Last Updated : 31 Jan, 2018 11:22 AM

 

Published : 31 Jan 2018 11:22 AM
Last Updated : 31 Jan 2018 11:22 AM

தைப்பூசத் திருநாளிலே..!

முருகன் கோயில்களில் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள், காவடி எடுத்தும், பால் குடம் ஏந்தியும் முருகப்பெருமானை கண்ணார வழிபட்டனர்.

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழநியில், தைப்பூசத் திருவிழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள், தமிழகத்தின் பல ஊர்களில் இருந்தும் பாதயாத்திரையாக விரதமிருந்து வந்து தரிசிப்பது வழக்கம்.

பழநி, திருப்பரங்குன்றம், சுவாமிமலை, திருச்செந்தூர், திருத்தணி, திருச்சி வயலூர், சென்னை வடபழநி முதலான பல முருகன் கோயில்களிலும் தைப்பூச விழா, கொடியேற்றத்துடன் துவங்கியது வைபவம். பத்துநாட்கள் விழாவாக நடைபெறும் தைப்பூச விழாவில், தினமும் சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் திருவீதி உலாவும் விமரிசையாக நடைபெற்றன.

தைப்பூச நாளான, பழநி தண்டாயுதபாணி கோயிலில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடிக்க, தேரோட்டம் சிறப்புற நடைபெற்றது. ஸ்ரீவள்ளி தெய்வானை சமேதராக, ஸ்ரீமுத்துக்குமார சுவாமியாக சர்வ அலங்காரத்தில் தேரில் பவனி வந்தார் கந்தக் கடவுள். தெப்போத்ஸவத்துடன் தைப்பூச விழா நிறைவு பெறுகிறது.

கடலோர செந்தூர்

அறுபடை வீடுகளில் இரண்டாம் வீடு என போற்றப்படுகிறது திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயில். தைப்பூச விழாவையொட்டி, அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது. நெல்லை, தூத்துக்குடி, கன்யாகுமரி, விருதுநகர் முதலான பல மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து, பாதயாத்திரையாக வந்து, முருகப்பெருமானை தரிசித்தார்கள்.

காலையில் கடலில் தீர்த்தவாரி நடைபெற்றது. மாலையில் திருத்தேரோட்ட வைபவம் நடைபெற்றது. வடக்கு ரத வீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் தங்கச் சப்பரத்தில் வள்ளி தெய்வானை சமேதராக எழுந்தருளி காட்சி தந்தார் முருகப்பெருமான். பிறகு தங்கமயில் வாகனத்தில் வீதியுலா வரும் வைபவமும் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தணிகை வாழ் திருத்தணி

இதேபோல், சென்னைக்கு அருகில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலிலும் தைப்பூச விழா நடந்தேறியது. காலையில் இருந்து பாலபிஷேகம், விபூதி அபிஷேகம், பன்னீர் அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம் முதலான அபிஷேகங்களும் முருகப்பெருமானுக்கு ராஜ அலங்காரமும் நடைபெற்றது.

விசேஷ பூஜைக்குப் பிறகு வள்ளி தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதியுலா வந்தார் கந்தப்பெருமான். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்கள்.

இதேபோல் திருப்பரங்குன்றம், திருச்சி வயலூர் சுப்ரமண்ய சுவாமி கோயில், சென்னிமலை, திருப்போரூர், வடபழநி முதலான பல ஆலயங்களிலும் தைப்பூச விழா விமரிசையாகவும் நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x