Published : 09 Jan 2018 02:29 PM
Last Updated : 09 Jan 2018 02:29 PM
பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்!
எல்லோருக்கும் தெரிந்ததுதான் மாதா பிதா குரு தெய்வம் எனும் தத்துவம். மாதா என்கிற அம்மாவையும் பிதா எனும் தகப்பனையும் குரு எனும் ஆசானையும் வணங்கி வழிபடவேண்டும். அத்துடன் நல்ல அம்மாவையும் அப்பாவையும் அற்புதமான குருநாதரையும் தெய்வத்தையும் கொடுத்த தெய்வத்தையும் வழிபடவேண்டும்.
இதை இன்னொருவிதமாகவும் சொல்லலாம். மாதா பிதா குரு தெய்வம். அதாவது மாதாவும் தெய்வம். அதாவது அம்மாவும் தெய்வம். அப்பாவும் தெய்வம். குருநாதரும் தெய்வம். ஆகவே, இந்த இப்பிறவியில் பெற்றோரையும் சொல்லிக் கொடுத்த குருநாதரையும் போற்றவேண்டும்.
அதேபோல், இந்த உலகுக்கு வருவதற்குக் காரணமாக பெற்றோர் எப்படி இருந்தார்களோ அதேபோல், இந்த உலகில் வாழ்வதற்கும் எடுத்த பிறவியை செவ்வனே ஏற்று முடிப்பதற்கும் குருநாதர் தேவை. குரு என்பவர் மிக மிக அவசியம்!
மன விகாரங்கள் எனப்படும் இருண்ட வனத்தில் இருந்து நம்மையெல்லாம் விடுவிக்க குரு ஒருவரால் மட்டுமே முடியும் என்று உபநிஷத்துகள் விளக்கியுள்ளன. குருவின் அண்மை குறித்தும் அவசியம் குறித்தும் அவரின் ஆசீர்வாதம் குறித்தும் வழிகாட்டுதல் குறித்தும் புராணங்களும் இதிகாசங்களும் ஞானநூல்களும் நமக்கு ஏராளமாகவே வலியுறுத்தியிருக்கின்றன.
பகவான் ரமண மகரிஷியும் அப்படித்தான். நமக்கெல்லாம் கிடைத்த ஞானகுரு அவர். ‘உன்னை உனக்குள்ளேயே தேடுங்கள்’ என்பதுதான் அவரின் மார்க்கம். இதுவே இறைவனை அடையும் மார்க்கம், வழி என்றெல்லாம் நமக்கு வழிகாட்டுகிறார் பகவான் ரமணர்.
‘உங்களை உங்களுக்குள் தேடுங்கள் என்று பலமுறை சொல்லியிருக்கிறேன். ஆனால் எவரும் அப்படிச் செய்வதே இல்லை. தன்னைவிட உயர்ந்ததொரு சக்தியை உணரும்போது, அது தானாகவே வெளிப்படும். அதாவது அப்போதுதான் ‘தான்’ எனும் அகந்தை அடிபணிகிறது. சரணடைகிறது’ என்கீறார் பகவான் ரமண மகரிஷி.
’ஒருவர் உழைக்க வேண்டிய தேவை இருக்கிற வரைக்கும் உழைக்கிறார் அல்லவா. அதேபோல் தன்னை அறியும் முயற்சியையும் அவர் மேற்கொள்ள வேண்டும். ஒருபோதும் தன்னையறிவதில் இருந்து அவர் மீண்டு வந்துவிடக்கூடாது. அந்த முயற்சியை எப்போதும், எந்தத் தருணத்திலும் கைவிட்டுவிடக் கூடாது’ என்பது ரமண மகரிஷியின் அருள்வாக்கு!
மகான்கள் இப்படியாக நம்மை எப்போதும் தன் சொற்களாலும் செயல்களாலும் பார்வையாலும் வழிநடத்திக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களின் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நாளும் அவர்கள் வாழ்ந்த வாழ்வும் நமக்கே நமக்கானது. மரம் தரும் நிழல் போல் , குருவானவர் நமக்கெல்லாம் நிழலாக இருக்கிறார். மரம் தரும் கனி போல, நமக்கெல்லாம் கனியாகவும் வாழ்க்கையை இனிமையாக்கவுமாக இருக்கிறார்.
மரம் தரும் விதை போல, அந்த விதையில் இருந்து இன்னொரு மரம், மரத்தில் இருந்து இன்னொரு விதை என மனிதர்களை உய்விக்க, மகான்களை அடுத்தடுத்த காலகட்டங்களுக்கு வழங்கிக் கொண்டே இருக்கிறார்.
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே! ஆமாம். மகான்களின் சொற்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, அதன்படி செயல்படத் தொடங்கிவிட்டாலே, இங்கே நமக்கான பிரச்சினைகளை மிக எளிதாகக் கடந்துவிடலாம். அவர்களைச் சந்திப்பதும் அதாவது தரிசிப்பதும் இன்னும் பலத்தையும் பலன்களை நமக்கு வழங்கிவிடும். மகான்களின் தொடர்பு என்பது ஜென்மாந்திரக் கடன். இந்த ஜென்மத்துக்கான புண்ணியம். மூத்தோரின் புண்ணியக் கணக்கும் சேர்ந்து நம் சிரசில் வந்து உட்கார்ந்து கொண்டதால் கிடைக்கிற ஆகப் பெரும் பாக்கியம்.
அவ்வளவுதானா?
மகான்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தாலே அவர்களின் அருளைப் பெற்றுவிடலாம் என்கின்றன ஞானநூல்கள். அவர்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தாலே அவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கப் பெற்றுவிடலாம் என்கின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.
ஆக. மகான்கள் நினைப்பதும் அவர்களை தரிசிப்பதும், அவர்களின் சொற்களைக் கேட்டு நடப்பதும் சதாசர்வ காலமும் அவர்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதும் மிகப்பெரிய புண்ணியம் சேர்க்கவல்லவை. நமக்கு மட்டுமின்றி நம் சந்ததியினருக்கும் குருமார்களின் ஆசி, பரிபூரணமாகக் கிடைக்கும் என்கின்றன புராணங்களும் இதிகாசங்களும்!
ராம்சுரத் குன்வர், தன் வாழ்க்கைச் சரிதத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் குருமார்களைச் சந்தித்துக் கொண்டே இருந்தார். குருமார்களுடன், சம்பாஷணைகளில் ஈடுபட்டுக் கொண்டே இருந்தார். குருநாதர்களுக்கு அண்மையாக, பக்கத்திலேயே இருந்தார். குருநாதர் குறித்து பேசிக் கொண்டே இருந்தார். குருநாதரின் நினைப்பாகவே இருந்தார்.
ஆமாம்... குரு என்பவர் தேவை தெரிந்துவிட்டது. குரு என்பவர் அவசியம். புரிந்துவிட்டது. ஆனால் குரு என்பவர் யார்? அதுதான் தெரியவில்லை. அவரைத்தான் இன்னும் பார்க்கவில்லை. குரு எங்கே இருக்கிறார். தெரியவில்லை. குரு குறித்த சிந்தனையிலேயே இடைவிடாது இருந்தார் ராம்சுரத் குன்வர்.
சுவாமி விவேகானந்தரின் குரல் வழி உத்தரவும் சுவாமி அரவிந்தரின் நூல் வழியான வழிகாட்டுதலும் பிறகு அவருடன் இருந்த போது உபதேசித்த கருத்துகளும் அதன் பிறகு திருவண்ணாமலை எனும் புண்ணிய தேசமும் அங்கே பகவான் ரமண மகரிஷி எனும் மகானின் அருளுரைகளும் ‘நான் யார்’ என்கிற ஆத்மவிசாரமும் என குரு சிந்தனையிலேயே இருந்த ராம்சுரத் குன்வருக்கு, இறைவன் வழிகாட்டாமலா இருப்பார். குருவின் பேரருளே குருவிடமான உண்மையான பக்தியே, உண்மையான சிஷ்யனை... கொண்டு சேர்த்துவிடும்.
ஆனால் சேர்க்கும் நாள் எப்போது? தெரியாது. எங்கே சேருவது? தெரியவில்லை. சேர்த்துக் கொள்ளும் குரு மகான் யார்? புரிபடவில்லை. எங்கே இருக்கிறார்? அறிய முடியவில்லை.
தாய்ப்பசுவின் வாசம் பார்த்தே காணாமல் போன கன்றுக்குட்டி, தாயை அடைந்துவிடுமாம். அதேபோல், கன்றுக்குட்டியின் வாசனையை வைத்தே , கன்று இருக்கும் திசை நோக்கி குரல் எழுப்புமாம் தாய்ப்பசு!
அப்படியொரு வாசம், அதாவது நறுமணம் சூழ்ந்தது... நமக்குத் தெரியாது. ராம்சுரத் குன்வருக்குத்தான் தெரியும். அது... குருவின் வாசம்.
எங்கிருந்தோ ஓர் குரல்... ராம்சுரத் குன்வருக்கு மட்டுமே கேட்டிருக்கவேண்டும். அது... குருநாதரின் அழைப்பு.
வாரணாசிக்கு அருகில் உள்ள கிராமத்தில் இருந்து புதுச்சேரிக்கும் புதுச்சேரியில் இருந்து திருவண்ணாமலைக்கும் வந்தவர்... அந்த நறுமணத்தால், குருவின் நறுமணத்தால்... அந்த அழைப்பால்... குருநாதரின் அழைப்பால்... இந்த முறை பயணப்பட்டது கேரளாவுக்கு!
அங்கே... ராம்சுரத் குன்வர் அவரைக் கண்டார். அவரே தன் வழிகாட்டி என ராம்சுரத் குன்வர் புரிந்து உணர்ந்தாரா?
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜெயகுரு ராயா.
-ராம் ராம் ஜெய்ராம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT