Last Updated : 16 Nov, 2017 08:10 AM

 

Published : 16 Nov 2017 08:10 AM
Last Updated : 16 Nov 2017 08:10 AM

எனையாளும் சாயிநாதா! 1: பாபாவின் அருள் சொல்லும் அற்புதத் தொடர்

உலகில், நிம்மதியையும் சந்தோஷத்தையும் தேடித்தான் அனைவரும் அலைந்து கொண்டிருக்கிறோம். எது சந்தோஷம், நிம்மதி எங்கே என்பதில் நமக்கு நிறைய குழப்பங்கள் இருக்கின்றன. காசும் பணமும், வீடும் வாசலும் மிகப்பெரிய சந்தோஷமாக, பொருளாதார அடையாளமாக இங்கே பார்க்கப்படுகின்றன. மதிப்பும் மரியாதையும், கம்பீரமும் கவுரவமும் சமூகத்தின் அங்கீகாரமாகக் கவனிக்கப்படுகின்றன. இவற்றுக்கெல்லாம் நம்மை மீறியதொரு சக்தி, நம்மை இயக்கிக் கொண்டிருப்பதை நம்மால் புரிந்து கொள்ளமுடிகிறது. அந்தப் புரிதலின் அடுத்தக்கட்டமாக, தொழுவதும் வணங்குவதுமாக பக்தியில் ஈடுபடுகிறோம். பக்தி, நல்லொழுக்கத்தின் வேறொரு சொல்!

‘இந்த உலகில், எல்லா இடங்களிலும் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் தாயைப் படைத்தான்’ என்று கடவுள் குறித்து சொல்லப்பட்டிருக்கிறது. ஏனெனில் தாய் என்பவள் கருணையின் அம்சம். கருணை என்பது கடவுள் சக்தியின் பெருங்குணம். கடவுளுக்கு இணையாக தாய் போற்றப்படுகிறாள். அதனால்தான் அவள், கருணையும் கனிவும் கொண்டவளாகவே இருக்கிறாள்.

உங்கள் அம்மாவும் என்னுடைய அம்மாவும் அவருடைய அம்மாவும் இவர்களுடைய அம்மாக்களும் ஒவ்வொரு ஊரில் பிறந்தவர்கள். ஒவ்வொரு விதமாக வளர்ந்தவர்கள். ஆனால் அம்மா எனும் ஸ்தானத்துக்கு வந்ததும் உலகின் எல்லா அம்மாக்களும் ஒரே விதமாக, ஒரு குணத்துடன், அளவற்ற பேரன்புடன் திகழ்கிறார்கள். இது கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் கொடை.

இன்னொரு கொடையையும் வழங்கி அருளியிருக்கிறார் கடவுள். அந்தக் கொடையின் பெயர்... குரு. இந்த உலகில் குருவின்றி ஏதுமில்லை. குருவருள் இருந்தால்தான் திருவருளையே பெற முடியும் என்றார்கள், கடவுளைத் தேடி, பக்திகளைச் செலுத்தி, ஒருகட்டத்தில் கடவுளை அடைந்தவர்கள்.

குரு என்பவரே நமக்கான வழிகாட்டி. சொல்லப்போனால், இருளில் ஒவ்வொரு அடியாக கால்வைத்து பயந்து பயந்து நடக்கும் நம்மைப் போன்ற சாமான்யர்களுக்கு குருதான் இருளை அகற்றும் ஒளி. தட்டுத்தடுமாறாமல் வாழ்க்கையைப் பயணிப்பதற்கான, வாழ்வில் பயணம் செய்வதற்கான கைத்தடி. ‘நான் இருக்கேன். தைரியமா வா. பயப்படாம வா. நான் கூட இருக்கேன். கூடவே இருக்கேன். கூடவே இருப்பேன்’ என்று வார்த்தையாகச் சொல்லாமல், ஒவ்வொரு செயலிலும் உணர்த்திக் கொண்டே இருக்கிறார்கள் குரு மார்கள்!

குரு என்பவர் வழிகாட்டி. குரு என்பவர் சித்தபுருஷர்கள். குரு என்பவர் மகான்கள். குரு என்பவர் கடவுளுக்கு நெருக்கமானவர்கள். குரு என்பவர், பக்தர்களின் அருகிலேயே இருப்பவர்கள். குரு என்பவர் பக்தர்களுக்காகவே இருப்பவர்கள். குரு என்பவர், வழிக்குத் துணையாகவும் வழியாகவும் ஒளியாகவும் உணர்வாகவும் உயிராகவும் நம்முள், நமக்குள் எப்போதுமே இருப்பவர்கள். ஏனெனில் குரு என்பவர் கடவுளின் அம்சம்! நம்மையும் நம் வம்சத்தையும் இன்னும் இன்னுமாக, வாழ வைக்கும் அருளாளர். நம்முடைய பங்காளர். நமக்கெல்லாம் தந்தை. ஞானத்தந்தை.

 

ஞானத்தைக் கொடுப்பதற்குத்தான் அத்தனை வேதங்களும் உபநிஷத்துகளும் இங்கே சொல்லப்பட்டிருக்கின்றன. புராணங்களும் இதிகாசங்களும் இதை வலியுறுத்தியே, இதை உணர்த்துவதற்காகவே, இவற்றை வழங்குவதற்காகவே நமக்கு வழங்கப்பட்டிருக்கின்றன.

வெளிநாடு செல்லவேண்டும் என்றால் விசா வேண்டும். விசா எனும் அனுமதி கிடைப்பதற்கு பாஸ்போர்ட் மிக மிக அவசியம். அந்த பாஸ்போர்ட் வழங்குவதற்கு, எந்தத் தடையும் குழப்பமும் இடையூறுகளும் இல்லாமல் இருக்கவேண்டும். தடை, குழப்பம், இடையூறு என்பவைதான் முன் ஜென்மமாகவும் கர்ம வினையாகவும் ஒழுக்கமாகவும் பேரன்பாகவும் சொல்லப்பட்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் திருத்தி, நம்மை ஒரு ஒழுங்குக்குக் கொண்டு வருவதுதான் ஞானத்தின் முதல்படி! ஞானம்தான் பாஸ்போர்ட். பக்திக்கான, குருவருளுக்கான, இறை தேடலுக்கான முதல் அடி, முதல் படி ஞானம் என்று போதிக்கிறார்கள் சான்றோர்கள்! அந்த ஞானத்தை வழங்குபவர்கள்தான் மகான்கள்.

‘இந்த உலகில் எத்தனையோ மகான்கள். அவர்கள் அத்தனை பேருக்கும் என் நமஸ்காரங்கள்’ எனும் சொல் வெகு பிரசித்தம். மகான்கள் என்பவர்கள், கடவுளின் சாயல் கொண்டவர்கள். தாயின் அம்சத்தைக் கொண்டிருப்பவர்கள். கடவுளாகவும் தாயாகவும் இருந்து, நம்மிடம் எப்போதும் அன்பையும் கருணையையும் பிரசாதமாக வழங்குபவர்கள். நம் கவலைகளையும் துக்கங்களையும் போக்கி, நல்ல நல்ல நல்ல... அவை நல்ல நல்ல எனும் பொருளுக்கேற்ப, எல்லா சத்விஷயங்களையும் தந்தருள்பவர்கள்!

சாயிபாபா எனும் ஒப்பற்ற மகானை, மக்கள் அப்படித்தான் பார்க்கிறார்கள். பரவசப்படுகிறார்கள். என்னைப் பக்குவப்படுத்தியிருக்கிறார் என்று புளகாங்கிதம் கொள்கிறார்கள். ஒருகட்டத்தில், புளகாங்கிதமே கர்வத்தின் இன்னொரு சாயல் என்று உணர்ந்து, தெளிந்த நீரோடை போல், அமைதியாய், ஆனந்தமாய் இன்னும் இன்னுமாக சாயிபாபாவை பக்தி செலுத்தி, அனவரதமும் சாயி நாமத்திலேயே திளைக்கிறார்கள்.

சாயி என்றால், கடவுள் என்று பொருள். தலைவன் என்று அர்த்தம். எஜமானன் என்று சம்ஸ்கிருதம் சொல்கிறது. பகவான் ஷீர்டி சாயிபாபாவை, எஜமானனாகவும் தலைவனாகவும் கடவுளாகவும் கொண்டாடுகிறார்கள் பக்தர்கள்.

பாபா என்றால், அப்பா, தந்தை, தகப்பனார் என்று அர்த்தம். நமக்கெல்லாம் தாயாகவும் இருக்கிறார்; தந்தையாகவும் அரவணைக்கிறார்; கடவுளைப் போலவும் அருள்கிறார் சாயிபாபா.

பகவான் சாயிபாபா இதுகுறித்து பக்தர்களிடம் இப்படிச் சொன்னார்...

‘‘நிறையபேர் உங்களைப் போலவே ‘சாயிபாபா’ என்பதற்கு அர்த்தம் கேட்கிறார்கள். ‘சா’ என்றால் தெய்வீகம். ‘ய்’ என்பது தாயைச் சொல்வது. ‘பாபா’ என்றால் தந்தை என்று அர்த்தம். இப்போது இந்த மூன்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள். மூவரையும் சேர்த்துக் கொள்ளுங்கள். தெய்வீக குணங்கள் கொண்ட, தாயின் கருணைக் குணம் வாய்ந்த, தந்தையின் அரவணைப்புடன் இருப்பவன் என்று அர்த்தம்’’ என்று சொல்லி ஆசீர்வதித்தார்.

ஆம்... பகவான் சாயிபாபா, பக்தர்களுக்கெல்லாம் தாயானவர். தந்தையானவர். கடவுளாகவே திகழ்கிறார். கடவுளின் அம்சம் அவர்’’ என்று பூரிக்கிறார்கள் பக்தர்கள்.

‘எனையாளும் சாயிநாதா!’ எனும் இந்தத் தொடரிலும் சாயிபாபாவின் அருளாடல்களை, அவரின் எளிய போதனைகளை, அவர் அருளிச்செய்த பக்தர்களின் பரவச அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

‘சாயிராம்...’ என்று உச்சரித்ததும் அங்கே வந்து, சூட்சும ரூபமாக உட்கார்ந்து, நம்மை வழிநடத்துவார் சாயிபாபா என்கிறார்கள் பக்தர்கள்.

இதோ... இந்தத் தொடரிலும் அவர் வந்து அமர்ந்து கொள்ளட்டும். அமர்ந்து கொள்வார்.

‘சாயிராம்!

- அருள்வார்

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x