Published : 24 Jan 2018 05:11 PM
Last Updated : 24 Jan 2018 05:11 PM
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளது செட்டிகுளம். திருச்சியில் இருந்து சென்னை செல்லும் சாலையில், சமயபுரத்தைக் கடந்ததும் சிறுகனூர் வரும். இங்கிருந்து கிளைபிரிந்து செல்லும் சாலையில் 5 கி.மீ. தொலைவு பயணித்தால், திருப்பட்டூர் பிரம்மா கோயிலை அடையலாம். அதையடுத்து சிறிது தூரம் சென்றதும், செட்டிகுளம் நுழைவாயில் வளைவு வரும். அங்கிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவு பயணித்தால், செட்டிகுளம் ஊரையும் சிறிய மலையின் மீது உள்ள ஸ்ரீபாலதண்டாயுதபாணி கோயிலையும் அடையலாம்.
கையில் கரும்பு ஏந்தியபடி வயோதிகராக வந்து , மன்னர் பெருமக்களுக்கு சிவலிங்கத்தைக் காட்டி அருளினார் முருகப் பெருமான். அதேபோல், அகத்தியருக்கு வளையல் விற்கும் செட்டி வணிகர் போல் வந்து அருள் வழங்கினார் என்கிறது ஸ்தல புராணம்.
அதுமட்டுமா? மதுரையை எரித்த கண்ணகி, அதே உக்கிரத்துடன் வடமேற்கு நோக்கி வந்தாள். அப்போது அவளின் கடுமையான சினத்தை, அவளின் உக்கிரத்தைத் தணித்தாராம் முருகப்பெருமான். மேலும் அருகில் உள்ள தலத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும்படி வழிகாட்டி அருளினாராம். இதில் மனம் குளிர்ந்த கண்ணகி, செட்டிகுளத்துக்கு அருகில் உள்ள சிறுவாச்சூர் தலத்தில், ஸ்ரீமதுரகாளியாக இன்றும் அருள் வழங்கி வருகிறாள் என்று சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர் பக்தர்கள்!
மலையடிவாரத்தில் ஸ்ரீவிநாயகர் சந்நிதி உள்ளது. இவரை வணங்கி விட்டு, 240 படிகளைக் கடக்க, அழகிய மலையையும் அதில் குடியிருக்கும் தண்டாயுதபாணியையும் தரிசிக்கலாம். முன்பெல்லாம் வாகனங்கள் மலையேறி வருவதற்கு பாதைகள் இல்லாமல் இருந்தது. ஆனால் இப்போது வாகனங்கள் மலையேறுவதற்கு வசதியாக பாதையும் உண்டு. வழியில் இடும்பன் சந்நிதியும் இதையடுத்து மேற்குப் பார்த்த பெரிய விநாயகர் சந்நிதியும் உள்ளன. முருகப்பெருமானின் படைத் தளபதி வீரபாகு, இங்கே வீரபத்ர சுவாமி எனும் திருநாமத்துடன் தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கிறார்.
ஊருக்குள் நுழையும் போதே மலையும் மலையில் முருகன் கோயிலும் இருக்கிறது. ஊருக்குள் நுழைந்ததும் எதிரே, ஏழு நிலை கோபுரத்துடன் கம்பீரமாகக் காட்சி தருகிறது ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் கோயில்.
இந்த ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் தைப்பூசத் திருவிழாவும் தண்டாயுதபாணி கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழாவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. கொடியேற்றத்துடன் துவங்கி 14 நாள் விழாவாக பிரமாண்டமாகக் கொண்டாடுகின்றனர் பக்தர்கள்!
கேட்டதையெல்லாம் தந்தருள்வார் தண்டாயுதபாணி. நினைத்ததையெல்லாம் நிறைவேற்றி அருள்வார் கந்தக் கடவுள்! ஏராளமான பக்தர்கள், அலகு குத்தியும் காவடி எடுத்தும் பால் குடம் எடுத்து வந்தும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்துகின்றனர்.
மேலும் சேவல், கோழிகளை ஆலயத்துக்குத் தருபவர்களும் உண்டு; பிரார்த்தனை நிறைவேறியதும் முருகப் பெருமானுக்கு புது வஸ்திரம், சர்க்கரைப் பொங்கல் படையல் என அமர்க்களப்படுத்துகிறார்கள் பக்தர்கள்.
முருகன் அருளால், பிள்ளை பாக்கியம் பெற்றவர்கள், கரும்புத் தொட்டிலில் குழந்தைகளைத் தூக்கியபடி, பிராகார வலம் வந்து வணங்கிச் செல்கின்றனர். செட்டிகுளம் தண்டாயுதபாணியைப் பிரார்த்தித்து, நிலத்தில் விதைத்தால், அமோக விளைச்சல் நிச்சயம் என்கிறார்கள் ஊர்க்காரர்கள். சிக்கல்கள் அனைத்தையும் தீர்த்தருள்வான் முருகப்பெருமான் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்!
கரும்பு ஏந்தி காட்சி தரும் தண்டாயுதபாணி தெய்வத்தை ஒருமுறையேனும் வணங்குங்கள்; நம் வாழ்க்கையையே இனிக்கச் செய்வான் முருகன்! ருசிக்கச் செய்வான் தண்டாயுதபாணி!
-வேல்வேல்
தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT