Published : 08 Feb 2018 11:51 AM
Last Updated : 08 Feb 2018 11:51 AM
திருவாலங்காட்டில் ஸ்தல விருட்சம் தீப்பிடித்து எரிந்திருக்கிறது. மதுரையில் மண்டபம் தீப்பிடித்திருக்கிறது. காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் சிலையில் தங்கத்தைக் காணோம்.
அந்தக் காலத்தில், மதுரையை எரித்தாள் கண்ணகி. திருஞானசம்பந்தர் மதுரைக்கு வந்த வேளையில், சமணம் ஓரளவு தழைத்திருந்தது. அவர்கள் ஆத்திரப்பட்டு, தீ வைத்த கதையெல்லாம் நினைவுக்கு வருகின்றன.
காஞ்சி என்றால் தொண்டை தேசம். காஞ்சியம்பதிக்குள் மாமல்லபுரமும் அடக்கம். மகாபலிபுரம் என்றால், கல்லிலும் பொன்னிலும் கலைவண்ணம் கண்ட திருத்தலம். இன்றைக்கு காஞ்சியில் உள்ள சிலையில், பொன்னைக் காணவில்லை. களவாடியது யார் என்றெல்லாம் விசாரணை நடக்கிறது.
சில மாதங்களுக்கு முன்பு, திருச்செந்தூரில் மண்டபம் இடிந்து விழுந்தது. சுனாமி வந்தபோது கூட, அசைத்துப் பார்க்கமுடியாத திருச்செந்தூரில், கடலோரத்தில் இருக்கிற கோயிலில், மழையோ காற்றோ இல்லாத போதே விழுந்தது மண்டபம். இது ஏன்? எதனால்?
ஆலங்காடு என்றால், ஆலமரங்கள் நிறைந்த காடு. காடு என்றால் ஆரண்யம். இதை வடாரண்யம் என்பார்கள். சென்னையைத் தாண்டி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது திருவாலங்காடு. மிகப் பிரமாண்டமான ஆலயத்தின் ஸ்தல விருட்சம் மிகப் பிரமாண்டமான ஆலமரம்.
இருக்கிற மரங்களிலேயே ஆலமரம் நீண்ட வயது கொண்டது என்பார்கள். அந்த மரத்தையும் அதன் விழுதுகளையும் வம்சம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு உதாரணமாகச் சொல்வார்கள். திருவாலங்காட்டில், அந்த மரம்... கோயிலின் ஸ்தல விருட்சம்... தீப்பிடித்து எரிந்திருக்கிறது.
ஆகமங்கள்... ஆலயங்கள்... வழிபாடுகள்... புண்ணியத் தலங்கள் எல்லாமே சந்தைக்கடைகள் போல், வியாபார ஷாப்பிங் மால்கள் போல் ஆகிவிட்டதன் விளைவுதான் இவை என்று வருத்தம் பொங்கச் சொல்கிறார்கள் பக்தர்கள்.
‘புதுசா கோயிலைக் கட்டாதீங்கோ. இருக்கிற கோயிலை செப்பனிட்டு, புனரமைச்சு வழிபட்டாலே போதும். இருக்கிற கோயிலை கவனிக்காம, புதுசா கோயில் கட்டி ஒரு பலனும் இல்ல; எந்தப் புண்ணியமும் கிடையாது. பழைய கோயிலை, வழிபாடு இல்லாத கோயிலை, பூஜைகளே சரிவர வசதி இல்லாத கோயில்களுக்கு கைங்கர்யம் பண்ணுங்கோ’ என காஞ்சி மகாபெரியவா அருளியுள்ளார்.
காஞ்சி ஏகாம்பரேஸ்வரர், திருச்செந்தூர் முருகன், மதுரை மீனாட்சிஅம்மன், திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் என்கிற இந்தக் கோயில்கள் எல்லாமே ஏராளமான பக்தர்கள் தினமும் வந்துசெல்லும் கோயில்கள். பிரசித்தி பெற்ற திருத்தலங்கள். சென்னைக்கு அருகில் இருப்பவருக்கு திருச்செந்தூர் தெரியும். கன்யாகுமரியையும் தாண்டி இருக்கிறவருக்கு காஞ்சிபுரமும் தெரியும். இப்படி பிரபலக் கோயில்களாகவே இருப்பதை பீதியுடன் பார்க்கிறார்கள் பக்தர்கள்.
தொன்மை வாய்ந்த ஆலயங்கள், புராணப் பெருமை கொண்ட கோயில்கள், புராதனமான திருத்தலங்கள் இப்படி தீவிபத்துக்குள்ளாவதும் இடிந்து விழுவதும் சிலைகளின் தங்கங்கள் திருடு போவதும் கோயில்களில் உள்ள சிவாச்சார்யங்களும் பட்டாச்சார்யர்களும் ஏதேனும் பரிகாரங்கள் செய்து ஆலயங்களை விபத்தில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர் பக்தர்கள்.
அதேபோல், இந்துசமய அறநிலையத்துறையும் ஆலயங்களைப் பராமரிப்பதிலும் ஆலயங்களில் உள்ள கடைகளிலும் முழுகவனம் செலுத்தவேண்டிய தருணம் இதுதான். இனி வருங்காலத்தில் எந்த அசம்பாவிதமும் நிகழாதபடி, பாதுகாக்கவேண்டிய கடமை அரசுக்கும் அறநிலையத்துறைக்கும் உள்ளது என்கிறார்கள் ஆன்மிக ஆர்வலர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT