிவர்... அகத்திய மாமுனிவர்!
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!
- ஐயன் வருவான்
தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT