Last Updated : 19 Feb, 2018 04:55 PM

 

Published : 19 Feb 2018 04:55 PM
Last Updated : 19 Feb 2018 04:55 PM

உருவ வழிபாடு... பரமஹம்ஸரின் பொன்மொழிகள்!

பகவான் ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் பிறந்தநாள் நாளைய தினம் (20.2.18). அவரின் அவதார தினத்தில், அவரின் பொன்மொழிகளைப் புரிந்து உணர்ந்து தெளிந்து வாழ்வோம்!

உருவ வழிபாடு!

வீடு கட்டும் போது, அந்த வீட்டைக் கட்டுவதற்கு சாரம் என்பது மிகவும் அவசியம். அந்த வீட்டைக் கட்டி முடித்த பிறகு, சாரத்திற்கு வேலையில்லை. அதை யாரும் தேடிக் கொண்டிருக்க மாட்டார்கள். அப்படித்தான்... ஆரம்ப காலத்தில் உருவமும் உருவ வழிபாடும் அவசியம். உருவ ஆராதனை அவசியமாகிறது. பிறகு, அதைக் கொண்டு கடவுளை உணர்ந்து கொள்ள, கடவுளை நெருங்க... பிறகு உருவமும் தேவையிருப்பதில்லை. உருவ வழிபாடும் தேவையற்றதாகி விடுகிறது.

ஒரே கடவுள்!

குயவன் வேலை செய்யுமிடத்தில், குடம், ஜாடி, தட்டு, சட்டி, பானை முதலான வெவ்வேறு உருவங்கள் கொண்ட பாத்திரங்கள் இருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் ஒரே களிமண்ணால்தான் செய்யப்பட்டவை. அதேபோல், கடவுள் என்பவர் ஒருவனே! ஆனால் அவன் வெவ்வேறு திருநாமங்கள் மூலமாக ஆராதிக்கப்படுகிறான். அவ்வளவே!

கடவுளின் ருசி!

தேனி, பூவுக்குள் இருக்கும் தேனை அடையாமல், இதழ்களுக்கு வெளியே இருக்கும் வரை ரீங்காரம் செய்தபடியே பூவைச் சுற்றி வரும். பூவுக்குள் நுழைந்துவிட்டால், சத்தமே இல்லாமல் தேனைக் குடிக்கிறது. அப்படித்தான்... சித்தாந்தங்கள் பற்றி ஒருவன் சண்டையிடும் வரையில் பக்தியை உணரமாட்டான். ஆனால் பக்தியை ருசி கண்ட மாத்திரத்தில் அமைதியாகிவிடுவான்.

பக்தனை பாதிக்காது!

பூனையானது, தன் குட்டிகளைப் பற்களால் கவ்விப் பிடிக்கும். அப்படிப் பிடிக்கும்போது, அதன் குட்டிகளுக்கு தீங்கு எதுவும் உண்டாவதில்லை. காயம் எதுவும் ஏற்படுவதில்லை. ஆனால் அந்தப் பூனை, எலி ஒன்றை அப்படிப் பிடித்தால், அந்த எலி உடனே இறந்து கூட விடுகிறது.

இப்படித்தான்... மாயையானது மற்றவர்களை வருத்துவதாக இருந்தாலும் பக்தனை ஒருபோதும் துன்புறுத்தாது.

பிரதிபலிப்பு!

சூரிய வெளிச்சம் எங்கும் சமமாகத்தான் விழுகிறது. ஆனால் தண்ணீரிலும் கண்ணாடியிலும் மெருகிட்ட உலோகத்திலும் மற்றும் இதுமாதிரியான பொருட்களில் அந்த வெளிச்சம் நன்றாகவே பிரதிபலிக்கிறது. அதேபோல, தெய்வீக ஒளியானது எல்லோரிடத்திலும் சமமாகவும் பாரபட்சமின்றியும் வந்தாலும் கூட, நல்லோரின் தூய மனமும் சாதுக்களின் இதயமும் அந்த ஒளியை நன்றாகவே பிரதிபலிக்கச் செய்கின்றன.

நாமும் இறைவனும்!

எண்ணெய் இல்லாமல் போனால் விளக்கு என்னாகும். எரியாது. அதேபோல, இறைவனில்லாமல் மனிதனால் வாழவே முடியாது. அதாவது பந்தப்பட்ட ஆத்மாவே மனிதன். மாயையெனும் சங்கிலியால் கட்டுப்படாத ஆத்மாவே இறைவன்! அவ்வளவுதான் வித்தியாசம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x