Last Updated : 27 Dec, 2017 02:01 PM

 

Published : 27 Dec 2017 02:01 PM
Last Updated : 27 Dec 2017 02:01 PM

குருவே... யோகி ராமா! 26: ஆட்கொண்ட அழகன்!

பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்

வாழ்க்கையின் கணக்குகளை நாம்தான் போடுகிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இது தப்புக்கணக்கு. இந்தக் கணக்குகளையும் கணக்கு வழக்குகளையும் வாழ்க்கையையும் வாழ்க்கை முறைகளையும் நம் ஒவ்வொருவருக்குமாகப் போட்டுவைத்திருக்கிறான் கடவுள். அந்தக் கணக்குகளில் இருந்து எவரும் எந்தக் காலத்திலும் தப்பவே முடியாது.

அருணகிரி எனும் இளைஞன், அந்தப் பருவத்தில் செய்யாத தவறுகளே இல்லை. அது அவனுடைய தவறா. இல்லை. அது அவன் போட்ட கணக்கா. அதுவும் இல்லை. இறைவனின் விளையாட்டு. முன்னைவினை என்பார்கள். இது முந்தையை வினையின் வினை. அந்த வினைக்கான செயல். இப்போது அதைக் கழித்துக் கொண்டிருப்பது மட்டுமே அருணகிரியின் வேலை!

பெண் சகவாசம் என்பது அருணகிரியின் வாழ்வில் நிறைந்திருந்தது. அதேசமயம், அம்மா, அக்கா, மனைவி என சுற்றியுள்ள பெண்கள், அருணகிரியை வெறுத்தார்கள். இந்த முரண்பாடான ஒற்றுமையை அறியும் நிலையில் அருணகிரி இல்லை. அல்லது அதற்கான காலம் இன்னும் கனியவில்லை.

கொஞ்சம் கொஞ்சமாக சொத்துகள் கரைந்து கொண்டே வந்தன. சுற்றி உள்ளவர்களின் பிரியங்கள் குறைந்து கொண்டே வந்தன. மரியாதையும் புகழும் கெளரவமும் மழுங்கிக் கொண்டே இருந்தன. மனநோயாலும் நோயாலும் பாதிப்புக்கு உள்ளாகித் தவித்துதான் போனார் அருணகிரி.

ஒருகட்டத்தில், குடும்பம் உதறித்தள்ளியது. காசு பணம் இல்லாததால் அந்தப் பெண்களும் ஒதுக்கிவைத்தார்கள். ஓரங்கட்டினார்கள். புறக்கணித்தார்கள். புழுவெனப் பார்த்தார்கள்.

வீடு சுகம். அது தெரியாமலேயே வாழ்க்கையைக் கடத்தினார். பெண் சிக்கல். அது தெரியாமலேயே சிக்கல்களைச் சம்பாதித்தார். தனித்துவிடப்பட்டார். தனிமையில் இருந்தார். இந்தத் தனிமைதான் அவர் வாழ்வில், இறையருள் போட்டிருந்த இன்னொரு கணக்கு! அந்தத் தனிமைதான் தன்னையே தனக்குள்ளிருந்தும் தனக்கு வெளியே இருந்துமாகப் பிரிந்து தன்னை அறிய பேருதவி செய்தது.

அந்தத் தருணத்தில், வீடின்றி, உறவுகளின்றி சுற்றித் திரிந்தவரை பெரியவர் ஒருவர் சந்தித்தார். அந்தச் சந்திப்பு சாதாரணமானதல்ல. சாதாரணமாக நிகழக்கூடியதும் அல்ல. அவர் பெரியவரா. ஆமாம். பெரியவர்தான். இறை எனும் மகாசக்திதான். அந்தப் பெரியவர் அருணாச்சலேஸ்வரர் என்றும் சொல்கிறார்கள். அப்படிப் பெரியவராக வந்தது, முருகக் கடவுள் என்றும் சொல்லிச் சிலாகிக்கிறார்கள்.

பெரியவர், குன்றுதோறாடும் குமரக்கடவுளை விவரித்தார். சரவணபவ எனும் ஆறெழுத்து மந்திரத்தை உபதேசித்தார். முருகத் தத்துவத்தை எடுத்துரைத்தார். ‘குமரனைப் பிடி. குன்று போல் உயர்வாய்’ என ஆசீர்வதித்தார். சட்டென்று மறைந்தார்.

அருணகிரிக்கு விளங்கியது போல இருந்தது. இந்தப் பெரியவர் இன்னும் குழப்பிவிட்டுச் சென்றதாகவும் புரிந்தது. ’குமரனைப் பிடி’ என்றார் பெரியவர். மனதில் கந்தவேளை நினைத்தபடி, தியானத்தில் ஆழ்ந்தார். ஆனால் பழைய குருடி கதவைத் திறடி கதையாய், பழைய நினைவுகள் அலையடித்தன. தியானம் கலைத்தன. தலை உதறி, கண்கள் மூடினார்.

அது... திருவண்ணாமலைக் கோயிலின் நுழைவாயில். ஓங்கி உயர்ந்திருக்கிற கோபுர வாசல். செய்தது தவறென்று உணர்ந்தார். ஆயுள் பரியந்த உறவுகளை அலைக்கழித்ததை நினைத்து வருந்தினார். வாழ்வதே தவறு எனப் புரிந்துகொண்டார். இன்னும் வாழவே இல்லை எனத் தெரிந்து கொண்டார். மளமளவென கோபுரத்துக்குள் ஏறினார். கோபுரத்தின் உச்சிக்குச் சென்றார்.

மலை பார்த்தார். இன்னும் நெருங்கியிருப்பதாய் உணர்ந்தார். ஊரும் தெருவும் பார்த்தார். ரொம்பவே விலகிவிட்டதாக உணர்ந்தார். மனிதர்கள் எல்லோரும் யாரோவாகத் தெரிகிறார்கள் என நினைத்தார்.

அருணகிரி நிற்பதை அருணகிரி எனும் அந்த மலையும் பார்த்துக் கொண்டே இருந்தது. அருணகிரி மலை பார்த்தார். கோயிலைப் பார்த்தார். ஊரைப் பார்த்தார். மக்களைப் பார்த்தார். தடாலென்று கோபுரத்தில் இருந்து குதித்தார். வாழ்வதை விட சாவதே மேல் என்று கோபுரத்தில் இருந்து குதித்தார்.

வாழ்க்கை குறித்து கடவுள் நமக்காகக் கணக்குப் போட்டுத்தான் நம்மை இந்த உலகுக்கு அனுப்பியிருக்கிறார். அதேபோல் மரணத்துக்கும் அவர் கணக்குப் போட்டு வைத்திருக்கிறார்.

அருணகிரி கோபுரத்தில் இருந்து குதித்தார். வாழ்வில் இருந்து... மரணம். பிறப்பில் இருந்து இறப்பு.

அப்போது, இரண்டு கைகள் நீண்டன. பூமி நோக்கி விழுந்து கொண்டிருந்த அருணகிரியை, அப்படியே தாங்கிக் கொண்டன. அந்தக் கைகள்... சேவற்கோடியோனின் கரங்கள். செந்திலாண்டவனின் கரங்கள். முருகப்பெருமானின் அபயக்கரங்கள்.

அங்கே... அருணகிரி மீண்டும் பிறந்தார். அருணகிரிநாதர் என உலகெல்லாம் புகழ் பெற்றார்.

கந்தபிரான் ஆட்கொண்டான். கந்தனுக்கு அடிமையானார் அருணகிரிநாதர்.

இது இப்படித்தான். திருவண்ணாமலை இப்படித்தான். அருணாச்சலேஸ்வரரும் மகனை விட அருட்கரம் நீட்டி அதிகமாகவே ஆட்கொள்பவர். தன் திருவிளையாடல்களை ஒவ்வொரு தருணத்திலும் நிகழ்த்திக் கொண்டே இருப்பவர்.

அதனால்தான் வடக்கே கங்கைக் கரைக்கு உள்ள குக்கிராமத்தில் பிறந்த ராம்சுரத் குன்வரை, பகவான் யோகி ராம்சுரத்குமார் எனும் ஞானக்குழந்தையாக்கி அருள்பாலித்தார்.

அதனால்தான் ‘என் தகப்பன் உங்களை ஆசீர்வதிக்கிறார்’ என்று அண்ணாமலையாரை தந்தையாகவே பாவித்தார் பகவான் யோகி ராம்சுரத்குமார்!

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

ஜெயகுரு ராயா.

- ராம்ராம் ஜெய்ராம்

தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in

முந்தைய அத்தியாயம் படிப்பதற்கு...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x